சென்னை: நடப்பாண்டுக்கான டான்செட் (TANCET) தேர்வு முடிவுகள் இன்று காலை 10 மணிக்கு வெளியாகிறது.

தமிழகத்தில் அரசு, அரசு உதவி மற்றும் தனியார் கல்லூரிகளில் உள்ள முதுநிலை பொறியியல், மேலாண்மை படிப்புகளில் சேர்வதற்கு தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வில் (டான்செட்) தேர்ச்சி பெற வேண்டும். இத்தேர்வை அண்ணா பல்கலைக்கழகம் ஆண்டுதோறும் நடத்துகிறது. அதன்படி இந்த ஆண்டு MBA, MCA, M.E, M.Tech, M.Plan, M.Arch., படிப்புகளில் சேர TANCET நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டது. 2022 டான்செட் நுழைவுத் தேர்வு இந்த வருடம் மே மாதம் நடைபெற்றது. இந்த தேர்வினை இந்த ஆண்டு 36,710 பேர் எழுதினர்.  இத்தேர்வுகளில் கலந்து கொண்ட மாணவர்கள் மட்டுமே தமிழ்நாட்டிலுள்ள இக்கல்விகளுக்கான படிப்புகளைக் கொண்ட எந்தக் கல்லூரிகளிலும் சேர முடியும்.

இந்நிலையில் உயர்நிலை படிப்புக்கு எழுதிய TANCET தேர்வு முடிவுகள் இன்று https://tancet.annauniv.edu/tancet இணையதளத்தில் வெளியா கின்றது. தேர்வர்கள் தேர்வு முடிவுகளை tancet.annauniv.edu என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். தேர்வு மதிப்பெண் சான்றிதழ்களை நாளை (ஜூன் 10) முதல் ஜூன் 30-ம் தேதி வரை மேற்கண்ட இணைய தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யலாம் என்று டான்செட் தேர்வுப்பிரிவு செயலர் ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார்