சென்னை :
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசுக்கு எதிராக நாளை நடைபெற உள்ள முழு அடைப்பில் வணிகர் சங்க பேரவை மற்றும் வணிகர் சங்க பேரமைப்பு ஆகிய இரண்டு சங்கங்களும் பங்கேற்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் கடந்த 4 நாட்களாக போராட்டம் நடைபெற்று வருகிறது. இதனால் தமிழகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
காவிரி விவகாரம் தொடர்பாக திமுக கூட்டிய அனைத்துக்கட்சி கூட்டத்தில் எடுக்கப்பட்டமுடிவின்படி, 5ந்தேதி (நாளை) மாநிலம் தழுவிய முழு வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு (பந்த்) திமுக அழைப்பு விடுத்து இருந்தது.
இந்த முழு அடைப்பு போராட்டத்துக்கு, காங்கிரஸ் மதிமுக, விசிக,, பாமக, கொமதேக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட பல அரசியல் கட்சிகள் ஆதரவு அளித்துள்ளன.
மேலும், அரசு போக்குவரத்து தொழிற்சங்கம் உள்பட பல தொழிற்சங்கங்களும் பங்கேற்பதாக அறிவித்துள்ளன.
இந்நிலையில், கடந்த 3ந்தேதி நடைபெற்ற போராட்டத்தில், விக்கிரமராஜா தலைமையிலான வணிகர் சங்க பேரமைப்பு கலந்துகொண்ட நிலையில், வெள்ளையதன் தரப்பினலான வணிகர் சங்க பேரவை வரும் 11ந்தேதி போராட்டத்தில் கலந்துகொள்ளும் என அறிவித்திருந்தது.
இந்நிலையில், நாளை நடைபெறும் முழு அடைப்பு போராட்டத்தில் வணிகர் சங்கங்கள் கலந்துகொள்ள வேண்டும் என்று, ஸ்டாலின் அழைப்பு விடுத்திருந்தார். இதன் காரணமாக நாளை கடை அடைப்பு போராட்டத்தில் இரண்டு வணிகர் சங்கங்களும் கலந்துகொள்வதாக அறிவித்து உள்ளது.
இதுகுறித்து, தமிழ்நாடு வணிகர் சங்க பேரவைத் தலைவர் வெள்ளையன் கூறுகையில், ஏப்ரல் 11ம் தேதி பிரதமர் வருகையையொட்டி நாங்கள் கடையடைப்புக்கு அழைப்பு விடுத்திருந்தோம். ஆனால், அந்தப் பயணம் தற்போது ரத்து செய்யப்பட்டு இருப்பதால், நாளை நடக்கவுள்ள திமுக போராட்டத்திற்கு ஆதரவு வழங்கவுள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.
அதுபோல, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்புத் தலைவர் விக்கிரமராஜா பேசுகையில், திமுக செயல் தலைவர் ஸ்டாலினின் வேண்டுகோளை ஏற்று நாளை நடைபெறும் வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் தார்மீக ஆதரவு உண்டு என்று தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக நாளை தமிழகத்தில் முழு அடைப்பு போராட்டம் வெற்றிகரமாக நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.