சென்னை: பரந்தூரில் விமான நிலையம் வேண்டாம் என முன்னாள் நீதிபதி அரிபரந்தாமன் உள்பட  அரசியல், சமூக பிரபலங்கள் தமிழகஅரசுக்கு கடிதம் எழுதி உள்ளனர். அதில், நீர் மண்ணுக்குள் ஊடுருவ முடியாத தளத்தை ஏற்படுத்துவது பேரிடரை கூவி அழைப்பதாகும் என எச்சரித்துள்ளனர்.

சென்னையின் 2-வது விமான நிலையமாக காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் ரூ.20,000 கோடி முதலீட்டில் 2028-ம் ஆண்டுக்குள் விமான நிலையம் அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 4,700 ஏக்கர் பரப்பளவில் புதிய விமான நிலையத்தை அமைப்பதற்கான நடவடிக்கைகளை தமிழகஅரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. . இதற்கான ஆரம்ப கட்டப் பணிகள் தொடங்கப்பட்டு விமான நிலையம் அமைக்க தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம், சர்வதேச ஒப்பந்தப்புள்ளி(டெண்டர்) கோரப்பட்டுள்ளது. இதன் காரணமாக அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் 13 கிராமங்களை சுற்றி காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அங்கு  அரசியல் கட்சியினர், சமூக ஆர்வலர், வெளியாட்கள் செல்ல முடியாதபடி கடும் நெருக்கடி தரப்பட்டுள்ளது.

தமிழகஅரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, அந்த பகுதிகளில் உள்ள ஏகனாபுரம், பரந்தூர் உள்ளிட்ட அனைத்து 13 கிராம பொதுமக்கள் 4  மாதங்களுக்கு மேலாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களது போராட்டம் 150-வது நாளை எட்டியுள்ளது. இந்த நிலையில், போராட்டத்தின் ஒருபகுதியாக, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி நேற்று பேரணி  நடத்தினர். அவர்களை தடுத்து, மாவட்ட  கோட்டாட்சியர், காஞ்சிபுரம் எஸ்.பி. தாசில்தார் ஆகியோர் மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அதைத்தொடர்ந்து இன்று கோட்டையில் அமைச்சர்களுடன் போராட்டக்குழுவினர் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். போராட்ட குழுவினருடன் அமைச்சர்கள் வேலு, தங்கம் தென்னரசு, அன்பரசன் மற்றும் அதிகாரிகள் ஆலோசிக்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில்,  சென்னை உயர் நீதிமன்றமுன்னாள் நீதிபதி  அரிபரந்தாமன் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்டோர் தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையத்துக்கு அவசர கடிதம் எழுதி உள்ளார். அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது,

“பரந்தூர் விமான நிலையம் அமைக்கக் கட்டுமானங்கள் ஏற்படுத்த இருக்கும் நிலம், அடையாற்றின் தென்மேற்கு நீர் பிடிப்புபகுதியின் 500 சதுர கிமீ பரப்புக்குள் அமைந்திருக்கிறது. இப்பகுதியிலிருந்து வரும் நீர், செம்பரம்பாக்கத்தில் இருந்து வெளியேறும் நீருடன் அடையாற்றில் சேருகிறது. அதனால்தான் கடந்த 2015-ம் ஆண்டு மணிமலங்கலம், பெருங்களத்தூர், தாம்பரம், முடிச்சூர், வரதராஜபுரம் போன்ற பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இது தொடர்பாக இந்திய அறிவியல் நிறுவனம் (Indian Instituteof Science), பல்துறை இடையிலானநீர் ஆராய்ச்சி மையம் (Inter disciplinary Center for Water Research) ஆகியவை நடத்திய ஆய்வில், கடந்த 2015 வெள்ளத்தில் செம்பரம்பாக்கம் ஏரி மட்டுமல்லாது, மற்ற காரணங்களும் முக்கிய பங்காற்றின எனத் தெரிவித்துள்ளது. மேலும், அன்று செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து வெளியேறிய நீரின் அளவு விநாடிக்கு 800 கன மீட்டர். செம்பரம்பாக்கத்தின் தாக்கத்துக்கு ஆளாகாத மணிமங்கலம், பெருங்களத்தூர், தாம்பரம் போன்ற இணையான நீர்ப்பிடிப்பு பகுதிகளிலிருந்து விநாடிக்கு 3 ஆயிரம் கன மீட்டர் நீர்வெளியேறியது. 2-ம் சேர்ந்து அடையாறு வழியாக மாநகருக்குள் நுழையும்போது 3 ஆயிரத்து 800 கன மீட்டராக (1 லட்சத்து 34 ஆயிரம் கன அடி) இருந்தது. அடையாற்றின் கொள்ளளவு விநாடிக்கு 2 ஆயிரத்து 28 கன மீட்டர் மட்டுமே என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதாவது பரந்தூர் விமான நிலையம் அமைய உள்ள இடம் உள்ளடக்கிய பகுதியிலிருந்து 3 ஆயிரம் கன மீட்டர் நீர் அடையாற்றுக்கு வந்துள்ளது. அடையாற்றின் கொள் திறனை அதிகரிக்க முடியாது.  அப்படியிருக்கும்போது, நீரியல் நெருக்கடிக்கு ஆளாகியுள்ள ஆற்றின் கரையில் 18 சதுர கிமீ பரப்பில், நீர் மண்ணுக்குள் ஊடுருவ முடியாத தளத்தை ஏற்படுத்துவது பேரிடரை கூவி அழைப்பதாகும்.

பரந்தூர் விமான நிலையத்துக்குத் திட்டமிடுபவர்கள், அதனால் சென்னைக்கு என்ன பாதிப்பு என்பதை யோசிக்க வேண்டும். எனவே, பரந்தூரில் 2-வது சர்வதேச விமான நிலையம் அமைக்கும் முயற்சியைக் கைவிட வேண்டும் என்று தமிழக அரசுக்கு அறிவுறுத்த வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி து.அரிபரந்தாமன், முன்னாள் விமானி கேப்டன் மோகன் ரங்கநாதன், நடிகர் சித்தார்த், கர்நாடக இசைப் பாடகர் டி.எம்.கிருஷ்ணா, சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர் நித்தியானந்த் ஜெயராமன் உள்ளிட்ட 30-க்கும்மேற்பட்ட பிரபலங்கள் சேர்ந்து இந்த கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளதாக கூறப்படுகிறது.