சென்னை: மோதல் வெடிக்கலாம் என்பதால், முன்னெச்சரிக்கையாக அதிமுக பொதுக்குழு நடைபெறும் இடத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அழைப்பிதழ் உள்ளவர்கள் மட்டுமே உள்ளே, கடும் சோதனைக்குப் பிறகு அனுமதிக்கப்படுகிறார்கள்.
அதிமுக பொதுச் செயலாளராகவும், தமிழக முதல்வராகவும் இருந்த ஜெயலலிதா கடந்த 5ம் தேதி மறைந்தார். அவரது மறைவை தொடர்ந்து காலியாக உள்ள கட்சியின் பொதுச்செயலாளர் பதவிக்கு, ஜெயலலிதாவின் தோழி சசிகலாவை தேர்ந்தெடுக்க கட்சியின் முன்னணி தலைவர்கள் விரும்புகிறார்கள்.
அதிமுகவில் பொதுச்செயலாளரை தேர்ந்தெடுக்க வேண்டுமானால் கட்சியின் செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றி அதற்கு பொதுக்குழுவில் ஒப்புதல் பெற வேண்டும் என்பது விதி. இதையடுத்து அதிமுக. செயற்குழு, மற்றும் பொதுக்குழு கூட்டம் இன்று காலை 9.30 மணிக்கு சென்னை, வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸ் திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது. இதையடுத்து திருமண மண்டபத்தை சுற்றிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அழைப்பு கடிதம் இருந்தால் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்படுவார்கள் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மண்டபத்திற்கு வெளியே பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தீவிர சோதனைகளுக்கு பிறகே பொதுக்குழு உறுப்பினர்கள் கூட்டத்திற்குள் அனுமதிக்கப்படுகிறார்கள்.
பொதுச்செயலாளராக போட்டியிட விரும்பிய சசிகலா புஷ்பாவுக்கு அதிமுகவினர் எதிர்ப்பு தெரிவித்ததோடு இரு தரப்பும் நேற்று கட்சி தலைமை அலுவலகத்தில் கடுமையாக மோதிக்கொண்டது குறிப்பிடத்தக்கது. ஆகவேதான் இன்றைய கூட்டத்திற்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
சசிகலாவை பொதுச்செயலாளராக நியமிக்க எதிர்ப்பு தெரிவித்து கூட்டத்தில் யாராவது முழக்கமிட்டால் மோதல் ஏற்பட வாய்ப்புள்ளது என்று கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.