சென்னை: இந்தியாவில் அதிகம்பேர் தற்கொலை செய்யும் மாநிலங்களில் தமிழ்நாடு 2வது இடத்தில் உள்ளது என தேசிய குற்ற ஆவணம் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

தேர்வாகட்டும், காதல் தோல்வியாகட்டும், வியாபாரத்தில் நஷ்டமாகாட்டும், எதற்கெடுத்தாலும் தற்கொலை  முடிவை நாடும் கலாச்சாரம் தமிழகத்தில் பரவி வருகிறது. இது தமிழக மக்கள் தன்னம்பிக்கையற்றவர்களாக மாறி வருகின்றனரோ என்ற சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளன.

மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள தேசிய குற்ற ஆவணப் பிரிவு,2020ம் ஆண்டுக்கான ஆண்டறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி, நாடு முழுவதும் கடந்த ஆண்டு (2020) நாடு முழுவதும் 1 லட்சத்து 53 ஆயிரத்து 52 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். அதாவது  சராசரியாக நாள் ஒன்றுக்கு 418 தற்கொலைகள் நாடு முழுவதும் நடைபெற்றுள்ளன. குறிப்பிட்ட 5 மாநிலங்களிலேயே மொத்த தற்கொலையில் 50.1 சதவீதம் நிகழ்ந்துள்ளது.

கடந்த 2019ஆம் ஆண்டில் 1 லட்சத்து 39 ஆயிரத்து 123 பேர் தற்கொலை செய்து கொண்ட நிலையில், அதனுடன் ஒப்பிடுகையில் 2020ஆம் ஆண்டில் அதிகரித்துள்ளது.

2020ம் ஆண்டில்  அதிக தற்கொலை நடைபெற்ற மாநிலமாக மகாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது. இங்கு கடந்த ஆண்டு  19 ஆயிரத்து 909 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

2வது இடத்தில் தமிழகம் இடம்பெற்றுள்ளது. இங்கு 16 ஆயிரத்து 883 தற்கொலை பேர் தற்கொலை செய்துக்கொண்டதாக தெரிவிக்கப் பட்டு உள்ளது. மொத்த தற்கொலையில் தமிழ்நாட்டின் பங்கு 11 சதவீதம் ஆகும்.

3வது இடத்தில் மத்தியபிரதேசம் மாநிலமும், 4வது இடத்தில்  மேற்கு வங்காளமும், 5வது இடத்தில் கர்நாடகா மாநிலமும் உள்ளது.

இந்த  5 மாநிலங்களிலும் சேர்த்து, மொத்த தற்கொலையில் 50.1 சதவீத தற்கொலைகள் நிகழ்ந்துள்ளன என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

நாட்டின் மக்கள்தொகையில் 16.9 சதவீத மக்களை கொண்டுள்ள உத்தரபிரதேசம், தற்கொலையில் 3.1 சதவீதம் என்ற குறைந்த எண்ணிக்கையிலேயே இருக்கிறது.

யூனியன் பிரதேசங்களில் டெல்லியில் 3 ஆயிரத்து 142 பேரும், அதற்கு அடுத்தபடியாக புதுச்சேரியில் 408 பேரும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

தற்கொலை செய்து கொண்டவர்களில் 70.9 சதவீதம் பேர் ஆண்கள், 29.1 சதவீதம் பேர் பெண்கள்.

குடும்ப பிரச்சினைகளால் 33.6 சதவீத தற்கொலைகள் நிகழ்ந்துள்ளன.  திருமணம் தொடர்பான பிரச்சினைகள், நோய், ஆகியவையும் முக்கிய காரணங்களாக உள்ளன.

இவ்வாறு தேசிய குற்ற ஆவண பிரிவு வெளியிட்டுள்ள  ஆண்டறிக்கையில் தெரிவித்துள்ளது.