சென்னை:
மிழகத்தில் கொரோனா தொற்று அதிகரிப்புக்கு  காரணம்,  சோதனைகள் அதிகம் நடத்தப்படுவது தான் என்று நமது  சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்து வருகிறார். ஆனால்,  சென்னை உள்பட பல பகுதிகளில் நோய் தொற்று பாதிப்பு காரணமாக, மருத்துவமனைகளுக்கு சென்றால், நோயாளிகளுக்கு எந்தவித பரிசோதனைகளும் மேற்கொள்வதில்லை என்று பொதுமக்கள் குற்றச்சாட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

மருத்துவர்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொள்ளுங்கள் என்ற அறிவுறுத்தி, திருப்பி அனுப்பிவிடுவதாக, சென்னையில் அதிக கொரோனா தொற்று  பாதிப்புக்கு உள்ளாக்கியுள்ள ராயபுரம் பகுதி மக்கள் வேதனை தெரிவித்து உள்ளனர்.
அரசின் திறமையின்மை காரணமாகவே கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி வரும் நிலையில், அதை உறுதிப்படுத்தும் வகையில் அரசின் நடவடிக்கை அமைந்துள்ளது.
மக்கள் நெருக்கம் மிகுந்த சென்னையில், கொரோனா தடுப்பு நடவடிக்கை எடுப்பதில் தமிழக அரசு தோல்வி அடைந்துள்ளதாக சமூக வலைதளங்களில் குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.  நாளுக்கு நாள் தொற்றுக்கள் அதிகரித்து வரும் நிலையில், சென்னை மக்களிடையே  முறையான தடுப்பு நடவடிக்கைகள், சோதனைகள் செய்யப்படுவதில்லை என்று குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.
சென்னையில் கொரோனா பாதிப்பு தடுப்பு நடவடிக்கையாக 15 மண்டலங்களுக்கும் தனித்தனி ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டும், அவர்களுக்கு ஒருங்கிணைப்பாளராக சிறப்பு அதிகாரி  ராதாகிருஷ்ணன்  நியமிக்கப்பட்டு இருப்பதாகவும் தமிழகஅரசு அறிவித்து உள்ளது.
ஆனால், எந்தவொரு அதிகாரியும்,  மக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதிகளுக்குச் சென்று, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை  பார்வையிட்டதும் இல்லை, முடுக்கி விட்டதும் இல்லை. இதுபோன்ற சூழலில்தான் சென்னையில் கொரோனா தொற்றின் வீரியம் நாளுக்கு நாள் தீவிரமாகிக்கொண்டே செல்கிறது.
இந்த சூழலில், நோய் அறிகுறி உள்ளவர்களையும், கொரோனா சோதனை மையங்கள், மருத்துவ மனைகள், எந்தவித சோதனைகளும் மேற்கொள்ளாமல், திருப்பி அனுப்பிவிடுவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளது.
ஏற்கனவே நோய்அறிகுறி இல்லாதவர்களுக்கு கொரோனா  சோதனை அவசியமில்லை என்று தமிழகஅரசு அறிவித்துள்ள நிலையில், உண்மையிலேயே நோயால் பாதிக்கப்பட்டு உள்ளவர்களும் திருப்பி அனுப்பப்பட்டு வரும் அவலம் நடைபெற்று வருகிறது.

காய்ச்சல் மற்றும் இருமல், தொண்டைவலி போன்ற கொரோனா அறிகுறி உள்ள நபர்களைக் கூட கார்ப்பரேஷன் சோதனை மையங்கள் திருப்பி அனுப்பி விடுகின்றன என்று பகிரங்கமாக குற்றச்சாட்டுக்களை கூறி உள்ளனர்.
ராயபுரத்தில் வசிக்கும் நபர் ஒருவர், கடந்த  வியாழக்கிழமை மன்னடியில் உள்ள கொரோனா சோதனை மையமான பாரதி கலைக் கல்லூரிக்குச் சென்றிருந்தார். தனக்கு  காய்ச்சல் மற்றும் தொடர்ச்சியான தும்மல் இருப்பதாகவும், கொரோனா சோதனை செய்ய வேண்டும் என்று தெரிவித்து உள்ளார்.
