சென்னை

நாளை முதல் சென்னை மெட்ரோ ரயில் சேவைகள் வழக்கமான அட்டவணையின்படி செயல்படும் என நிர்வாகம் அறிவித்துள்ளது.

மழை மற்றும் வெள்ள நேரத்தில் சென்னை மெட்ரோ ரயில் சேவை மக்களுக்கு மிகவும் உதவியாக இருந்தது.  இதையொட்டி நேற்று முன் தினம் மெட்ரோ ரயில் சேவை அதிக நேரம் நீட்டிக்கப்பட்டது. நேற்று கடும் காற்று காரணமாக மெட்ரோ ரயில் சேவை நேரம் குறைக்கப்பட்டது.  இந்நிலையில் இன்று மெட்ரோ ரயில் நிர்வாகம் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அந்த அறிவிப்பில்,

“நாளை சனிக்கிழமை (13/11/2021) முதல் வார நாட்களில் திங்கள்முதல் சனிக்கிழமை வரை காலை 5.30 மணி முதல் இரவு11 மணி வரை இயக்கப்படும் மெட்ரோ ரயில் சேவைகள் நெரிசல் நேரங்களில் காலை 8 மணி முதல் 11 மணி வரையிலும் மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் 5 நிமிட இடைவெளியில் இயக்கப்படும் மற்ற நேரங்களில் 10 நிமிட இடைவெளியில் இயக்கப்படும்.

மெட்ரோ ரயில் சேவைகள் அனைத்து ஞாயிற்றுக்கிழமை மற்றும் அரசு பொது விடுமுறை நாட்களில் காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை 10 நிமிட இடைவெளியில் இயக்கப்படும்.

கொரோனா வைரஸ் தொற்றை தடுக்க மற்றும் அனைத்து பயணிகளின் பாதுகாப்பான பயணத்துக்காகவும் மெட்ரோ ரயில் நிலையங்களில் நுழைய மற்றும் பயணிக்கச் சரியான முகக் கவசம் அணிவது கட்டாயம் ஆகும்.  மேலும் தனி மனித இடைவெளியை கடைப்பிடித்து பயணம் செய்து மெட்ரோ ரயில் நிர்வாகத்துக்கு ஒத்துழைப்பு நல்கக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்”

எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.