சென்னை: கொரோனா ஊரடங்கு காலத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்க தமிழகஅரசு அனுமதி வழங்கியுள்ளதற்கு  தமிழக எதிர்க்கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

கடந்த அதிமுக ஆட்சியின்போது, இதுபோல கொரோனா ஊரடங்கு நேரத்தில் டாஸ்மாக் கடைகளை திறந்ததற்கு எதிர்த்து, திமுக சார்பில் போராட்டம் அறிவிக்கப்பட்டது. திமுக தலைவரும், தற்போதைய முதல்வருமான மு.க.ஸ்டாலினும் கையில் பதாகையுடன் எதிர்ப்பு தெரிவித்தார். இந்த நிலையில் தற்போது திமுக அரசு டாஸ்மாக் கடைகளை திறக்க உத்தரவிட்டதற்கு கடும் கண்டனம் எழுந்துள்ளது.

பாக தலைவர் ராமதாஸ் பதிவிட்டுள்ள டிவிட்டில் ஊரடங்கு தளர்வுகளின் ஒரு கட்டமாக தமிழ்நாட்டில் மதுக்கடைகளை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்திருக்கிறது. மக்கள் நலனுக்கு எதிரான இந்த நடவடிக்கை கடுமையாக கண்டிக்கத்தக்கது.

தமிழ்நாட்டில் தினசரி கொரோனா வைரஸ் பரவல் குறையும் விகிதம் கடந்த 4 நாட்களாக படிப்படியாக சரிந்து வருகிறது. இத்தகைய சூழலில் மதுக்கடைகளை திறப்பது கொரோனா வைரஸ் பரவல் அதிகரிப்பதற்கே வழிவகுக்கும்.

அழகு நிலையங்கள் உள்ளிட்ட பிற நிறுவனங்கள் செயல்படுவதற்கும் அனுமதி வழங்கப்பட்டு இருப்பதால் அடுத்த சில நாட்களில் தமிழ்நாட்டில் தினசரி கொரோனா வைரஸ் பரவல் அதிகரிக்கும் ஆபத்து உள்ளதை தமிழக அரசு உணரவேண்டும்!

ஒருபுறம் கொரோனா நிவாரண நிதியாக ரூ.2000 வழங்கிவிட்டு, மறுபுறம் அதை பறிக்கும் நோக்குடன் மதுக்கடைகளை திறப்பது எந்த வகையில் நியாயம்? கடந்த ஆட்சியில் இத்தகைய போக்கை விமர்சித்த தி.மு.க. இப்போது அதே தவறை செய்யலாமா? ஆட்சி மாறியும் காட்சி மாறவில்லையே!

மதுக்கடைகள் திறக்கப்பட்டால் ஏழைக் குடும்பங்களுக்கு கிடைக்கும் மிகக் குறைந்த வருமானமும் பறிபோய்விடும். குடும்பங்களில் வறுமை அதிகரிக்கும்; வன்கொடுமை பெருகும். இவற்றைத் தடுக்க தமிழ்நாட்டில் மதுக்கடைகளை திறக்கக் கூடாது; மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும்!

அமமுக தலைவர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களின் விலைமதிப்பற்ற உயிர்களைக் காப்பாற்றுவதற்காக என்று கூறி மேலும் ஒரு வாரம் ஊரடங்கை நீட்டித்துள்ள முதல்வர், அதற்கு நேர்மாறாக நோய்த்தொற்று குறைந்துள்ள 27 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என அறிவித்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது. இதன் மூலம் முந்தைய ஆட்சியாளர்களைப் போலவே தற்போதைய அரசுக்கும் மக்களின் உயிரைப் பற்றித் துளியும் அக்கறை இல்லை என்பதும், ‘யார் எப்படிப் போனாலும் தங்கள் கஜானா நிரம்பினால் போதும்’ என்று நடந்துகொள்வதும் மிக மோசமான செயல்பாடாகும்.

ஒரு பக்கம் நிவாரணத் தொகை கொடுப்பது போல் கொடுத்து, அதனை டாஸ்மாக் வழியாக பிடுங்கிக் கொள்ளும் தந்திரத்தையே, இவர்களும் பின்பற்றுவது பெரும் அவலமாகும். எனவே, கரோனா நோய்த்தொற்றும் மையங்களாக மாறுவதற்கு வாய்ப்புள்ள டாஸ்மாக் கடைகளைத் திறக்கும் அறிவிப்பைத் தமிழக அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

தமிழக பாஜக தலைவர் எல்.முருகன்  வெளியிட்டுள்ள அறிக்கையில், எதிர்கட்சி தலைவராக இருந்த போது, தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என அப்போதைய அதிமுக அரசை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்த ஸ்டாலின், தற்போது டாஸ்மாக் கடைகளை திறக்க அனுமதி அளித்துள்ளதாக விமர்சித்துள்ளார். திமுக  ஆட்சிக்கு வருவதற்கு முன்பு மக்களிடம் சொல்வது ஒன்று, ஆட்சி வந்த பின்பு சொல்வது வேறொன்றாக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.