சென்னை:

சட்டப்பேரவைக்கு குட்கா கொண்டு வந்த விவகாரத்தில் விளக்கம் அளிக்க கூறி மு.க.ஸ்டாலின் உள்பட 21 திமுக எம்.எல்.ஏ.க்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உரிமை குழு கூட்டத்தில் முடிவு செய்துள்ளது.

தமிழக சட்டப்பேரவையில் மானிய கோரிக்கை விவாதத்தின் போதுதடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்களை கடந்த ஜூலை 19ந்தேதி பேரவைக்குள் கொண்டு வந்தனர். இந்த விவகாரம் தொடர்பாக தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மீது உரிமை மீறல் குழுவுக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து சட்டப்பேரவை உரிமை குழு கூட்டம் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் தடை செய்யப்பட்ட குட்காவை பேரவைக்கு கொண்டு வந்தது குறித்து விளக்கம் அளிக்க மு.க. ஸ்டாலின் உள்பட 21 தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு நோட்டீஸ் அனுப்புவது என முடிவு செய்யப்பட்டது. ஒரு வாரத்தில் பதில் அளிக்க அதில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.