திருநெல்வேலி:  தென் மாவட்டங்களில் புதிய தொழில் துவங்க மானியம், சிறப்பு சலுகைகள் வழங்கப்படுவதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து உள்ளார்.

கொரோனா தடுப்பு பணி குறித்து ஆய்வு செய்ய 2 நாள் சுற்றுப்பயணமாக தென்மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, தென் மாவட்டங்களில் தொழில் துவங்க  சிறப்பு சலுகைகளுடன் உடனே அனுமதி அளிக்கப்படுவதாக  கூறினார்.

இன்று நெல்லையில் திருநெல்வேலி, தென்காசி மாவட்ட கலெக்டர்கள், அதிகாரிகளுடன் ஆய்வு  நடத்திய முதல் பின்னர், சிறு குறு நடுத்தர தொழில் கூட்டமைப்பு நிர்வாகிகளுடன் முதலமைச்சர் கலந்துரையாடினார்.

இந்த கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது,

தொழிற்சாலைகள் அதிகமாக நிறுவவேண்டும் என்பதே அம்மா அரசின் முதன்மை கொள்கை. 2015ம் ஆண்டு அம்மா முதன்முதலாக உலக தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தி தொழில் முதலீடுகளை பெருமளவில் ஈர்த்தார். அம்மாவின் வழியில் அம்மாவின் அரசும் கடந்த 2019–ம் ஆண்டு உலக தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தியது. தொழில் முதலீடுகளை ஈர்த்தது.

கொரோனா காலத்திலும் ரூ.30 ஆயிரம் கோடிக்கு மேல் தொழில் முதலீடுகள் வந்துள்ளன. 41 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன. இதன் மூலம் 67 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். இது ஒரு மிகப்பெரிய சாதனை. சோதனையான காலக்கட்டத்திலும் அதிக முதலீடுகளை ஈர்த்த மாநிலம் தமிழகம். அதிக வேலைவாய்ப்பை உருவாக்கிய மாநிலமும் தமிழகம்.

இங்கு நீங்கள் பல்வேறு கோரிக்கைகளை வைத்தீர்கள். அதனை கவனத்தில் எடுத்துக்கொண்டு தேவையான நடவடிக்கைகளை அரசு எடுக்கும்.

தென் மாவட்டங்களில் அதிக தொழிற்சாலைகள் வரவேண்டும் என்று குறிப்பிட்டீர்கள். அரசின் விருப்பமும் இது தான். எனவே தான் அம்மா இதற்காக ஒரு சிறப்பு திட்டமே அறிவித்தார். அம்மாவின் அரசும் புதிதாக தொழில் துவங்க வந்தால் நிலத்தின் மதிப்பில் பாதி அளவு மானியமாக வழங்குகிறது. தொழிலுக்கு மானியம் தருகிறது. தென் மாவட்டங்களில் தொழில் செய்ய முன்வந்தால் பல்வேறு வகையில் அரசு தேவையான உதவிகளை செய்யும். தொழில் துவங்க தடையின்றி குறிப்பிட்ட காலத்துக்குள் அனுமதி வழங்கப்படும். எந்தவித சிரமமும் இன்றி அனுமதி பெறலாம்.

இங்கு பணிபுரிந்த வெளிமாநில தொழிலாளர்களை அரசு செலவில் அவர்களது மாநிலத்துக்கு அனுப்பி வைத்தோம். இப்போது அவர்கள் தமிழகத்துக்கு வந்து பணி செய்ய விருப்பம் தெரிவித்துள்ளனர். அப்படி அவர்கள் வர விரும்பினால் முகவரி கொடுத்தால் அரசு பரிசீலனை செய்து இ–பாஸ் வழங்கும். அப்படி அவர்கள் இங்கு வரும்போது நேரடியாக மருத்துவமனைக்கு செல்லப்பட்டு கொரோனா பரிசோதனை செய்யப்படும். அந்த பரிசோதனையில் அவருக்கு பாசிட்டிவ் வந்தால் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்கப்படும். ‘நெகட்டிவ்’ இருந்தால் அவர்கள் பணி செய்ய தடை இல்லை.

உங்கள் நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை வேண்டும் என்றால், அவரது விவரம், முகவரியுடன் கலெக்டரிடம் கொடுத்தால் அடையாள அட்டை வழங்கப்படும். மாதம் ஒரு முறை இந்த அடையாள அட்டையை புதுப்பிக்க வேண்டும்.

இ–பாஸ்

இ–பாஸ் வழங்குவது எளிமையாக்கப்பட்டுள்ளது. இ–பாஸ் வழங்குவதற்காக மாவட்டங்களில் மேலும் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் மேலும் ஒரு குழு அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அத்தியாவசிய பணிக்கு செல்வோருக்கு தடையின்றி இ–பாஸ் வழங்கப்படுகிறது.

மண்டல போக்குவரத்துக்கு ஏற்கனவே அனுமதி அளித்திருந்தோம். ஒரு பக்கத்தில் இருந்து இன்னொரு பக்கம் போகும்போது கொரோனாவை பரப்பி விட்டனர். எனவே இதனை தடுக்க வேண்டும். இது உயிர் பிரச்சினை. அனைவரும் கவனமாக இருக்க வேண்டும். கடும் நடவடிக்கை எடுத்தால் தான் கொரோனா தடுப்பில் இந்தியாவில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. ஆந்திரா, தெலுங்கானா, கர்னாடகா மாநிலங்களில் முதலில் அவர்கள் சரியான நடவடிக்கை எடுக்காததால் அதிக அளவில் பரவிவிட்டது.

நாம் தான் ஒரு நாளைக்கு 60 ஆயிரம் வரை கொரோனா பரிசோதனை செய்கிறோம். இந்தியாவிலேயே நாம் தான் அதிக அளவில் பரிசோதனை செய்து வருகிறோம். இதில் 5 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகிறது. படிப்படியாக இயல்பு நிலை வருகிறது.

அயல்நாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்கள் இங்கு பரப்பி விட்டார்கள். அப்படி வந்தவர்கள் சரியான தகவல்கள் தராததால் பரவல் ஏற்பட்டது. எனவே அரசு எடுக்கும் நடவடிக்கை களுக்கு அனைவரும் முழு ஒத்துழைப்பு தரவேண்டும்.

நேற்று நான் கொரோனா பரிசோதனை செய்து கொண்டேன். என்பை பார்க்க வந்தவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் 12 பேருக்கு கொரோனா பாதிப்பு இருந்தது உறுதி செய்யப்பட்டது.

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.