நெட்டிசன்
கே.எஸ்.இராதாகிருஷ்ணன் பதிவு…
அண்ணன் தஞ்சை ராமமூர்த்தி
அண்ணன் தஞ்சை அ.ராமமூர்த்தி காங்கிரஸ் கட்சியில் முக்கியமான புள்ளி. பெருந்தலைவர் காமராஜர், இந்திராகாந்தி, , சித்தார்த்த சங்கர் ரே, தேவராஜ் அர்ஸ் காங்கிரஸ் கேரள முன்னாள் முதல்வர் கருணாகரன், ரஜினி படேல், சந்திர ஜித் யாதவ், மத்தியப் பிரதேசத்தைச் சார்ந்த சுக்லா போன்ற காங்கிரஸ் தலைவரகளோடு நெருக்கமாக இருந்தார்
மூத்த வழக்கறிஞர் தஞ்சாவூர் வட்டாரத்தில் கிரிமினல் வழக்குகளை நடத்தக்கூடிய பிரபல வழக்கறிஞர். தமிழ்நாடு பார் கவுன்சில் ஒழுங்கு நடவடிக்கை குழு உறுப்பினராகவும் இருந்தார். தமிழ் இலக்கியத்திலும் ஆர்வம் உண்டு. காங்கிரஸ் கட்சியில் இருந்தாலும் சற்று பொதுவுடைமைச் சிந்தனைகளும் அவருக்கு அதிகம்.
அன்றைக்கு எழுபதுகளில் மோகன் குமாரமங்கலம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து காங்கிரஸில் சேர்வதற்கு இவரும் ஒரு காரணமாக இருந்தார். பிற்காலத்தில் மோகன் குமாரமங்கலம் மத்திய அமைச்சர் ஆனதும் உண்டு. புதுச்சேரி நாடாளுமன்றத் தொகுதி தேர்தலில் அவர் போட்டியிட்டபோது, அண்ணன் தஞ்சை ராமமூர்த்தி அங்கிருந்து பணியாற்றியதெல்லாம் எனக்கு இன்றைக்கும் நினைவுக்கு வருகிறது.
தஞ்சை சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தவர், அண்ணன் ராமமூர்த்தி. எனக்கும் அவருக்கும் அறிமுகம் 1972-ல். அன்றிலிருந்து என்னுடன் நெருக்கமும் பாசமும் கொண்டவர். எட்டயபுரம் பாரதி விழாவிற்கு வருவார். அருமையாக உரையாற்றுவார். அவரது உரையை கேட்பதற்கு அந்தக் காலகட்டங்களில் பலர் வந்தது உண்டு. எங்களுடைய சட்டமன்ற உறுப்பினராக இருந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி யின் தலைவர்களில் ஒருவரான சோ.அழகிரிசாமி உடன் மிக நெருக்கமாக இருப்பார். பல நாட்கள் அவரை எட்டயபுரத்திற்கு வரும் பொழுது உடன் இருந்து வழி அனுப்பும் வரை அவரை உபசரித்தது எல்லாம் உண்டு.
கரிசல்காட்டு கவிதைச்சோலை என்ற எனது விரிவுபடுத்தப்பட்ட நூல் விரைவில் வர இருக்கிறது. பாரதி குறித்தான அரிதான கட்டுரைகள், பாரதி நண்பர்கள் எழுதிய கருத்துக்களை தேடி எடுத்து அதை பதிப்பிக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றேன். அந்த நூலுக்காக அண்ணன் தஞ்சை ராமமூர்த்தி இடம் பாரதி குறித்த கட்டுரைகளை கேட்டபொழுது கடைசியாக பேசினேன். அதன் பிறகு பேச இயலவில்லை. கடந்த ஜுலையில் அவருடன் அலைபேசியில் பேசியதாக நினைவு. அப்போது, “அண்ணே…” என்று நான் அழைத்தேன். அவர் என்னிடம், “என்ன ராதா…எப்படி இருக்கீங்க…” என்று கேட்டார். அப்பொழுது அவர் குரல் மிகவும் தளா்வாக இருந்தது. நான் அவரிடம், “என்ன ஆயிற்று அண்ணே… உடல் நலன் சரியில்லையா” என்று கேட்டேன்.
அதற்கு அவர், “ஆமா கொஞ்சம் உடல் பாதிப்பு இருக்கிறது” என்றார். கட்டுரை வேண்டும் என நான் கேட்டதற்கு, “உடல் நிலை சரியில்லாததால், முடிந்தால் அனுப்பி வைக்கிறேன்”என்றார். இறுதியாக, “அரசியலில் இருக்கின்றீர்கள் கவனமாக செல்லுங்கள்” என்னிடம் என்றார்.
