சென்னை:  தமிழ்நாடு தன்னுரிமை கழகம்: புதிய கட்சியை தொடங்கிய முன்னாள் எம்எல்ஏ பழ.கருப்பையா, தனது கட்சி திமுக, அதிமுக, பாஜகவை எதிர்ப்பதே நோக்கம்  என தெரிவித்து உள்ளார்.

சென்னை துறைமுகம் தொகுதி முன்னாள் எம்எல்ஏ பழ கருப்பையா பன்முகத்தன்மை கொண்டவர்.  எழுத்தாளர், நடிகர், சினிமா தயாரிப்பாளர், அரசியல்வாதி என அனைத்து துறைகளிலும் கோலோச்சியவர். காங்கிரஸ், ஜனதா தளம், அதிமுக, திமுக, மக்கள் நீதி மய்யம் என தமிழ்நாட்டில் உள்ள முக்கிய அரசியல் கட்சிகளுக்கெல்லாம் சென்று வந்த பழ.கருப்பையா, ஜெயலலிதா இருந்தபோது அதிமுக எம்எல்ஏவாக இருந்தவர். பின்னர் அங்கிருந்து விலகி, கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியிலும் சேர்ந்து செயல்பட்டார். ஆனால், கட்சி தலைமைகளின் செயல்பாட்டால் அதிருப்தி அடைந்து கட்சிகளில் இருந்து வெளியே தனியாக செயல்பட்ட நிலையில், தற்போது புதிய கட்சியை அறிவித்து உள்ளார்.

இந்த நிலையில், நேற்று (3ந்தேதி) சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிக்கையாளர் மன்றத்தில்  செய்தியாளர்களை சந்தித்த பழ.கருப்பையா, தனது  புதிய கட்சியை தொடங்குவதாக தெரிவித்தார். தனது கட்சியின் பெயர், தமிழ்நாடு தன்னுரிமை கழகம் என கட்சிக்கு பெயர் சூட்டி இருப்பதாக கூறியவர்,  தமது கட்சியின் கொள்கை, நேர்மை, காந்தியம், தமிழ் தேசியம் எனவும் கட்சி கொடியும் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தெரிவித்தவர், தனது  கட்சி கொடி பச்சை நிறத்தில் தமிழ்நாடு நிலப்படம் மற்றும் காந்தி உருவத்துடன் இருக்கும் என்றும் க ட்சி மாநாடு பிப்ரவரி 5ம் தேதி நடைபெற  இருப்பதாகவும் கூறினார்.

பின்னர் செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்தவர்,  தற்போதை அரசியல்,  பணத்தை வைத்து ஆட்சியைப் பிடிப்பதும் ஆட்சிக்கு வந்த உடன் பணத்தை சம்பாதிப்பதும் தான் 50 ஆண்டு அரசியல் களமாக உள்ளது என்று சாடினார்.

ஊழல்கள் தொடர்பான கேள்விக்கு பதில் கூறியவர்,  முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி மீதான ஊழல் வழக்கு விசாரிப்பது போல் தற்போது அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான ஊழல் வழக்கு விசாரிக்க வேண்டும். அமைச்சர் செந்தில் பாலாஜி அவர் சம்பந்தப்பட்ட வழக்கில் ஆதாரங்களை பணம் கொடுத்து கலைப்பதாகவும், திருடன் கொள்ளையடித்த பொருளை அதே இடத்தில் வைத்து விட்டால் தண்டனைக்கு தப்பிக்கலாம் என்பது போல் அவர் நடந்து கொண்டுள்ளார்  என்றார்.

ஹிந்து என்றது விந்திய மாலைக்கு அப்பாற்பட்டு இருந்த இடத்திலிருந்து வந்தது. தமிழர்களுடைய கலாச்சாரம் வேறு, பண்பாடு வேறு. இங்கு சிறு தெய்வம், குலதெய்வம் வழிபாடு தான். மதத்தின் பெயரை வைத்து பாஜக பிரித்தால், அது சூழ்ச்சியில் ஈடுபடுவதாகும். நான் பாஜக, திமுகவை எதிர்த்து அரசியல் கட்சி துவங்கி உள்ளேன். திமுகவுக்கு அடிபணிந்து காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் செயல்பட்டு வருகின்றன என்று சாடினார். இந்துதுவாவுக்கும் தமிழர்களுக்கும் என்ன சம்பந்தம் என வினவியதோடு பிறகு ஏன் இந்து சமய அறநிலையத்துறையின் பெயரை மாற்ற தயக்கம் என கேள்வி எழுப்பினார்.

