சென்னை: இந்தியாவில் அரசு மருத்துவமனைகளில் தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவமனைகளில் மட்டும் சுமார் 1 லட்சம் படுக்கை வசதிகள் இருப்பதுடன், தினசரி சுமார் 6 லட்சம் பேர் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மக்கள் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சுகாதாரமே பிரதானம். அதுபோல ஆரோக்கியத்திற்கு தேவையான மருத்துவ வசதிகள் அதிகம் உள்ள மாநிலமாக இந்தியாவிலேயே தமிழ்நாடு தேர்வாகி உள்ளது. இந்தியாவில் உள்ள பல மாநிலங்களில் சுகாதார குறியீட்டில் தமிழ்நாடு முன்னிலை வகிக்கிறது.

பொது சுகாதாரம், பெண்கள் மற்றும் குழந்தைகள் மற்றும் முதிதேயார்கள்  நலம் பேணுவதில்  மற்ற மாநிலங்களை விட, தமிழ்நாடு முன்மாதிரி மாநிலமாக உள்ளன. நகரம் முதல் கிராமம் வரை அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் ஏராளமான மருத்துவ உதவி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

மாநிலம் முழுவதும், 37 அரசு மருத்துவ கல்லூரிகள், 50 மருத்துவ கல்லூரியுடன் இணைந்த மருத்துவமனைகள், ஒரு அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை, ஒரு அரசு பல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, 29 மாவட்ட தலைமை மருத்துவமனைகள், 273 வட்டம் மற்றும் வட்டம் சாரா மருத்துவமனைகள், 1,806 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 8,713 துணை சுகாதார நிலையங்கள், 460 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், 15 நகர்ப்புற சமுதாய மையங்கள் உள்ளன.

இதுமட்டுமின்றி, தமிழகத்தில் 7.5 கோடி மக்கள் தொகை உள்ள நிலையில் கொரோனா காலத்தில் மருத்துவ படுக்கைகளின் தேவை அதிகரித்ததன் எதிரொலியாக தமிழகம் முழுவதும் படுக்கைகள் எண்ணிக்கை இரட்டிப்பாக்கப்பட்டன. இதன் விளைவாக, தற்போது அரசு மருத்துவமனைகளில் 99,435 படுக்கைகள் உள்ளன. இதன் மூலமாக இந்திய அளவில் அதிக மருத்துவ படுக்கைகள் கொண்ட மாநிலமாக தமிழகம் விளங்கி வருகிறது. , தமிழகத்தில் சுமார் ஒரு லட்சம் அளவிலான படுக்கைகள் மருத்துவமனைகளில் மட்டுமே இருந்து வருகிறது. இதன் மூலம் இந்திய அளவில் சுகாதாரத்துறை பங்களிப்பில் தமிழகம் தொடர்ந்து முன்னிலையில் நீடித்து வருகிறது. மேலும் சிறந்த மருத்துவ கட்டமைப்பை குடிமக்களுக்கு அரசு வழங்கி வருகிறது. 70,000 பேர் உள்நோயாளிகள், 10,000 அறுவை சிகிச்சைகள் பெறும் வகையில் நாளொன்றுக்கு 6 லட்சம் பேர் பயனடைகிறார்கள்.

இதுமட்டுமின்றி,  தமிழகத்தில் 99.8 சதவீத பிரசவங்கள் மருத்துவ நிலையங்களில் தகுதியும், பயிற்சியும் பெற்றவர்களால் நடத்தப்படுகிறது. தொற்று நோய்களை ஒழிப்பதில் தமிழகம் வெற்றி பெற்றுள்ளது. எச்.ஐ.வி, எய்ட்ஸ் நோய் ஒழிப்பிலும் சிறப்பான முன்னேற்றம் கண்டுள்ளது. அதிக உயிரிழப்புக்கு காரணங்களான நீரிழிவு நோய், இதய நோய், உயர் ரத்த அழுத்த நோய் மற்றும் புற்றுநோய் போன்ற தொற்று இல்லாத நோய்களை கட்டுப்படுத்துதல் அவசிய தேவை தற்போது ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே கடந்த அதிமுக ஆட்சியில் ஏராளமான மருத்துவக்கல்லூரிகள் தொடங்கப்பட்ட நிலையில், திமுக ஆட்சி பதவி ஏற்றதும், மேலும் பல மருத்துவக்கல்லூரிகள் தொடங்கப்பட்டு உள்ளது. மாவட்டந்தோறும் மருத்துவக்கல்லூரிகள் தொடங்கும் வகையில்,  இன்னும் 4 மருத்துவக்கல்லூரிகள் திறக்க அனுமதி கோரியுள்ளன.

இதுமட்டுமினிறி,  மக்களை தேடி மருத்துவம் திட்டமும்,  நம்மை காக்கும் 48-இன்னுயிர் காப்போம்  திட்டமும் தொடங்கப்பட்டது. இந்த சிறப்பான திட்டம் பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இதுமட்டுமின்றி, திமுக பதவி ஏற்றதும், முதல்வர் மு.க.ஸ்டாலின் ரூ.302 கோடி செலவில் 2499 அதி தீவிர சிகிச்சை படுக்கைகளை தமிழ்நாடு முழுவதும் தொடங்கி வைத்தார். இதனால், மேலும் 5,500 படுக்கை வசதிகள் திமுக அரசு பொறுப்பேற்ற நாள் முதல் கூடுதலாக ஏற்படுத்தப்பட்டுள்ளது. முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் பயனாளியாவதற்கான குடும்ப ஆண்டு வருமான வரம்பு ரூ.72,000 இருந்து ரூ.1,20,000 ஆக உயர்த்தப்பட்டது.

முதலமைச்சரின் மருத்துவக் காப்பீட்டு அட்டை இல்லாதவரும் பயன்பெறலாம். இதை தொடர்ந்து பிற மாநிலங்களிலும் இதுபோன்ற திட்டங்கள் தொடங்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதன்படி, நவம்பர் 30ம் தேதி வரை விபத்தில் சிக்கிய 1,17,671 பேர் அரசு மருத்துவமனையிலும், 12,273 பேர் தனியார் மருத்துவமனையிலுமாக மொத்தம் 1,29,944 பேர் சிகிச்சை பெற்றுள்ளனர். இதற்காக ரூ.115,71,13,973 அரசாங்கம் செலவழித்துள்ளது.

இந்தியாவிலேயே முதன்முறையாக மக்களை தேடி மருத்துவம் என்ற திட்டம் 2021ம் ஆண்டு தமிழ்நாட்டில் கொண்டுவரப்பட்டது. தொற்று நோயினால் ஏற்படும் பாதிப்பை எதிர்கொள்ளும் விதமாக இந்த திட்டம் வடிவமைக்கப்பட்டு களப்பணியாளர்கள் மூலம் பயனாளிகளின் இல்லங்களிலேயே சுகாதார தேவை வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் மூலம் நவ.30ம் தேதி வரை 9811484 பேர் பயனடைந்துள்ளனர்.

சுகாதாரத்துறையில் தமிழக அரசு எடுத்து வரும் நடவடிக்கை காரணமாக, இன்று சுகாதாரத்துறையில் நாட்டிலேயே சிறந்த மாநிலமாக தமிழ்நாடு தேர்வாகி உள்ளது.