சென்னை:  5ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இரும்புத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியவர்கள் தமிழர்கள், “தமிழ் நிலப்பரப்பில் இருந்துதான் இரும்பின் காலம் தொடங்கியது”  என சென்னையில் நடைபெற்ற நூல் வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றிய முதலமைச்சர்  ஸ்டாலின்  பெருமிதத்துடன் தெரிவித்தார்.

இதைத்தான் இன்று முதலமைச்சர் ஸ்டாலின் பிரகடனப்படுத்தி உள்ளளார். மனித குலத்தின் முதல் மொழியே தமிழ்மொழி  என்பதும், உலகிலேயே தொன்மையான மொழி தமிழ் என்பதில் தொடங்கி மனித குலத்தின் ஒவ்வொரு நாகரீக வளர்ச்சியும் தமிழராலேயே நிகழ்ந்திருக்கிறது என்பதை பறைசாற்றும் வகையில் உலகளாவிய இரும்பின் காலம் தமிழர் நிலப்பரப்பில் இருந்துதான் தொடங்கியது என்பதையே முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்றைய பிரகடனம் வெளிப்படுத்தி உள்ளது.

சென்னையில் தொல்லியல் துறை சார்பில், தயாரிக்கப்பட்ட  ‘இரும்பின் தொன்மை’ நூலை வெளியிட்டு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட முதலமைச்சர்  ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது,  அண்மையில் கிடைக்கப்பெற்ற காலக் கணக்கீடுகள் இரும்பு அறிமுகமான காலத்தை கி.மு.4000-ம் ஆண்டின் முற்பகுதிக்குக் கொண்டு சென்றிருக்கிறது. தென்னிந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் 5,300 ஆண்டுகளுக்கு முன்பே இரும்பு அறிமுகமாயிருக்கும் என்று உறுதியாக கூறலாம். இதை ஆய்வு முடிவுகளாகவே நான் அறிவிக்கிறேன்” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்ற நூல் வெளியிட்டு விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார். தொல்லியல் துறை சார்பில், தயாரிக்கப்பட்ட ‘இரும்பின் தொன்மை’ நூலை முதல்வர் வெளியிட்டார். பின்னர் நிகழ்ச்சியில் பேசியதாவது:

தமிழர்களுடைய தொன்மையை உலகுக்கு கூறும் மாபெரும் ஒரு ஆய்வு பிரகடனத்தை இப்போது நான் அறிவிக்கப் போகிறேன். இங்கு கூடியிருப்பவர்களும், நேரலையில் இதைப் பார்த்துக் கொண்டிருப்பவர்களும் கவனமாக கேட்கவும். தமிழ் நிலப்பரப்பில் இருந்துதான் இரும்பின் காலம் தொடங்கியது. இந்தியாவுக்கு மட்டுமல்ல, உலகுக்கே திரும்பவும் கூறுகிறேன், தமிழ் நிலப்பரப்பில் இருந்துதான் இரும்பின் காலம் தொடங்கியது என்ற மாபெரும் ஆய்வுப் பிரகடனத்தை இந்நிகழ்ச்சியின் வாயிலாக அறிவிக்கிறேன்.

5,300 ஆண்டுகளுக்கு முன்பே, உருக்கு இரும்பு தொழில்நுட்பம் தமிழ் நிலத்தில் அறிமுகமாகிவிட்டது. இப்போது தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகள் மூலம், அண்மையில் கிடைக்கப்பெற்ற காலக் கணக்கீடுகள் இரும்பு அறிமுகமான காலத்தை கி.மு.4000ம் ஆண்டின் முற்பகுதிக்குக் கொண்டு சென்றிருக்கிறது. தென்னிந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் 5,300 ஆண்டுகளுக்கு முன்பே இரும்பு அறிமுகமாயிருக்கும் என்று உறுதியாக கூறலாம். இதை ஆய்வு முடிவுகளாகவே நான் அறிவிக்கிறேன்.

தமிழக அரசால் தொல்லியல் துறையில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகளில் சேகரிக்கப்பட்ட மாதிரிகள், உலகத்தின் தலைசிறந்த ஆய்வகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. புனேவில் உள்ள பீர்பால் சகானி தொல் அறிவியல் நிறுவனம், அகமதாபாத்தில் இருக்கும் இயற்பியல் ஆராய்ச்சி ஆய்வகம், ஆகிய தேசிய அளவிலான புகழ்பெற்ற ஆய்வகங்களுக்கும், பன்னாட்டு அளவில் உயரிய நிறுவனமான அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தில் இருக்கும் பீட்டா ஆய்வகத்துக்கும் மாதிரிகள் பகுப்பாய்வுக்கு அனுப்பிவைக்கப்பட்டன.

