தஞ்சாவூரில்: நாடாளுமன்ற தேர்தலையொட்டி, திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரசாரத்தை தொடங்கி உள்ள முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று அதிகாலையில்,  தஞ்சையில் வீதி, வீதியாக நடந்து சென்று வாக்கு சேகரித்தார். அப்போது பொதுமக்களுடன் செல்ஃபி எடுத்ததுடன், அங்கிருந்த டீக்கடையில் டீகுடித்தார்.

நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில்,  தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கான மக்களவை தேர்தல் ஏப்ரல் 19- ம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக அனைத்து அரசியல் கட்சிகளின் சார்பிலும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு அவர்கள் வேட்பு மனு தாக்கல் செய்யும் முனைப்பில் உள்ளனர்.  தொடர்ந்து, அரசியல் கட்சியினர் தேர்தல் பிசாரங்களை தொடங்கி உள்ளனர்.

இந்த நிலையில்  திமுக மற்றும் கூட்ட கட்சிகளை ஆதரித்து, திமுக சார்பில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் நேற்று  (மார்ச் 22ந்தேதி) திருச்சியில் தனது பிரச்சாரத்தை தொடங்கினார். திருச்சி மற்றும் பெரம்பலூர் தொகுதி திமுக கூட்டணி வேட்பாளர்களுக்காக அங்கு நடைபெற்ற பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் அவர் வாக்கு சேகரித்தார்.

அதனைத் தொடர்ந்து இரவு தஞ்சாவூர் சென்றவர் அங்கு ஓய்வெடுத்தார். தொடர்ந்து, இன்று அதிகாலையில் நடை பயணம் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.  இன்று  தஞ்சாவூர் மற்றும் நாகப்பட்டினம் தொகுதிகளைச் சேர்ந்த திமுக கூட்டணி வேட்பாளர்களுக்காக கொரடாச்சேரியில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்று உரையாற்றுகிறார்.

முன்னதாக, இன்று காலை நடைபயிற்சிக்கு சென்ற  மு.க.ஸ்டாலின், தஞ்சை காமராஜர் மார்க்கெட்டில் மக்களை சந்தித்து வாக்கு சேகரித்தார். அதேபோல அந்த பகுதியில் இருந்த  ஸ்டேடியத்துக்கு சென்றவர், விளையாடிக் கொண்டிருந்தவர்களிடமும் சென்று வாக்குசேகரித்தார். அவர்களிடம் இருந்து பந்தை வாங்கி தானும் விளையாடினார்.  அப்போது பொதுமக்கள் பலரும் அவருடன் ஆர்வமாக செல்ஃபி எடுத்துக் கொண்டனர்.  பின்னர்,  கீழராஜ வீதியில் சென்றபோது அங்குள்ள தேநீர் கடையில் அமர்ந்து தேநீர் குடித்தார்.

ஸ்டாலின் வாக்கு சேகரிப்பின்போது, அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தஞ்சாவூர் தொகுதி திமுக வேட்பாளர் முரசொலி, எம்.பி பழனிமாணிக்கம் உள்ளிட்ட பலரும் உடன் இருந்தனர்.