மதுரை: கடந்த காலங்களில் ஆசிரியர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டதில் நடைபெற்ற முறைகேடு குறித்து விசாரிக்க உத்தரவிட வேண்டும் என தாக்கல் செய்த மனு குறித்து பதில் அளித்த சென்னை உயர்நீதிமன்றம் அரசுக்கு உத்தரவிட்டு உள்ளது. இது முன்னாள் அதிமுக அமைச்சர் செங்கோட்டையனுக்கு கிலியை ஏற்படுத்தி உள்ளது.

கொரோனா தொற்று காரணமாக கடந்த ஆண்டு கல்வி நிலையங்கள் மூடப்பட்டிருந்த நிலையிலும், பணி மாற்றம் நடைபெற்றுள்ளது.  கடந்த அதிமுக ஆட்சியில் நடைபெற்ற இந்த முறைகேடு தொடர்பாக விசாரிக்க வேண்டும் என  மதுரையை சேர்ந்த ரமேஷ்,  உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

அதில், ஆசிரியர்கள் இடமாற்றத்தில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுகிறது. இதன் மூலம் பல கோடி ரூபாய் மோசடி நடந்துள்ளது.  கடந்த  2020-2021ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் ஆசிரியர்கள் பணியிட மாற்றம் சம்பந்தமான கலந்தாய்வு நடைபெறவில்லை. ஆனால், நிர்வாக அடிப்படையில் முறைகேடாக பல ஆசிரியர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். எனவே தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் நிர்வாக அடிப்படையில் பணியிட மாற்றம் செய்த ஆசிரியர்கள் குறித்து ஊழல் மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை மேற்கொள்ள வேண்டும் என கோரியிருந்தார்.

இந்த மனுமீதான விசாரணை   நீதிபதிகள் துரைசுவாமி, முரளிசங்கர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது,  அரசுத்தரப்பில், ‘‘2020-2021ம் ஆண்டு ஆசிரியர்கள் பணியிட மாற்றம் குறித்த கலந்தாய்வு நடைபெறவில்லை” என தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து நீதிபதிகள், வழக்கு குறித்து உள்துறைச் செயலாளர், பள்ளி கல்வித்துறைச் செயலாளர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை அக். 27ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

கொரோனா பொதுமுடக்கம் காரணமாக அரசு பள்ளிகள் மூடப்பட்டிருந்த காலக்கட்டமான 2020ம் ஆண்டு, பல ஆசிரியர்களுக்கு ரகசியமாக பணி இட மாற்றம் நடைபெற்றுள்ளது.  இட மாற்றத்துக்கு ஒவ்வொருவரிடமும் லட்சக்கணக்கில் பெற்று  அதிமுக ஆட்சியில்  பணி மாற்றம் வழங்கப்பட்டு உள்ளது.. இதில் பலகோடி பணம் விளையாடி இருப்பதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. இது தொடர்பான வழக்கில்தான் உயர்நீதிமன்றம், தற்போதைய திமுக அரசு பதில் தெரிவிக்க உத்தரவிட்டு உள்ளது.

இந்த விவகாரத்தில் உண்மையான விசாரணை நடத்தினால், அதிமுக ஆட்சியில் இருந்த கல்வி அமைச்சர் செங்கோட்டையன் உள்பட கல்வித்துறை அதிகாரிகள் பலர் சிக்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இது அதிமுகவினரிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஏற்கனவே பல வழக்குகளில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, முன்னாள் அமைச்சர்கள்  ஓபிஎஸ், தங்கமணி, வேலுமணி, செந்தில் பாலாஜி, ராஜேந்திர பாலாஜி, காமராஜ் என பலர்மீது ஊழல் புகார்கள் எழுந்துள்ள நிலையில், தற்போது செங்கோட்டையன் மீதும் புகார்கள் எழுந்துள்ளன. அடுத்தடுத்து சிக்கும் முன்னாள் அமைச்சர்களால், அதிமுகவில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.