அதற்கு அவர், “நாம் அப்பொழுதெல்லாம் எவ்வளவோ உழைத்தோம்… எவ்வளவு பாடுபட்டோம்… எங்கள் காலத்திற்கு பின் உங்களைப் போன் றோர் எல்லாம் அரசியலில் ஓரளவு கவனமாக இருந்து, உங்களுக்கான சூழலை நிலையை உருவாக்கிக் கொள்ளுங்கள்” என்று ஒரு ஆலோசனை சொல்லும் பொழுது ரொம்ப நெகிழ்வாக இருந்தது. அதுதான் இறுதியாக அவருடன் பேசியது.
தஞ்சாவூர் செல்லும் பொழுது அவரை சந்திப்பது வாடிக்கை. கடந்த 20 வருடங்களில் இரண்டு-மூன்று முறை தஞ்சாவூர் சென்ற பொழுது சந்தித்தேன். சென்னையில் ஒரு முறை சந்தித்தேன்.
தஞ்சையாருக்கு நா.பார்த்தசாரதியுடனும் அகிலனுடனும் தொடர்புகள் உண்டு அவருக்கு. தொ.மு . சி.ரகுநாதன், திகசியுடன் இவருக்கு தொடர்பு உண்டு.பாரதியின் மீது அளப்பரிய பற்று கொண்டவர். அவருக்கு சோவியத் இலக்கியங்களிலு தமிழ் இலக்கியங்களிலும் அளப்பறிய பற்றுண்டு. ஜெயகாந்தனுடன் நட்பு பாராட்டுவார். ஜெயகாந்தன் மாதிரி மேடையில் கம்பீரமாக பேசுவார். மனதில் பட்டதைப் பேசுவார். பேசுவதை தவறாக நினைத்து விடக்கூடாது என்று இல்லாமல் உண்மையும் நேர்மையுமாக சொல்ல வேண்டியதை திருத்தமாக வும் அழுத்தமாகவும் சொல்லக்கூடியவர் தஞ்சை ராமமூர்த்தி.
என்னுடைய நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்றனர். இறுதியாக கடந்த 2000-ல் ஏவிஎம் ராஜேஸ்வரி திருமண மண்டபத்தில் “மனித உரிமை சட்டங்களும்… சில குறிப்புகளும்” என்ற என்னுடைய நூல், தமிழ் புத்தகாலயம் அகிலன் பதிப்பகம் வெளியிட்ட, வைகோ வெளியிட ஜஸ்டிஸ் கிருஷ்ணசாமி ரெட்டி பெற்றுக்கொண்டார்.
அந்த விழாவில் சென்னை அமெரிக்க தூதரகத்தின் துணைத் தூதர் அண்ணன் தஞ்சையார் இ.ரா.செழியன், எல்.கணேசன் மாலன், அனிதா பிரதாப் வழக்கறிஞர் சாந்தகுமாரி போன்ற பல முக்கிய புள்ளிகள் ஆளுமையில் கலந்து கொண்டார்கள். என்னுடைய நிகழ்ச்சியில் அண்ணன் தஞ்சை ராமமூர்த்தி இறதியாக கலந்து கொண்டது இந்தநிகழ்ச்சியில்தான். இருபது வருடங்கள் ஆகிவிட்டன.
எவ்வளவோ நினைவுகள் அவரோடு. கடந்த 1979 -80களில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் தேர்தல் மயிலாப்பூர் சாய்பாபா கல்யாண மண்டபத்தில் நடைபெற்றது. அந்தத் தேர்தலில் பழ.நெடுமாறன், கருப்பையா மூப்பனார் தஞ்சை ராமமூர்த்தி போட்டியிட்டார்கள். தஞ்சை ராமமூர்த்தி 6 வாக்குகளைப் பெற்றார். நெடுமாறன் மூப்பனாரிடம் 4 வாக்குகளில் தோல்வி அடைந்தார். தஞ்சை ராமமூர்த்தி அதில் போட்டியிட வில்லை என்றால் பழ நெடுமாறன் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக ஆகி இருப்பார். அதில் வெற்றி பெற்றிருப்பார். எங்களைப் போன்றோரின் அரசியல் வாழ்க்கையே வேறு மாதிரி இருந்திருக்கும். தமிழ்நாடு அரசியல் சூழ்நிலையும் வேறு மாறி இருந்திருக்கலாம். கடைசியாக நடைபெற்ற தேர்தல் அதுதான். தஞ்சை ராமமூர்த்தி அன்று போட்டியிட்டது தான், நெடுமாறனின் வெற்றியை பாதித்தது.