ஆனால் அங்கிருந்த சுகாதாரத்துறை உறுப்பினர்கள், அவரிடம் எந்தவித சோதனைகளையும் மேற்கொள்ளாமல்  வீட்டிலேயே தனிமையாக இருங்கள் என்று கூறி திரும்பி அனுப்பி விட்டதாக வேதனை தெரிவித்து உள்ளார்.
“நான் ஐந்து குடும்ப உறுப்பினர்களுடன் வசிக்கிறேன், ஒரு வாரமாக தனக்கு காய்ச்சல், இருமல் போன்ற அறிகுறிகள் இருந்தால், வீட்டு உரிமையாளர் என்னை உடனே கொரோனா பரிசோதனை செய்ய வலியுறுத்தினார். நானும் குடும்ப உறுப்பினர் மற்றும் அக்கம்பக்கத்தாரின் நன்மைக்காக, சோதனை மையம் சென்றால், அவர்கள் சோதனை ஏதும் நடத்தாமலே, வீட்டிலேயே தனிமைப் படுத்திக் கொள்ளுங்கள் என்று திரும்பி அனுப்பி விட்டார்கள், பின்னர் அருகில்உள்ள மெடிக்கல் கடையில் தேவையான மருந்து எடுத்ததாக கூறினார்.
இதுபோல தண்டையார்பேட்டையைச் சேர்ந்த நபர் ஒருவரும் தனது சோகக்கதையை தெரிவித்து உள்ளார்.  தனக்கு காய்ச்சல் கடுமையாக இருந்ததாகவும், முதுகுவலியுடன் தும்மல் மற்றும் இருமல் இருந்ததால், அந்த பகுதியில் உள்ள கார்ப்பரேஷன் தொற்று மருத்துவமனைக்கு கடந்த வாரம் புதன்கிழமை காலை  11:30 மணிக்குச் சென்றேன். ஆனால், காலை 10 மணிக்கு முன்னதாக கோவிட் -19 சோதனை முடிந்துவிட்டது என்றும், மறுநாள் திரும்பி வரும்படி என்னை அனுப்பி விட்டார். நான் மீண்டும், வியாழக்கிழமை, அங்கு சென்று கொரோனா சோதனை செய்ய  டோக்கன் பெற நீண்ட வரிசையில் காத்திருந்தபின், என்னை பரிசோதனை ஏதும் செய்யாமலேயே,  அங்குள்ள ஊழியர்கள், எனக்கு கொரோனா தொற்று தொடர்பான எந்தவொரு அறிகுறிகளும் இல்லை, தொடர்ந்து காய்ச்சல் இருந்தால் மட்டுமே இங்கு வந்தால் போதுமென்று அனுப்பி விட்டதாகவும் குற்றம் சாட்டி உள்ளர்.
ஏற்கனவே தனது வீட்டில் வயதான அம்மா இருப்பதால், நான் கொரோனா சோதனை செய்து கொள்வது நல்லது என்று சென்றால், அவர்கள் சோதனை செய்ய மறுக்கிறார்கள் என்று புலம்பி உள்ளார்.
இவர்கள் மட்டுமின்றி, கொரோனா தீவிரமடைந்துள்ள பகுதிகளில் ஒன்றான புளியந்தோப்பு குடிசைப் பகுதிகளைச் சேர்ந்தவர்களும், கொரோனா சோதனை செய்ய மறுப்பதாக குற்றம் சாட்டுகின்றனர்.

