சென்னை: கொரோனா பொதுமுடக்கம் காரணமாக மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மாணவர்கள் கட்டணம் செலுத்தவில்லை என்பதால், அவர்களுக்கு மாற்று சான்றிதழ் (டிசிஸ்) வழங்க மறுப்பு தெரிவிக்க கூடாது என தனியார் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
கொரோனா ஊரடங்கு காரணமாக ஏராளமான பொதுமக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. இதனால் பலர் தனியார் பள்ளி, கல்லூரிகளில் சேர்த்த தங்களது குழந்தைகளுக்கு உரிய கல்விக்கட்டணத்தை செலுத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர். இதனால், அவர்கள் அங்கிருந்து டிசி வாங்கி, வேறு பள்ளி அல்லது அரசு பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆனால், அவர்களுக்கு கட்டணம் செலுத்தாதை கூறி, தனியார் கல்வி நிறுவனங்கள் டிசி கொடுக்க மறுத்து வருகிறது. இதனால் மாணாக்கர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உளளது.
இதை எதிர்த்து, ஐக்கிய பள்ளிகள் சங்கம் என்ற அமைப்பு சென்னை உய்ரநீதிமன்றத்தில், வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் ஆஜரான அரசு வழக்கறிஞர், மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்பட்டுவிடக்கூடாது என்பதற்காக மாற்று சான்றிதழ் இல்லாவிட்டாலும், பள்ளிகளில் சேர்க்க அனுமதி வழங்கப்பட்டது என தெரிவித்தனர்.
இதை பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், மாற்று சான்றிதழ் மிகவும் அவசியமான ஒன்று தான். அது இல்லாமல் பள்ளியில் சேர்ப்பது சாத்தியமில்லாத ஒன்று தான் என்பதை ஏற்றுக் கொள்கிறோம். அதே நேரம் மாற்று சான்றிதழ் இல்லை என்ற காரணத்திற்காக மட்டும் ஒரு மாணவனின் கல்வி பாதிக்கப்பட்டுவிடக்கூடாது. கட்டணம் செலுத்தாத மாணவர்களுக்கு டி.சி. தர மறுக்கக்கூடாது என்று பள்ளி மற்றும் தனியார் சுயநிதி பள்ளிகளுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், மாற்றுச்சான்றிதழ் வழங்க மறுக்கும் பள்ளிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும் அரசுக்கு ஆணையிட்டு உள்ளது.