மிக குறைவான ஓட்டுகளில் வித்தியாசத்தில் கருப்பையா மூப்பனார் தலைவராக வெற்றி பெற்றார். நாள் முழுவதும் நடந்த அந்தத் தேர்தலில்,பணியாற்றிய நினைவுகள் எல்லாம் நினைவில் இருக்கின்றன. அன்றைக்கு தஞ்சை ராமமூர்த்தி, வாழப்பாடி ராமமூர்த்தி பலரோடு பணியாற்றியது, பேசியது எல்லாம் இன்றைக்கு நினைவுக்கு வருகின்றன.
தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி 1967 ல் ஆட்சியை இழந்து தோல்வி ஆனவுடன் தேசிய திருவிழா என நினைக்கின்றேன், தேனாம்பேட்டை காங்கிரஸ் மைதானத்தில் நடைபெற்றது. தஞ்சை ராமமூர்த்தி தலைமையில் வாழப்பாடி ராம்மூர்த்தி, தண்டயுதபானி மேற்பார்வையில் இளைஞர்களையும் மாணவர்களையும் ஒருங்கிணைத்து இந்த மாநாடை சிறப்பாக நடத்தினார். காமராஜர் பேசினார். சோ வந்திருந்தார் என நினைக்கின்றேன். கவிஞர் கண்ணதாசனும் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். ஜெயகாந்தன், சின்ன அண்ணாமலை, நெடுமாறன் பி. ஜி.கருத்திருமன்,டி.என்.அனந்தநாயகி,குமரி அனந்தன், அகிலன் போன்ற பல தலைவர்கள் அன்றைக்கு அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்கள்.
அப்போது ராமமூர்த்தி என்றால் 3,4 ராமமூர்த்திகள் இருக்கின்றார்கள். எப்படி அழைப்பது என்று குழப்பமாகி விட்டது. அதனால்தான் தஞ்சை ராமமூர்த்தி, வாழப்பாடி ராமமூர்த்தி, திண்டிவனம் ராமமூர்த்தி என்று அழைக்கப்பட்டனர். இப்படி எவ்வளவோ செய்திகள்.
பலமுறை அவருடன் டில்லிக்கு பயணித்து உள்ளேன். டில்லி ஜிடி ரயில் பயணத்தின் போது அவருக்கு புத்தகங்கள் படிக்கும் பழக்கம் உண்டு. டெல்லிக்கு சென்றால் ஜெயின் புக் ஸ்டாலில் அவசியம் புத்தகங்கள் வாங்குவார்.
இந்திரா காந்தி வீட்டில், அந்த அம்மையாரிடம் முறையிட்டது எல்லாம் மறக்க முடியுமா?. தமிழகத்தின் அரசியலுக்கான ஒரு நல்ல சூழலை உருவாக்கித் தாருங்கள் என்று அழுத்தம் திருத்தமாக அண்ணன் ராமமூர்த்தி சொல்வார். உடனிருந்து இதெல்லாம் பார்த்தேன். மறைந்த செல்லபாண்டியன் எங்கள் மாவட்டத்துக்காரர். தமிழ்நாடு சட்டப்பேரவைத் முன்னாள் தலைவர். அவர், “ராமமூர்த்தி நாங்கள் கூட இந்திரா காந்தியுடன் இவ்வளவு தைரியமாக பேச முடியாது நீங்கள் பேசி விட்டீர்கள், உங்களுக்கு இயல்பா கம்யூனிஸ்ட் கொள்கைகள், சித்தாந்தங்களோடு ரொம்ப நெருக்கம் உண்டு. அதனால தைரியமா பேசுறீங்க…” என்று செல்லப்பா சொன்னது இன்றைக்கும் காதில் ஒலிக்கின்றது.
டெல்லியில் எத்தனை நாள் அரசியல் போட்டி முகாமில் நெடுமாறன்- மூப்பனார் என்ற ஒரு அரசியல் பிரச்சினைகள், எழுபதுகளில் ஏற்பட்ட போது எத்தனை நாள் டெல்லியில் இந்தியா கேட் புல்வெளியில் மாலை நேரங்களில் அமர்ந்து பேசிய பேச்சுக்களை எல்லாம் மறக்க முடியுமா? மத்திய அமைச்சராக இருந்த ஆர்.வி. சுப்பிரமணியம், வாழப்பாடி ராம்மூர்த்தி,மதுரை ஆ. ரத்னம், தி.சு.கிள்ளிவளவன், பொறையார் ஜம்பு, எம்.கே.டி. சுப்பிரமணியம், ஆர்.எஸ்.பாண்டியன், தமிழகன், நாகர்கோவில் முத்துக்கருப்பன் என பலர் இன்றும் நினைவுக்கு வருகின்றனர்.