இந்து சமய அறநிலையத்துறை என்ற பெயரே தவறானது என பரபரப்பை பற்ற வைத்திருக்கிறார். இந்துதுவாவுக்கும் தமிழர்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லாத போது இந்து சமய அறநிலையத்துறை என்ற பெயர் எதற்கு இருக்க வேண்டும் என வினவிய அவர், அதனை தமிழ் சமயங்கள் அறநிலையத்துறை என பெயர் மாற்றம் செய்ய வேண்டும் எனக் கூறினார். நீதிக்கட்சி ஆட்சியில் நீதிக்கட்சி ஆட்சியில் இந்து சமய அறநிலையத்துறை என தவறாக பெயர் சூட்டப்பட்டுள்ளதாக கருப்பையா விமர்சித்தார்.

தனது கட்சியின்  முதல் மாநாடு நாளை (5ந்தேதி)  சென்னையில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் கலந்துகொள்ள பொதுமக்களுக்கு அனுமதியில்லை எனக் கூறியவர்,  தனது கட்சியை சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் 4,000 பேர் கலந்துகொள்ளவுள்ளதாக தெரிவித்தார்.  மேலும், 10,000 பேர் தமிழ்நாடு தன்னுரிமை கழகத்தில் இணைந்து செயலாற்ற காத்திருப்பதாக கூறினார்.

மதம் கிடையாதா?  என்ற கேள்விக்கு பதில் கூறியவர், இது தொடர்பாக 10 ஆண்டுகளுக்கு முன்பே அண்ணா அறிவாலயத்தில் ஸ்டாலினை சந்தித்து தாம் எடுத்துக் கூறியதையும் சுட்டிக்காட்டினார். வள்ளலாருக்கு இந்து என்ற சொல் தெரியாது எனக் கூறிய பழ.கருப்பையா, வேதத்துக்கும் தமிழர்களுக்கும் ஒரு தொடர்பும் இல்லை என்றும் தெரிவித்தார். மேலும், தமிழர்களுக்கு பண்பாடு உண்டு, இனம் உண்டு, நாகரீகம் உண்டு, மொழி உண்டு என்கிறபோது மதம் மட்டும் கிடையாதா என பழ.கருப்பையா கேள்வி எழுப்பினார்.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது பொதுமக்களை சுட்ட 13 காவலர்கள் குற்றம் செய்துள்ளதாக நீதிபதி அருணா ஜெகதீசன் கமிஷன் அறிக்கை வந்த பிறகு கூட, அவர்களின் மீது குற்ற நடவடிக்கை எடுக்காமல் துறை ரீதியான நடவடிக்கைகள் மட்டும் தமிழக அரசு எடுத்துள்ளதாகவும், ஜனநாயக நாட்டில், காவலர்கள் சுட்டுக் கொன்று விடுவார்கள் என்று போராடுவதற்கு கூட பயமாக உள்ளதாகவும் அவர் கூறினர். அதன் பின்பு ஆட்சியாளர்கள் 2 லட்சம் 5 லட்சம் நிவாரண நிதி உதவி அளிப்பார்கள் என அவர் சாடினார்.

நீதிமன்ற விசாரணைக்கு சென்ற  அமைச்சர் பொன்முடி வழக்கு விசாரணையின் போது நீதிமன்றத்திற்கு தேசிய கொடிய கட்டிய காரில் சென்றது குற்றம் என்று விமர்சித்தவர்,  திமுகவினர் தவறு செய்தால் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க மாட்டார் எனவும் அதனை மறைத்து விடுவார் என  சாடினார்.

தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் தற்போது ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை வேட்பாளருமான ஈ வி கே இளங்கோவன் தனது குடும்ப பாரம்பரியத்தையும் காங்கிரஸ் கட்சியின் கொள்கை கோட்பாடுகளை மறந்து திமுகவுக்கு சலாம் போட்டு இருப்பதாகவும் அதற்கு அவர் திமுகவில் இணைந்து கொள்ளலாம் எனவும் விமர்சித்தவர்,.  தற்போது உள்ள கூட்டணி கட்சிகள் திமுக எந்த தவறு செய்தாலும் அதனை விமர்சிப்பதில்லை எனவும் கூட்டணி வேறு கொள்கை வேறு என்பது உணர்ந்து செயல்படவில்லை எனவும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

தனது 50 ஆண்டு அரசியல் பயணம் வீணாக சென்றதாகவும், தற்போது ஒரு புதிய பயணத்தை தொடர்வதாக அவர் தெரிவித்துள்ளார்.

பழ கருப்பையா திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். அங்காடித்தெரு படத்தில் அண்ணாச்சி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். கவனத்தையும் பெற்றார். அதன்பிறகு நடிகர் விஜய் நடிப்பில் வெளியான சர்க்கார் படத்தில் தமிழ்நாடு முதலமைச்சராக வில்லன் கேரக்டரில் நடித்து கவனம் பெற்றார். இதுதவிர மேலும் சில படங்களிலும் அவர் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.