புதுடெல்லி: இந்திய தலைநகரில் நடைபெற்ற மத மாநாட்டில் கலந்துகொண்டு தமிழகம் திரும்பியோர், தாங்களாக முன்வந்து பரிசோதனைக்கு உட்படுத்திக்கொண்டு, சுயதனிமைப்படுத்தலில் இருக்க வேண்டுமென்று உள்ளூர் ஜமாத்கள் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

டெல்லியின் நிஜாமுதீன் பகுதியில் உள்ள ஒரு மசூதியில் பல வெளிநாட்டினர் உட்பட ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்ட முஸ்லீம் மத மாநாடு நடைபெற்றது. உலகெங்கிலும் கொரோனா பரவத் துவங்கிய நிலையில் இம்மாநாடு நடைபெற்றதால், வெளிநாட்டிலிருந்து வந்த பலரின் மூலம் கொரோனா வைரஸ் உள்நாட்டு இந்தியர்களுக்கும் பரவியதாக கூறப்படுகிறது.

இந்த மாநாட்டில் கலந்துகொண்டவர்களில் பல தமிழர்களும் அடக்கம். இச்சம்பவம் தற்போது இந்திய அளவில் பெரும் கவனத்தைப்பெற்று, நாட்டில் கொரோனா வைரஸ் பரவுவதற்கான முக்கிய காரணமே இதுதான் என்ற அளவில் பிரச்சினை திசை திரும்பி வருகிறது. இதனால், முஸ்லீம் சமூகம் கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது.

எனவே, இதனையடுத்து, தமிழகத்திலுள்ள பல உள்ளூர் ஜமாத் அமைப்புகள், பிற அமைப்புகளின் உதவியுடன், தங்கள் பகுதியிலிருந்து டெல்லி மாநாட்டிற்கு சென்று திரும்பிய நபர்கள், தாமாக முன்வந்து மருத்துவப் பரிசோதனைக்கு உட்பட்டு, சுயதனிமைப்படுத்தலுக்கு ஆட்பட வேண்டுமென்ற கோரிக்கை விடுக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.