நெல்லை: தாமிரபரணி, நம்பியாறு கருமேனியாறு இணைப்பு திட்டம் இந்த ஆண்டு இறுதிக்குள் செயல்படுத்தப்படும், கங்கைகொண்டானில் உணவு பூங்கா அமைக்கப்படும் என தமிழக முதல்வர் கூறினார்.
திருநெல்வேலியில் இன்று சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, அங்கு, மாவட்ட கலெக்டர், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,
நெல்லை மாவட்டம் கங்கைகொண்டானில் 77 கோடியே 94 லட்சம் செலவில் உணவு பூங்கா அமைக்கப்படும்.
சங்கரன்கோவில், ஆலங்குளத்தில் புதிதாக 2 கலை அறிவியல் கல்லூரி இந்த ஆண்டு துவக்கப்படும்.
புதிய கல்வி கொள்கையை மத்திய அரசு அறிவித்துள்ளது. இது சம்பந்தமாக குழு அமைக்கப்பட்டிருக்கிறது. அந்த குழு அறிக்கை அளித்த பின் இது சம்பந்தமாக நடவடிக்கை எடுக்கப்படும் .
தென் மாவட்டங்களில் அதிக தொழில்கள் துவங்க வேண்டும் என்பது தான் அரசின் நிலைப்பாடு. புதிய தொழில்கள் துவங்க அரசு தேவையான அனைத்து உதவிகளையும் செய்கிறது.
தொழில் செய்ய நிலத்தில் பாதி அளவுக்கு மானியம் தருகிறோம். தொழில் துவங்கவும் பல்வேறு உதவிகளை செய்கிறோம். சென்னையில் கூட இந்த சலுகை, மானியம் இல்லை. இங்கு அதிக தொழில் வரவேண்டும் என்பதற்காக தான் இந்த சலுகைகளை தருகிறோம்.
தொழில் துவங்க வருபவர்கள் தான் நிலத்தை தேர்வு செய்ய வேண்டும். முதலீடு செய்ய அரசு ஊக்கம் அளிக்கிறது. அனைத்து உதவிகளையும் செய்கிறது.
விவசாயிகளுக்கு 8 ஆயிரம் கோடி பயிர் இழப்பீட்டு தொகை பெற்று தந்துள்ளோம்.
சென்னை – கன்னியாகுமரி சாலை திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. நெல்லை புறவழிச்சாலை அமைக்க நில எடுப்புப்பணி நடைபெறுகிறது.
இந்த ஆண்டு இறுதிக்குள் தாமிரபரணி, நம்பியாறு கருமேனியாறு இணைப்பு திட்டம் செயல்படுத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.