காங்கிரஸில் சோசலிசம் என்ற கொள்கையை, நேரு சொல்லிய கொள்கையை வலியுறுத்த இந்திரா காந்தி காலத்தில் ஒரு குழு இருந்தது. அந்தக் குழுவில் தமிழகத்தில் இவரும் கவிஞர் கண்ணதாசனும் உறுப்பினர்கள் சந்திரஜித் யாதவ், துளசிதாசப்பா எல்லாம் காங்கிரஸின் மூத்த தலைவர்கள் அந்த காங்கிரஸ் சோஷலிஸ்ட் குழுவில் இருந்தார்கள்.
மத்திய அரசின் ரயில்வே வாரியத்தில் இருக்கும் போது நானும் அவரும், பல்வேறு இடங்களுக்கு பயணிக்கும் பொழுது, பல செய்திகளை பேசிக்கொள்வோம். கேரளத்தின் கோழிக்கோடு, கல்கத்தா, பெங்களுரு, அலகாபாத் என்று அவருடன் பயணித்த காலங்கள் எல்லாம் உண்டு.
இலங்கை பிரச்சனை 1984-ல் சிக்கலில் இருந்த பொழுது இலங்கையில் அமிர்தலிங்கம் நடத்திய மாநாட்டில் தஞ்சை ராமமூர்த்தி இலங்கைக்குச் சென்று தமிழ்நாடு காமராஜர் காங்கிரஸ் சார்பில் நெடுமாறனுடைய பிரதிநிதியாக கலந்துகொண்டார். அன்றைக்கு ராமேஸ்வரத்திலிருந்து கப்பலில் சென்றார் என நினைவு.
கதர் ஜிப்பா அணிந்து கொள்வார். மேலே சால்வையை ஒரு பக்கமாக போட்டுக் கொள்வார்., சுருட்டு பிடிப்பதை அவ்வளவு பிரியமாக ரசித்து இருப்பார். அதைப்போல் ஃபில்டர் காஃபி அவருக்கு மிகவும் பிடிக்கும். திருவையாறில் அவருடைய நிலபுலங்கள் இருந்தன. வயல்கள் இருந்தன, தஞ்சை சீனிவாசபுரத்தில் அவருடைய வீடு இருந்தது. எளிமையாக, நேர்மையாக வாழ்ந்தார். சொல்ல வேண்டிய கருத்துக்களை அழுத்தம் திருத்தமாக பாரதியைப் போல் சொல்லுவார் இப்படி தஞ்சையாரை குறித்தான நினைவுகள்
தமிழகத்தில் அரசியிலில் முக்கியமான இடத்துக்கு வரவேண்டிய தஞ்சை ராமமூர்த்திக்கு அந்த வாய்ப்பு இல்லாமல் ஆகிவிட்டது. தஞ்சை ராமமூர்த்தி யாரென்றுவது இன்றைய காலகட்டத்தில் பலருக்கு அறிவதில்லை.
தஞ்சை ராமமூர்த்தி போன்றவர்களுக்கு ஏன் தமிழகம் வாய்ப்புகளை தர மறுத்தது என்று இன்றைக்கு வரை தெரியவில்லை. இப்படி பொது வாழ்வில் பல கள பணிகள் செய்தவர்கள் அடங்கிய ஒரு நீண்ட பட்டியலே இருக்கின்றது. என்ன செய்ய முடியும். அரசியல் வியாபாரம் ஆகிவிட்டது. உழைப்புக்கு பெற்றது ஒன்றுமில்லை என்ற நிலைதான்..
இப்படி எவ்வளவோ செய்திகள். அவருடன் நெருக்கமாக பழகிய நாட்கள். நான் அவரிடம், “தேர்தலில் போட்டியிடுகின்றேன்” என்று வாழ்த்துப் பெறுவேன். அதற்கு அவர், “வாழ்த்துக்கள், நீங்களாவது வெற்றி பெற்று வாருங்கள்” என்பார். அவரைப் பார்த்து பல நேரங்களில் நான் ஆறுதல் பட்டதுண்டு.
அவரின் இறுதிநாட்களில் புத்தர், விவேகாநந்தர், வள்ளலார் என்ற சிந்தனைகளில் தன்னை உட்படுத்திகொண்டார்.
அரசியலில், தஞ்சையார் ஒரு பாலபாடம்.
இன்றைக்கு தஞ்சை ராமமூர்த்தி காலமானார்.
அவருடைய குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.
#KSRpostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
12-11-2021.