அந்தப்பகுதியைச் சேர்ந்த ஒருவர்,  “தனக்கு இருமல் மற்றும் தொண்டை வலி இருந்தது, ஆனால் அப்போது காய்ச்சல் இல்லை.  இருந்தாலும் கொரோனா சோதனை செய்துகொள்வது நல்லது என்று, கடந்த வாரம் புளியந்தோப்பு கொரோனா சோதனை மையத்துக்கு சென்றதாகவும், ஆனால்,  காய்ச்சல் வந்தால்  திரும்பி வாருங்கள் என்று  கூறி தன்னை சோதனை மையத்தின் ஊழியர்கள் திருப்பி அனுப்பி விட்டதாக தெரிவித்து உள்ளார்.
உண்மையான நிலவரம் இப்படி இருக்க, சென்னை மாநகராட்சி சுகாதாரத்துறையினரும், மாநில சுகாதாரத்துறை அமைச்சரும், கொரோனா சோதனைகள் அதிக அளவில் நடத்தப்படுவதால்தான், பாதிப்பு விவரம் அதிகரித்து வருகிறது என்று தெரிவித்து வருகின்றனர்.
அதுபோல வீடு வீடாக சென்று கொரோனா சோதனைகள் நடத்தப்படுவதாகவும் மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். ஆனால், கொரோனா பாதிப்பு தீவிரமடைந்து வரும் ராயபுரம் மற்றும், திரு.வி.நகர் பகுதி மக்களோ, எங்கள் பகுதிக்குள் யாருமே சோதனை செய்ய வரவில்லை என்று குற்றம் சாட்டுகிறார்கள்.
மேலும், பல கொரோனா சோதனை மையங்கள், காலை 10 மணியுடன் சோதனைகளை முடித்து விடுவதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். ஆனால், மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகளோ, பிற்பகல் 2 மணி வரை கொரோனா சோதனை மேற்கொள்ளப்படுகிறது என்று கூறி வருகிறார்கள்.
கொரோனா விவகாரத்தில் ஆரம்பம் முதலே தமிழகஅரசு தடுமாறி வருகிறது. தடுப்பு நடவடிக்கைகளை  சரியான முறையில்  அமல்படுத்துவதில் காட்டிய மெத்தனம் தற்போது கொரோனா பரவல் தீவிரமானதற்கு அடித்தளமாக அமைந்துள்ளது.
சென்னையில், கொரோனா பரவல் தொற்று தொடங்கியது முதலே, மக்கள்வீட்டை விட்டு வெளியே செல்வது,  மற்றும் சந்தைகளை மூடுவது போன்ற விவகாரத்தில்   சரியான தடுப்பு நடவடிக்கை எடுக்காத காரணத்தால், தற்போது தொற்று பரவல் எல்லை மீறிப் போய்க் கொண்டிருக்கிறது.
இந்த விவகாரம் சென்னையில் மட்டுமல்ல… தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் இதே நிலைதான் நீடிக்கிறது. பல மாவட்ட ஆட்சியர்களை, கொரோனா பாதிப்பு, இறப்பு விவரங்களை வெளியிடுவதே இல்லை என்று கூறப்படுகிறது.
கொரோனா இல்லாத மாவட்டமாக கோவையை அறிவித்த அமைச்சர் வேலுமணியின் சொந்த மாவட்டத்திலேயே, கொரோனா நோயாளிகள் இரவோடு இரவே அழைத்துச் செல்லப்படுவதும், இதுகுறித்து அதிகாரிகள் யாரும் வெளியே பேசக்கூடாது என்று மிரட்டல் விடுத்துள்ளதாகவும்  செய்திகள் பரவி வருகின்றன.

எடப்பாடி  அரசின் நிர்வாகத் திறமையின்மை காரணமாகவே கொரோனா தொற்று  வேகமாக பரவி வருவதாகவும்,  கொரோனா பரவல் தொற்றின் வீரியத்தை தடுக்க சரியானதிட்டமிடுதல், அரசு மற்றும் அதிகாரிகள் இடையே ஒருங்கிணைப்பு   இல்லாத காரணத்தால், கொரோனாவின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும், கொரோனா விவகாரத்தில் ஆரம்பம் முதலே தமிழக அரசு தவறான தகவல்களை வெளியிட்டு தில்லுமுல்லு செய்து வருவதாகவும்  எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன.