சிறப்புக்கட்டுரை: ஏழுமலை வெங்கடேசன்
கொரோனா ஆட்டிப்படைக்கும் இந்த நேரத்தில் நாடு முழுக்க ஏகப்பட்ட விமர்சனங்களோடு பெரும் விவாதத்திற்குள்ளாகியிருப்பது மதுக்கடைகள், ஒன்றரை மாதங்களுக்கு பிறகு திறக்கப்படும் விவகாரம்தான்..
பல்வேறு மாநிலங்களில் மதுக்கடைகள் திறக்கப்பட்டு அதற்கு முன்பாக குடிமக்கள் கிலோ மீட்டர் கணக்கில் வரிசையாக நிற்கும் காட்சிகள், ஊடகங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் செய்தியாகி அதுவே கேலியாகவும் பேசப்படுகின்றன. அதை தவறு என்று கூறி ஒதுக்கிவிட முடியாது..  அந்த காட்சிகள் அதற்கு தகுதியானவைதான்.

ஆனால் மதுக்கடைகள் திறக்கப்படுவதால் உலகமே ஒழுக்கங்கெட்டு அழிந்துவிடும் என்பதுபோல், நல்லவர்கள் சொன்னால்கூட பரவாயில்லை. சொல்பவர்களில் பெரும்பாலானோர், நல்லவர்கள் போல் நடிப்பவர்கள் என்பதுதான் இங்கு பிரச்சினையே..
கொரோனா சீசனிலிருந்தே ஆரம்பித்து, விஷயத்திற்கு உள்ளே போவோம். திறக்கப்பட்ட மதுக்கடைகள் முன்பு சமூக இடைவெளி இல்லாமல் குடிமகன்கள் அலைமோதுகிறார்கள் என்பதே பெரிய குற்றச்சாட்டாக உள்ளது.
ஒன்றரை மாதம் கழித்து திறப்பதால் கூட்டம் அலைமோதுகிறது. இதில் வியப்பொன்றும் இல்லை. தினமும் காய்கறிகள் கிடைத்துவந்த நிலையிலேயே நான்குநாள் முழு ஊரடங்கிற்காக, சில வாரங்களுக்கு தேவையான அளவில் வாங்கிவைத்துக்கொள்ள சென்னை கோயம்பேட்டில் பல்லாயிரம் பேர் ஒரு நாளில் திரளவில்லையா?

அதற்கு முன்பு சென்னையில் என்ன காய்கறிகளூக்கு அப்படியொரு பஞ்சமா இருந்தது? தினமும் போதுமான அளவில் கிடைத்தபடிதானே இருந்தது?
இறைச்சி கடைகளிலும் நாளையே உலகம் அழிவதுபோல் அப்படித்தானே ஒருவர் மேல் இடித்தபடி நின்று கொண்டு அலைமோதினார்கள்..?
மது கெட்ட பழக்கம் என்றால், ஒரே நேரத்தில் தேவைக்கு அதிகமாக பொருட்களை குவித்து வைக்கும் போக்கு மிகவும் நல்ல பழக்கமா? மற்றவர்களுக்கு கிடைக்காமல்போகச்செய்து விலை யேற்றத்திற்கு வழிவகுக்க செய்பவர்கள் என்ன, உலகம் போற்றவேண்டி யோக்கிய சிகாமணிகளா?
எதற்கெடுத்தாலும் ஒழுக்கம் ஒழுக்கம் என்று போதிக்க ஆரம்பித்துவிடுகிறார்கள். சைவம் சாப்பிடுவன், இறைச்சிக்காக அடித்துகொண்டு அலைபவனை என்ன சொல்வான்? இன்னொரு உயிரைக்கொன்று புலால் உண்பதே மானுட தர்மத்திற்கு எதிரானது, ஒழுங்கங்கெட்டது என்று பாடம் எடுக்கமாட்டானா? இந்த கேள்விக்கு என்ன பதில்?
என் உணவு, என் உரிமை என் பாரம்பரியம் என்பதுதானே? இதில் தலையிட உனகென்ன உரிமை இருக்கிறது. என்பதுதானே கேள்வி கேட்பவன் முகத்தில் திருப்பியடிக்க சரியான பதில்?
இப்போதைக்கு டாஸ்மாக் கடைகள் முன்பு பெரும் கூட்டம் திரளவேண்டும். அவை காட்சிகளாக வெளியாக வேண்டும்..ஆஹா நாங்கள் அள்றைக்கே சொன்னோம் கேட்டார்களா என தீர்க்க தரிசி வேடம் புனைய வேண்டும், அவ்வளவுதான்.
கோயம்பேடு முன்பு கூட்டம் குவிந்ததிற்கு, திடீரென லாக் டவுனுக்குள் லாக் டவுன் அறிவித்த எடப்பாடி அரசின் செயல்பாடுதான் காரணம். நாளைக்கு டாஸ்மாக் முன்பு கட்டுக்கடங்காத கூட்டம் சேரப்போகிறதென்றால் அதற்கும் இதே அரசாங்கம்தான் காரணமாக இருக்கப்போகிறது.
எல்லாவற்றையும்விட சூழல் மாறுகிறபோது என்ன நடக்கும் என்கிற நிதர்சனத்தை புரிந்துகொள்ள அறிவும் முன்யோசனையும் வேண்டும்.
நம்மூர் டாஸ்மாக் கடைகள் என்பது, ஒருவன் மட்டுமே பணத்தை ஒரு அரை அடி சதுர ஓட்டையில் செலுத்தி பாட்டில்களை வாங்கும் அமைப்பு கொண்டவை.. வாங்கிய பொருளுக்கு விலை விவரங்களை போட்டு ரசீதெல்லாம் தரவே மாட்டார்கள் என்பது வேறு விஷயம். கடைகள் இருப்பதும் மிக மிக குறுகலான இடங்களில்.. எனவே வழக்கமான நாட்களிலேயே கூட்டம் அலைமோதும்.
இப்போது ஒன்றரை மாதத்திற்கு பிறகு திறக்கப்போகிறார்கள் என்றால், பல மடங்கு கூட்டம் கூடலாம். இதெல்லாம் அதிகபட்சம் இரண்டு மூன்று நாளைக்குத்தான். முதல் நாள் மாதிரியே தினமும் குடிமகன்கள் நீண்ட வரிசைகளில் காத்திருப்பார்கள் என்று சொல்லமுடியாது. வருவாய் இன்றி பலரும் காய்ந்துபோயிருக்கிறார்கள் என்பதால் படிப்படியாக அமோகமான நிலைமை குறைந்து சராசரி நிலைமைக்கும் கீழாக போகவே அதிக வாய்ப்பு..

ஏனெனில், இந்த லாக்டவுன் காலத்தில் மதுவை மறந்துவிட்டவர்கள் கணிசமான பேர். அவர்களில் மொத்தபேரும் டாஸ்மாக் பக்கம் மறுபடியும், அதாவது குறைந்தபட்சம் ஊரடங்கு காலத்திற்குள் திரும்பவருவார்கள் என்பது நிச்சயமற்ற ஒன்று. உட்கார்ந்து அருந்த மதுபானகூடங்கள் திறக்கப்படாததால், குறிப்பிட்ட அளவு ஆட்கள் எதற்கு வம்பு என்று வராமல் ஒதுங்கிவிடுவார்கள். இப்போதைய சூழலில் வீட்டுக்குகொண்டுபோய் மட்டுமே அருந்த முடியும். வெளியே அனாவசியமாக நடமாடினாலே வெளுக்கும் போலீசிடம், பொதுவிடத்தில் பாட்டில் திறக்கப்போய் எதற்கு வீணாக உதை வாங்கவேண்டும் என்ற பயம் வராமல் போகாது.
பல மாநிலங்களில் முதல் நாள் மதுக்கடைகள் முன்பு கூட்டம் அலைமோதியதில் இருந்து தமிழக அரசு என்ன பாடத்தை கற்று மாற்று ஏற்பாடு செய்யவேண்டும்?
குறுகிய இடங்களில் உள்ள கடைகளில் மதுபானங்களை விற்காமல், பெரிய ஹால்களில் தற்காலிகமாக வினியோக மையங்களை அமைக்கலாம்.
