தெர்மாகோல் அட்டைகளை வைத்து வைகை அணையின் ஒட்டுமொத்த நீரை மூடி, நீர் ஆவியாகாமல் தடுக்க தமிழக அரசு செய்த முயற்சிக்கு, நீர் ஆய்வாளர்கள் கண்டனம் தெரிவிக்கின்றனர்.

தமிழகம் முழுதும் கடும் வறட்சி நிலவுகிறது. பெரும்பாலான நீர் நிலைகள் வறண்டு கிடக்கின்றன. ஒகனேக்கல் அருவியில் நீர் வரத்தே இல்லை.

மற்ற பல நீர் நிலைகளில் போதுமான குறைவான நீரே இருக்கிறது. இவற்றை ஆவியாகாமல் தடுக்கும் முயற்சியில் தமிழக அரசு இறங்கியது.

இதன் முதல்படியாக, நேற்று வைகை அணையில் உள்ள நீரை  தெர்மாகோல் அட்டைகளை வைத்து மூடி, ஆவியாகாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ  இதைத் துவக்கி வைத்தார்.

ஆனால் நீர் நிலைகள் மேல் மூடப்பட்ட தெர்மாகோல் அட்டைகள் அனைத்தும்  அடுத்த சில நிமிடங்களில் கரை ஒதுங்கின.

பிறகு அசட்டுச் சிரிப்புடன் செல்லூர் ராஜூ செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், “கடந்த 142 வருடங்களாக இல்லாத அளவு இந்த கோடை காலத்தில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. இதனால், அணைகளில் உள்ள நீர் ஆவியாகாமல் தடுக்க இந்த புது முயற்சி எடுக்கப்பட்டது.

அணைகளில் உள்ள நீர் நிலைகள் மேல் தெர்மாகோல் அட்டைகளை கொண்டு மூடி  நீர் ஆவியாமல் தடுக்கும் இது போன்ற முயற்சிகள் ஏற்கெனவே வெளிநாடுகளில் வெற்றி பெற்றுள்ளது. இந்த திட்டத்துக்கு 10 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக 200 சதுர அடிக்கு வைகை அணையில் உள்ள நீர் மேல் தெர்மாகோல் போடப்பட்டது” என்றார்.

இந்த “தெர்மாகோல் முயற்சிக்கு” நீர் ஆய்வாளர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

“இந்தத்திட்டம் வீண்.  பரந்த அணை மற்றும் நீர் பகுதியில் காற்றின் வீச்சு அதிகமாக இருக்கும். தகடு போன்ற தெர்மாகோல் அட்டைகளை செல்லாய்ட் டேப் மூலம் ஒட்டி நீரின் மேல் போட்டிருக்கிறார்கள். இது எப்படி நிற்கும்?

வெளி நாடுகளில் நீர் நிலைகள் மீது பிளாஸ்டிக் கோலி குண்டுகளை போட்டு நீர் ஆவியாகாமல் தடுக்கிறார்கள். இதுவே சரியான யுக்தி.

அவ்வளவு ஏன்.. குஜராத்தில் நீர் நிலைகளின் மேல் உறுதியான தடுப்புகள் அமைப்பதுடன் அதன் மீது சூரிய மின் சக்தி உற்பத்தி செய்யும் ஏற்பாடுகளையும் செய்துள்ளார்கள்.

தமிழகத்திலோ பத்து லட்சம் பணத்தை வீணடித்திருக்கிறார்கள்” என்று வேதனைப்படுகிறார்கள் நீர் ஆய்வாளர்கள்.