திருச்சி:
மக்கள் நீதி மய்யத்தின் 2வது பொதுக்கூட்டம் இன்று திருச்சி பொன்மலையில் நடைபெற உள்ளது. இந்நிலையில் திருச்சி சென்றுள்ள நடிகர் கமலஹாசன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது மத்திய அரசின் கடமை என்றும், போலியாக உண்ணா விரதம் இருந்து தமது இயலாமையை அதிமுக அரசு மறைக்க முடியாது என்றும் சாடினார்.
மக்கள் நீதி மன்றத்தின் திருச்சி கூட்டத்தில் பங்கேற்க நேற்று மாலை திருச்சி சென்றடைந்த நடிகர் கமலஹாசன் இன்று காலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,
மக்கள் நீதி மய்யம் பிப்ரவரி 22ந்தேதி அன்றே திருச்சி பொதுக்கூட்டம் குறித்து அறிவித்திருந்தது என்றார். தொடர்ந்து பேசிய அவர், உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, 6 வாரங்களுக்குள் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைகும் என்ற நம்பிக்கையோடு இருந்தோம்.
ஆனால் ஏற்கனவே 2016-ல் நடந்த நிகழ்வுகள் நியாபகத்துக்கு வருகின்றன. அப்போது 4 வாரங்களுக்குள் மேலாண்மை வாரியம் அமைக்க உத்தரவிடப்பட்டது. அப்போதும் கூட சாக்கு போக்குகளை காட்டி அது தாமதிக்கப்பட்டது. இப்போதும் அதே நாடகம் அரங்கேறியுள்ளது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது மத்திய அரசின் கடமை. ஆனால், தமிழக அரசு அவமதிப்பு வழக்கு தொடர்ந்தோ, போலியான ஒருநாள் உண்ணாவிரதம் இருந்தோ தமது இயலாமைகளை மறைக்க முடியாது.
மாநில உரிமைகளுக்கு குரல் கொடுக்காமல் மத்திய அரசின் எடுபிடி போல் நடக்கிறது இந்த தமிழக அரசு என்று கடுமையாக சாடினார்.
மேலும், எங்கள் பொதுக்கூட்டம் இன்று காவிரி பிரச்சனைபற்றி விவாதிக்கும் என்றும், பிரச்சனையைப் பற்றி மட்டும் பேசாது. தீர்வுக்கான வழிகளையும் முன்நிறுத்தும் என்று கூறினார்.
இதுவரை நடந்த எங்களின் ஆய்வின்படி முக்கியமான துறைகளில் மய்யத்தின் கொள்கைகளுக்கான கோட்பாடுகள் அடுத்த 5 மாதங்களில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் கொள்கைகள் தயாரிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.