மாநில அரசுகளின் வரி பங்கீட்டைக் குறைக்க வேண்டும் என்று பிரதமர் மோடி மேற்கொண்ட திரைமறைவு வேலைகளை நிதி ஆயோக் தலைவர் BVR.சுப்ரமணியம் அம்பலப்படுத்தியுள்ளார்.

14வது நிதிக் கமிஷன் மாநிலங்களுக்கு 42% வரிப்பகிர்வு செய்ய பரிந்துரை செய்ததை, 2014-ல் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மோடியின் பாஜக அரசு குறைக்க விரும்பியுள்ளது.

நிதி கமிஷன் பரிந்துரையை மத்திய அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும் அல்லது புதிய கமிஷன் அமைக்கப்படவேண்டும் என்பது அரசியலமைப்பு விதி. ஆனால் இந்த விவகாரத்தில் நிதி கமிஷனுடன் நடத்திய ரகசிய பேச்சு மூலம் இதனை 33% மாக குறைக்க விரும்பியுள்ளது பாஜக அரசு.

நரேந்திர மோடி பிரதமராக தேர்ந்தெடுக்கப்படுவதற்கு முன் குஜராத் மாநில முதல்வராக இருந்த போது மாநிலங்களுக்கான 32 சதவீத நிதி பங்கீடு போதாது என்றும் அதனை 50% மாக உயர்த்தி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்தார்.

இந்த நிலையில் 2014ம் ஆண்டு பிரதமராக பொறுப்பேற்ற பின் மாநில அரசுகளுக்கான வரி பங்கீட்டை குறைக்க வேண்டும் என்று தன்னுடன் ஆலோசனை நடத்தியதாகக் கூறிய நிதி ஆயோக் தலைமை செயல் அதிகாரி BVR.சுப்ரமணியம் இது குறித்து அந்த நிதி கமிஷன் தலைவர் ஒய்.வி. ரெட்டியுடன் தொடர்பு கொண்டு பேசியதாக தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் நிதிநிலை என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் கலந்து கொண்டு பேசிய BVR.சுப்ரமணியம் முதல்முறையாக இதுகுறித்து வெளிப்படையாக பேசியது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

வரி பங்கீட்டை குறைப்பது குறித்து ஒய்.வி. ரெட்டியை பிரதமருடன் ஆலோசனை நடத்த ஏற்பாடு செய்ததாகவும் அந்த ஆலோசனையில் தானும் இருந்ததாகவும் BVR.சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.

பிரதமரின் பரிந்துரையை நிதி கமிஷன் தலைவர் ஏற்றுக்கொள்ளாத நிலையில் சமூக நல திட்டங்கள் மூலம் மாநில அரசுகளுக்கு வழங்கும் நிதியைக் குறைத்து 48 மணி நேரத்தில் பட்ஜெட்டில் திருத்தம் செய்ததாகவும் கூறியுள்ளார்.

நலத் திட்டங்களின் பெயர்களை மாற்றி அவற்றை ஒன்றுக்கு நான்காக பிரித்து மாநில அரசுகளுக்கு மத்திய அரசு நிதியை வாரி வழங்குவது போல் ஒரு பிம்பத்தை உருவாக்கியதுடன் “மத்திய அரசு தரும் நிதியை வைத்துக் கொள்ள போதுமான கஜானா மாநில அரசுகளிடம் இல்லை” என்று வழக்கம் போல் தனது பேச்சு சாதுரியத்தால் நாடாளுமன்றத்தில் நாடகமாடினார் மோடி என்று தெரிவித்துள்ளார்.

நிதி ஆயோக் தலைமை செயல் அதிகாரி BVR.சுப்ரமணியத்தின் இந்த பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் அரசியல் சட்டத்துக்கு எதிராக பிரதமர் மோடி நடத்திய ரகசிய ஆலோசனைக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.