டெல்லி:
துக்கடைகளை தற்காலிகமாக முட உத்தரவிட கோரிய இரண்டு மனுக்களை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மேலும் வழக்கு தொடர்ந்த மனுதாரருக்கு 1 லட்சம் ருபாய் அபராதம் விதித்து நீதிபதிகள் உத்தரவு.
இதன் காரணமாக தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் உடனே திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கொரோனா ஊரடங்கால் மூடப்பட்டிருந்த மதுக்கடைகள் கடந்த வாரம் முதல் பல மாநிலங்களில் திறக்கப்பட்டு உள்ளது. தமிழகத்திலும் கடந்த 7ந்தேதி முதல் மதுக்கடைகள் திறக்கப்பட்டது.  இதை எதிர்த்து தாக்கல் செய்த மனு விசாரணையைத் தொடர்ந்து, கடந்த 9ந்தேதி மாலை டாஸ்மாக் மதுபானக்கடையை திறக்க சென்னை உயர்நீதி மன்றம் தடை விதித்தது.
இதை எதிர்த்து தமிழகஅரசு உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
இந்த மனுமீதானவிசாரணை நேற்று முதல் நடைபெற்று வருகிறது. விசாரணையின்போது, டாஸ்மாக் கடை திறக்க தடை விதிக்க முடியாது என்று தெரிவித்திருந்த நிலையில், இன்று 2வது நாளாக விசாரணை  நடைபெற்றது.
அப்போது தமிழகஅரசு சார்பில் வாதாடிய வழக்கறிஞர், மாநிலத்தின் வளர்ச்சிக்கு டாஸ்மாக் மூலம் கிடைக்கும் வருவாய் முக்கிய பங்கு வகிக்கிறது; டாஸ்மாக் பதிலாக வேறு துறைகள் மூலம் இந்த வருவாயை ஏற்படுத்த 4 முதல் 5 ஆண்டுகள் ஆகும் என்று கூறியது.
இதையடுத்து,  நாடு முழுவதும் மதுக்கடைகளை மூட உத்தரவிட கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனு தள்ளுபடி செய்யப்படுவதாக அறிவித்த உச்சநீதி மன்றம், சிஸ்டம் சார்ந்த விஷயம் என்பதால் நீதிமன்றம் தலையிட முடியாது என்று கூறியது.
அத்துடன் தமிழத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்க விதிக்கப்பட்ட சென்னை உயர்நீதி மன்றத்தின் உத்தரவை நிறுத்தி வைக்கவும் உத்தரவிட்டு உள்ளது.
உச்சநீதி மன்றம் தீர்ப்பின் காரணமாக தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்க பச்சைக் கொடி காட்டப்பட்டு உள்ளது.  கடைகள் உடனே  திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் வழக்கு தொடர்ந்த மனுதாரருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்தும் தீர்ப்பு கூறியது.