சென்னை:
தமிழகத்தில் உச்சநீதி மன்றத்தின் கடுமையான நெருக்குதலை தொடர்ந்து லோக் ஆயுக்தா உருவாக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, நியமிக்கப்பட்டுள்ள தமிழ்நாடு லோக் ஆயுக்தா: தலைவர், உறுப்பினர்கள் குறித்து அரசிதழில் வெளியிடப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் கடந்த ஜூலை யில் சட்டப்பேரவையில் லோக்ஆயுக்தா சட்டம் தாக்கல் செய்யப்பட்டு, நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது. சட்டத்தில் கூறப்பட்டுள்ளபடி லோக் ஆயுக்தா அமைப்பின் தலைவர், உறுப்பினர்கள் தேர்வு மற்றும் 26 வகையானபணியிடங்களை உருவாக்குவதற்கான அரசாணை கடந்த ஆண்டுஇறுதியில் பிறப்பிக்கப்பட்டது.
தமிழகத்தில் லோக் ஆயுக்தா அமைப்பின் தலைவரை தேர்வு செய்வதற்கான ஆலோசனைக் கூட்டம் முதல்வர் பழனிசாமி தலைமையில் நடைபெற்றது இந்த கூட்டங்களில் எதிர்க்கட்சி தலைவர் மு..க.ஸ்டாலின் ஒருமுறை கூட பங்கேற்கவில்லை.
இருந்தாலும், லோக்ஆயுக்தா அமைப்தற்கான பணிகள் நடைபெற்று வந்தது. அதையடத்து, லோக் ஆயுக்தாவில் தலைவர், உறுப்பினர்களை தேர்வு செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி கே.வெங்கட்ராமன் தலைமையில் தமிழக அரசின் முன்னாள் தலைமைவழக்கறிஞர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி, ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி ஏ.பாரி ஆகியோர் கொண்ட தேடுதல் குழு அமைக்கப்பட்டது.
இந்த நிலையில், கடந்த ஜன.11-ம்தேதி லோக் ஆயுக்தா தலைவர்மற்றும் 2 நீதித்துறை உறுப்பினர்கள், 2 நீதித்துறை சாரா உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இதற்கு 183 பேர்விண்ணப்பித்த நிலையில், அவர்களிடம், தேடுதல் குழுவினர் நேர்காணல் நடத்தினர். அதில் குறிப்பிட்ட நபர்களைத் தேர்வு செய்து தற்போது முதல்வரிடம் அறிக்கையாக அளித்துள்ளனர்.
இதையடுத்து, முதல்வர் கே.பழனிசாமி தலைமையில் லோக் ஆயுக்தா தலைவரை தேர்வு செய்வதற்கான கூட்டம் நடந்தது. இதில், பேரவைத் தலைவர் பி.தனபால், தமிழக தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன், பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை செயலர் ஸ்வர்ணா ஆகியோர் பங்கேற்றனர். அப்போது, தேடுதல் குழு பரிந்துரைத்து அளித்த சீலிடப்பட்ட உறையை பிரித்து யாரைத் தேர்வு செய்வது என்பது பற்றி முதல்வர் விவாதித்தார்.
அதையடுத்து, தேர்வானர்கள் பட்டியல் ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதற்கு ஆளுநர் ஒப்புதல் கொடுத்துள்ள நிலையில், தற்போது தமிழ்நாடு அரசின் அரசிதழில் வெளியிடப்பட்டு உள்ளது.
அதன்படி,
தமிழ்நாடு லோக் ஆயுக்தா தலைவர்: உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி தேவதாஸ்
நீதித்துறை உறுப்பினர்கள்: மாவட்ட முன்னாள் நீதிபதிகள் கே ஜெயபாலன்,
ஆர் கிருஷ்ணமூர்த்தி
நீதித்துறை அல்லாத உறுப்பினர்: ஓய்வு பெற்றஐஏஎஸ் அதிகாரி ராஜாராம்,
வழக்கறிஞர் கே ஆறுமுகம்
ஆகியோர் நியமிக்கப்பட்டு இருப்பதாக அரசாணையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.