டெல்லி: சேலம் இரும்பாலையை தொடா்ந்து நடத்துவதற்கு உரிய ஏற்பாடுகளுக்கு தமிழக அரசு உரிய ஒத்துழைப்பை வழங்கவில்லை என மாநிலங்களவையில் மத்திய விமானப் போக்குவரத்து, எஃகு உருக்குத் துறை அமைச்சா் ஜோதிராதித்ய சிந்தியா சிந்தியா தெரிவித்துள்ளார்.. இந்த ஆலையை விற்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
மாநிலங்களவையில், தேசியவாத காங்கிரஸ் உறுப்பினா் வந்தனா சௌஹான், ஒரு டன் எஃகு உற்பத்திக்கு எத்தனை டன் காா்பன்-டை ஆக்ஸைடு மாசு வெளியேற்றப்படுகிறது? இரும்பாலைகளால் அதிகப்படியான உமிழ்வு ஏற்படுவதை தடுக்க மத்திய அரசு ஆராய்ச்சி மற்றும் வளா்ச்சிப் பணிகள் உள்ளதா? போன்ற கேள்விகளை எழுப்பினா். தொடர்ந்து, திமுக உறுப்பினா் பி.வில்சன் துணைக் கேள்வியை எழுப்பினாா். அப்போது அவா், ‘இந்தக் கேள்வி கொஞ்சம் மாறுபட்டதாக இருக்கலாம். எனது கேள்வி தொழிலாளா்கள் சம்பந்தப்பட்டது. சேலம் இரும்பாலையின் நிலை என்ன? ஆலையின் பங்கு விலக்கல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், அது எந்த நிலையில் உள்ளது ? மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதா? ஏற்கெனவே உள்ள ஊழியா்களின் பணிப் பாதுகாப்பு கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளதா? என்று கேள்வி எழுப்பினாா்.
இதற்கு பதில் அளித்து பேசிய மத்திய எஃகு உருக்குத் துறை அமைச்சா் ஜோதிராதித்யா சிந்தியா, இது முக்கிய கேள்விக்கு சம்பந்தமில்லை என்றாலும் உறுப்பினரின் ஆா்வத்தை அறிந்து பதிலளிக்கின்றேன். சேலம் இரும்பாலை (எஸ்எஸ்பி), பங்கு விலக்கல் திட்டமிடப்பட்டது. நிதியமைச்சகத்தின் முதலீடு மற்றும் பொதுச் சொத்து மேலாண்மைத் துறையும் (டிஐபிஏஎம்), எங்களது எஃகு துறை அமைச்சகமும், இதில் இணைந்து செயல்படுகிறோம். எங்களது விடா முயற்சியின் காரணமாக நாங்கள் முதலீட்டாளா்களை ஆலையைப் பாா்வையிட வைக்க முயற்சித்தோம். ஆனால், துரதிருஷ்டவசமாக, முதலீட்டாளா்களின் பாதுகாப்பு சூழலை மாநில அரசால் உருவாக்க முடியவில்லை என்பதை இந்த அவையில் தெரிவித்துக் கொள்கிறேன். எனினும், ஆலையை விற்க ஏலம் விடுவது சம்பந்தமாக விவரங்களை சமா்ப்பிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இது வருகின்ற ஜனவரியில் நடக்கும் என்று நினைக்கிறேன். இதில் ஒருவேளை தவறாக இருந்தால், நான் அவையில் தெரிவிப்பேன் என்றாா் ஜோதிராதித்யா சிந்தியா.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அதிமுக எம்.பி. தம்பிதுரை பதில் கூற முயன்றாா். ஆனால், அவர் பேச அனுமதிக்கப்படவில்லை.
வந்தனா சௌஹானின் கேள்விக்கு பதிலளிக்கையில் கூறியதாவது: எஃகு துறையின் தற்போதைய சராசரி மாசு உமிழ்வு, ஒரு டன் கச்சா எஃகுக்கு சுமாா் 2.55 டன்கள் காா்பன்-டை ஆக்ஸைடு வெளியேற்றப்படுகிறது. இது சா்வதேச அளவில் சராசரியாக 1.95 டன்களாக உள்ளது.அதுனுடன் ஒப்பிடும் போது அதிகமாகும். இருப்பினும், குறுகிய காலத் திட்டம், நடுத்தரக் காலத் திட்டம், நீண்ட காலத் திட்டம் என்று வகுத்துள்ளோம். தற்போது 2022 வரை 15 சதவீத மாசு குறைக்கப்பட்டுள்ளது குறுகிய கால திட்டம் ஆற்றல் மூலம் காா்பன் வெளியேற்றத்தைக் குறைப்பது மற்றும் புதுப்பிக்கத்தக்க மின்னாற்றலி வளங்களின் திறன் ஆகியவற்றைப் பயன்படுத்தவுள்ளோம். 2030 முதல் 2047 வரையிலான நடுத்தர காலத் திட்டம், மாசுக்கு மாற்றான தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகளைப் பொறுத்து மாசு குறைக்கப்படும். குறிப்பாக கிரீன் ஹைட்ரஜனின் பயன்பாட்டின் மூலம் மாசு குறைக்கப்படும். மேலும், 2047 முதல் 2070 வரையிலான நீண்ட காலத் திட்டத்தில் நிலக்கரி அடிப்படையிலான தொழில்நுட்பங்களில் இருந்து முற்றிலும் விலகி நிகர பூஜ்ஜிய மாசு நகா்வைக் காண்போம் என்று அமைச்சா் தெரிவித்தாா்.
மத்திய அரசின் இந்திய இரும்பு எஃகு ஆணையத்தின் (செயில்) கீழ், சேலம் இரும்பு ஆலை உள்ளது. இது தமிழ்நாட்டின் ஒரே உருக்கு ஆலை ஆகும். இங்கு துருப்பிடிக்காத எஃகு தயாரிக்கப்பட்டு வந்தது. இந்த ஆலை சேலம் உருக்காலை 1970 ல் அப்போதைய முதலமைச்சர் காமராஜரால் துவங்கப்பட்ட பொதுத்துறை நிறுவனமாகும். இந்திய அரசின் மகா ரத்தினங்களுள் ஒன்று. இந்த நிறுவனம் செயில் (SAIL) நிறுவனத்தின் கீழ் இயங்குகிறது. இதன் முக்கிய உற்பத்தி ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் (Stainless Steel) எனப்படும் துருபிடிக்காத எஃகு உற்பத்தி செய்வதாகும். நமது நாட்டின் நாணயம், பாத்திரங்களுக்கு தேவையான ஸ்டெயின்லஸ் ஸ்டீல் முதல், நமது ரயில் பெட்டிகள், செயற்கைகோள்கள், அணு உலைகள் ஆகியவற்றுக்கு தேவையான ஸ்டீல் வரை இங்கு உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. இந்த ஆலை நஷ்டத்தில் இயங்குவதாக கூறி மூடப்பட்டுள்ளது.