தஞ்சை:

காவிரி மேலாண்மை அமைக்காத மத்திய அரசை கண்டித்து தஞ்சையில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இன்றைய போராட்டத்தின் போது  தஞ்சையில் உள்ள  விமானப்படைத் தளத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதன் காரணமாக பரபரப்பு நிலவியது.

உச்சநீதி மன்றம் உத்தரவிட்டும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து தமிழகத்தில் விவசாயிகள், அரசியல் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இன்று தஞ்சையில் உள்ள விமானப்படை தளத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.  விமானப்படை தளத்தை முற்றுகையிட்டதால் தஞ்சை-புதுக்கோட்டை சாலை முடங்கியுள்ளது.

சுமார் ஒரு மணி நேரமாக விவசாயிகள் போராட்டம் நடைபெற்றதால், அந்த பகுதியில்  பேருந்துகள் இயக்கப்படவில்லை. தஞ்சை-திருச்சி சாலையிலும் ஏராளமான காவிரி உரிமை மீட்பு குழுவினர் திரண்டுள்ளதால் அப்பகுதியிலும் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

போராட்டக்காரர்கள் மற்றும் போலீசார் இடையே முதலில் வாக்குவாதம் ஏற்பட்டது. பின் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மேலும் அவர்களை வலுக்கட்டாயமாக போலீசார் கைது செய்தனர்.

மத்திய அரசு உடனடியாக காவரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்றும் கூறிய அவர்கள், போராட்டத்தை கைவிடப்போவது இல்லை என்றும் கூறினர்.

அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய விவசாய அமைப்பினர், விரைவில்  மத்திய அரசு அலுவலகத்தை முற்றுகையிட்டு பெரிய அளவிலான போராடடம்  நடத்தப்படும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.