சென்னை: வாழ்வாதாரத்திற்காக உள்நாட்டிற்குள்ளேயே புலம்பெயர்ந்து செல்லும் தமிழர்கள், வட இந்தியாவைவிட தென்னிந்தியாவையே அதிகம் விரும்புகிறார்கள் என்று 2011ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி தெரியவந்துள்ளது.
தமிழர்களின் முதல் தேர்வாக கர்நாடகம் உள்ளது. அடுத்ததாக கேரளம் மற்றும் ஆந்திரப் பிரதேசம் போன்ற மாநிலங்கள் உள்ளன. இதற்கடுத்து மூன்றாவது இடத்தில் மராட்டியம் உள்ளது. மற்றபடி, தேசிய தலைநகரம் டெல்லி, ஹரியானா மற்றும் உத்திரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் புலம்பெயர்வோரின் எண்ணிக்கை மிகக் குறைவு.
நெருங்கிய கலாச்சார மற்றும் மொழி தொடர்புகள், தகவல் தொழில்நுட்பம் போன்ற துறைகளின் வளர்ச்சி உள்ளிட்டவை தென்மாநிலங்கள் தமிழர்களால் விரும்பப்படுவதற்கு முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது.
புள்ளி விபரங்களின்படி, கர்நாடகாவிற்கு 7.36 லட்சம் தமிழர்கள் குடிபெயர்ந்துள்ளனர். அவர்களில் 4.13 லட்சம் பேர் தமிழகத்தின் நகர்ப்புற பகுதிகளைச் சேர்ந்தவர்கள். 2 லட்சத்திற்கும் சற்று அதிகமானவர்கள் வேலைவாய்ப்பிற்காக குடிபெயர்ந்துள்ளனர் மற்றும் சுமார் 1.6 லட்சம் பேர் குடும்பத்துடன் இடம்மாறியுள்ளனர்.
கேரளாவிற்கு குடிபெயர்ந்த 3.11 லட்சம் பேரில், 50%க்கும் மேற்பட்டோர் வேலைக்காக குடிபெயர்ந்துள்ளனர். ஆந்திராவிற்கு குடிபெயர்ந்த தமிழர்களின் எண்ணிக்கை 2.66 லட்சம் பேர். தமிழக இளைஞர்கள் தங்களின் சொந்த ஊருக்கு அருகிலேயே பணி செய்ய விரும்புவதும் இதற்கு ஒரு காரணம் என்றும் கூறப்படுகிறது.