ஒரு விற்பனையாளருக்கு பதிலாக, பல விற்பனையாளர்கள் நியமித்து நிறைய கவுண்ட்டர்களை ஒப்பன் செய்யலாம்.
ஒரே நேரத்தில் நிறைய வாடிக்கையாளர்கள் வாங்க வாய்ப்பு கிடைக்கும். இப்படி செய்தால் கூட்டம் வெகுவிரைவில் காலியாகிவிடும்.
வெறும் இரண்டே நாள் இப்படி தற்காலிக ஏற்பாட்டில் அரசு நிர்வாகம் இறங்கினால், டாஸ்மாக் ‘’குடி மக்கள் சுனாமி’’யை சுலபமாக சமாளித்துவிடலாம். மூன்றாவது நாளெல்லாம் சகஜநிலை கண்டிப்பாக திரும்பிவிடும்.
மாஸ் ஹீரோவின் படம் ரீலிசானால் முதல்நாள் இரவிலிருந்தே கூட்டம் அலைமோதும். மறுநாள் அப்படியே பாதிக்கூட்டம் அடங்கிவிடும். அதுபோலத்தான் இதுவும்.
ஆனாம் நம்முடைய அரசு, இந்த மாதிரியான அசாதாரணமான சூழலிலும் சந்துபொந்து கடைகளிலேயே விநியோகம் செய்து கூட்டத்தை கூட்டி வம்பை வளர்க்காமல் விடாது. ஏனெனில் அரசு அதிகாரிகளூக்கு புதிது புதிதாக சிந்திக்க தெரியாது.
பணமிதிப்பிழப்பின்போதும், புதிய கரண்சி வாங்க வந்த மக்களை. குறுகிய வாயில்கொண்ட வங்கிகள் முன்பு குவியவைத்து வரிசையில் நிறுத்தி சாகடித்தார்கள்.
பெரிய திருமண மண்டபங்களில், அரசாங்க அரங்குகளில் தற்காலிகமாக பல கவுண்ட்டர்களை கொண்ட மையங்களை அமைத்து வேகமாக புதிய கரண்சி விநியோகம் செய்திருந்தால், கூட்டத்தை சுலபமாக சமாளித்திருக்கலாம்.
எப்போது போனாலும் பணம் தாராளமாக கிடைக்கிறது என்ற ஒற்றை தகவல் பரவியிருந்தால், நாம் அப்புறம் சாவகாசமாய் போய் வாங்கிகொள்ளலாம் என்ற பதற்றமற்ற மனநிலை மக்களுக்கு தானாக வந்திருக்கும். கொந்தளிப்பான சூழலே உருவாகியிருக்காது.
சரி போகட்டும். அடுத்து. ஒழுக்க மேட்டருக்கு வருவோம் மது அருந்துதல் கடுமையான தீய பழக்கம்தான், பல குடும்பங்களை ஒழித்துகட்டியிருக்கின்றன என்பதும் உண்மைதான். சத்தியமாக மறுப்பதற்கே இல்லை. ஆனால் மது அருந்துபவன் மட்டுமே உலகில் நெம்பர் ஒன் அயோக்கியன், எல்லோரையும்விட கேடுகெட்டவன், கேவலமானவன் என்று சித்தரிப்பதுதான் இங்கு விந்தையான ஒன்று.
உலகில் தீய பழக்கங்கள் என்று பட்டியலிட்டால் அந்த பட்டியல் நீளமாக போகும், நடைமுறை உண்மை என்னவென்றால் ஒருவனிடம் உள்ள ஏதோ ஒரு பழக்கம் இன்னொருவனுக்கு தீமையாக தெரியும்.

குடித்துவிட்டு ஆனால் மனைவியோடு மட்டுமே குடும்பம் நடத்துகிறவனுக்கு, குடிக்காமல் ஆனால் வைப்பாட்டிகளை வைத்துக்கொண்டு வாழ்பவன் பெண் பித்தனாய் தெரிவான்.
ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களை கட்டியாள்பவன், அத்தனை பெண்களுக்கும் நல்ல வாழ்க்கையும் வசதியையும் கொடுத்திருப்பான். காலத்தை விஞ்சிய பாடல்களை தந்த கவியரசரும், காதல் மன்னனும் பலதார மன்னர்கள்தான். ஆனால் அவர்கள் தங்கள் அத்தனை பிள்ளைகளையும் நல்ல வகையில் வளர்த்து சமூகத்தில் கௌரவமான இடத்தை அடையும் அளவுக்கு செய்து விட்டுத்தான்போனார்கள்.
எந்த தீய பழக்கமும் இல்லாத எத்தனையோபேர், ஒற்றை குடும்பத்தை காப்பாற்றக்கூட சம்பாதிக்க துப்பில்லாமல் சோம்பேறியாகி மனைவியையும் பிள்ளைகளையும நடுத்தெருவில் விட்டிருக்கிறார்கள்.. அதை என்ன வென்று சொல்வது.?
மதுவெறியனாகவோ, பெண்பித்தனாகவோ இல்லாத எத்தனையோ பேர், மாதம் முழுவதும் உழைத்து வாங்கும் சம்பளத்தை ஒரேநாளில் சூதாட்டத்தில் இழந்துவிட்டு குடும்பத்தை கதறவிடுகிறார்களே அவர்களை எந்த வரிசையில் சேர்ப்பது?
மது, மாது. சூது என எந்த தீய பழக்கமும் இல்லாத ஒருவன் பல கோடி மக்களுக்கு சேர வேண்டியதை ஊழல் என்ற பெயரில் கொள்ளையடிக்கிறானே அந்த தீமையை எந்த அளவில் வைத்து பார்ப்பது.?
லஞ்சம் என்ற பெயரில் எத்தனையோ குடும்பங்களின் வாழ்வாதாரங்களையோ சூறையாடு கிறார்களே அவர்கள் தீய பழக்கத்தை என்னவென்று விவரிப்பது.
பார்ப்பற்கு அமைதியின் சொரூபமாக திகழும் எத்தனையோ பெண்கள், இல்லாததையும் பொல்லாததையும் பேசி அக்கம்பக்கத்து குடும்பங்களின் நிம்மதியை காலி செய்வதில்லையா? அதுவும் பயங்கரமான தீய பழக்கம்தானே?
மனித குலத்தில் ஆணா பெண்ணோ எல்லோரிடமும் நல்ல பழக்கங்களும் தீய பழக்கங்களும் கலந்தே இருக்கும்.. கொலை, கொள்ளை, திருட்டு, மது, கள்ளக்காதல், நம்பிக்கை மோசடி, சகல விஷயங்களிலும் பேராசை, இதெல்லாம் உலகம் இருக்கிறவரைக்கும் இருந்துகொண்டே இருக்கும். இவை இல்லாவிட்டால் உலகில் மனித குலத்தின் இயக்கமே அதோகதிதான்.
திரும்பிய திக்கெல்லாம் தீய பழக்கங்கள் வெவ்வேறு வடிவங்களில் நீக்கமற நிறைந்திருக்கும் இந்த உலகில் சில விஷயங்களை மட்டும் அளவுக்கு அதிகமாக பிடித்து தொங்கிக்கொண்டு இருக்கிறார்கள் என்றால் அவர்கள், அநியாயத்துக்கு நல்லவர்களாக நடிக்க முயற்சித்து கொண்டிருக்கிறார்கள்.
வாழ்க்கையில் இயல்பாக இருந்து அணுகத்தெரிந்தால் எது தீமை, அதை எந்த அளவில் எதிர்கொள்ளவேண்டும் என்பது நன்றாக புரியவரும். நல்லவர்களும் இயல்பாக இருப்பவர்களுக்கும் இது கைவந்த கலை.. ஆனால் நல்லவர்கள் மாதிரி நடிப்பவர்களுக்கும் இயல்பாக இருக்கத்ததெரியாமல் ஒவராக சவுண்ட் விடுபவர்பகளுக்கும் இந்த விஷயம் புரியவே புரியாது.
– ஏழுமலை வெங்கடேசன்