தேசிய நிறுவனங்களில் ஓஎஸ்எல் பகுப்பாய்வுக்கும், பீட்டா ஆய்வகத்தில் கதிரியக்க கால பகுப்பாய்வுக்கும் ஒரே தாழியில் இருந்து மாதிரிகளை அனுப்பி வைத்தோம். இப்படியாக மூன்று நிறுவனங்களிடமிருந்தும் ஒரே மாதிரியான பகுப்பாய்வு முடிவுகள் பெறப்பட்டுள்ளது. தமிழக அரசின் தொல்லியல் துறை பல்வேறு ஆய்வு நிறுவனங்களுக்கு மாதிரிகளை அனுப்பி பெறப்பட்ட முடிவுகளை கூர்ந்து ஒப்பாய்வு செய்ததில் ஒரே மாதிரியான முடிவுகள் கிடைத்துள்ளது.

இப்போது கிடைத்திருக்கும் கதிரியக்க காலக் கணக்கீடு மற்றும் ஓஎஸ்எல் பகுப்பாய்வு காலக் கணக்கீடுகளின் அடிப்படையில் கி.மு.3345-லேயே தென்னிந்தியாவில் இரும்பு அறிமுகமாகிவிட்டது என்பது தெரியவருகிறது. அதற்கான ஆய்வுகள் முடிவுகள் வரப்பெற்றுள்ளது.

இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

இரும்பு குறித்து தவெளியிடப்பட்டுள்ள தகவலில்,  மனித குலத்தின் வளர்ச்சி பல்வேறு படிநிலைகளாகப் பிரிக்கப்படுகிறது. பழைய கற்காலம், புதிய கற்காலம், செம்பு கற்காலம், இரும்பு காலம் இப்படித்தான் மனித குல வளர்ச்சி பிரிக்கப்படுகின்றன. அதாவது கற்களையே வாழ்வியல் பொருளாகப் பயன்படுத்திய மனிதர்கள் பின்னர் களி மண்ணை பயன்படுத்தத் தொடங்கினர்; இதனைத் தொடர்ந்து செம்பு- தாமிரத்தை பயன்படுத்த தொடங்கினர்; ஆனால் செம்பு என்பது அவ்வளவு உறுதியானது அல்ல என்பதால் அடுத்ததாக இரும்பைப் பயன்படுத்தத் தொடங்கினர்.

இப்படித்தான் மனிதகுலத்தின் நாகரீக வளர்ச்சி பகுப்பாய்வு செய்யப்படுகிறது. அதாவது பழங்கால மனிதர்கள், நிலங்களை செழுமைப்படுத்தி வேளாண் தொழிலைத் தொடங்குவதற்கு தொடக்கத்தில் செம்பிலான பொருட்களை பயன்படுத்தி வந்தனர்; ஆனால் இது பெரிய அளவு உதவி செய்யவில்லை.

இதனால் செம்புக்கு அடுத்ததாக ஒரு உலோகத்தை அறியவேண்டிய உந்துதல் மனித குலத்துக்கு தேவையாக இருந்தது  இப்படி செம்புக்கு அடுத்ததாக இரும்பை பிரித்து, உருக்கி அதனில் இருந்து உலோகங்களை தயாரிக்கும் தொழில்நுட்பத்துக்கு மனிதகுலத்தின் வளர்ச்சி நகர்ந்தது. அப்படியான மனித குலத்தின் முதல் இரும்புப் பயன்பாடு என்பது நம்முடைய தமிழர் நிலத்தில் இருந்தது; அதுவும் 4,500 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்தது என்பதாக இதுவரையிலான அறிவியல் ஆய்வுகள் தெரிவித்திருந்தன.

கிருஷ்ணகிரி மாவட்டம் மயிலாடும்பாறை ஈமச்சின்னங்கள் உள்ளிட்ட இடங்களில் அகழாய்வு நடத்தப்பட்டபோதுதான் பல இரும்புப் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. இந்த இரும்புப் பொருட்களின் காலத்தை அறிவதற்ற்காக கரிம (கார்பன்) பகுப்பாய்வு முறைக்காக அமெரிக்காவின் ப்ளோரிடா மாகாணத்தின் பீட்டா ஆய்வுக் கூட்டத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அந்த ஆய்வுகள்தான் முதன் முதலில் தமிழ்நாட்டின் இரும்பின் பயன்பாடு 4,500 ஆண்டுகளுக்கு முன்னரே தொடங்கிவிட்டது என்பதை உறுதி செய்தது.

இதனை 2022-ம் ஆண்டு தமிழக சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.  இந்தியாவின் பிற பகுதிகளில் உத்தாரணமாக ராஜஸ்தான், கர்நாடகா பகுதிகளில் இரும்பின் பயன்பாடு என்பது 3,000 ஆண்டுகளுக்கு முந்தையது மட்டும் என்பதுதான் அறிவியல் ஆய்வுகளாக இருந்தும் வந்தன. தற்போதைய புதிய கரிம பகுப்பாய்வுகளின் அடிப்படையில் 5,300 ஆண்டுகளுக்கு முன்னரே இரும்பை பிரித்தெடுக்கும்- இரும்பை உருக்கும் அறிவை தமிழர் பெற்றிருந்தனர்.