சென்னை:

ன்று அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் போராட்டம் கடற்கரையில் நடைபெறுகிறது. இதற்காக ஆயிரக்கணக்கான அரசு ஊழியர்கள் கடற்கரை பகுதியை முற்றுகையிட்டு உள்ளனர்.

சம்பள உயர்வு குறித்து போராட்டத்திற்கு வந்துள்ள ஆயிரக்கணக்கான அரசு ஊழியர்கள்,  போராட்டத்தில்,  தமிழர்களின் வாழ்வாதார பிரச்சினைகளான விவசாயம், ஹைட்ரோ கார்பன், மீத்தேன், நீட் தேர்வு குறித்து தங்களது ஆதரவு குறித்து பேசுவார்களா என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

கடற்கரை பகுதி பாதுகாக்கப்பட்ட பகுதி, போராட்டங்களுக்கு அனுமதி கிடையாது என்று டிராபிக் ராமசாமி தொடர்ந்த வழக்கில் நேற்றுதான் தமிழக அரசு கோர்ட்டில் கூறியது.

ஆனால், இன்று அரசு ஊழியர்களின் போராட்டத்துக்கு அனுமதி கொடுத்தது எப்படி? என்று அரசியல் கட்சியினர் கேள்வி எழுப்பி உள்ளனர்.

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான, ‘ஜாக்டோ – ஜியோ’வின் பேரணிக்கு  மற்றும் இன்று கடற்கரை சாலையில் எழிலகம் அருகே நடைபெற உள்ளது.

இதற்காக வெளி மாவட்டங்களில் இருந்து பஸ், ரெயில், வேன், கார்களில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கூட்டம் கூட்டமாக சென்னை நோக்கி வந்தவண்ணம் உள்ளனர்.

ஏற்கனவே சுமார் 10ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் கடற்கரையை முற்றுகையிட்டுள்ள நிலையில், சென்னையில் உள்ள அரசு ஊழியர்கள் இனிமேல்தான் கடற்கரைக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் காரணமாக கடற்கரை முழுவதும் ஏராளமான  போலீசாரும் குவிக்கப்பட்டுள்ளனர்.

தடை விதித்துள்ள போலீசார், 15 நிபந்தனைகளுடன், ஆர்ப்பாட்டம் நடத்த மட்டும் அனுமதி அளித்துள்ளனர்.

ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்துசெய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டுவர வேண்டும் என்று அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் இன்று  கடற்கரை பகுதியில் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்கள்.

தமிழகத்தில் 8-வது ஊதியக்குழுவை அமல்படுத்த வேண்டும். அதுவரை இடைக்கால நிவாரணமாக 20 சதவீதம் வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் 73 சங்கங்கள் இணைந்த ஜாக்டோ – ஜியோ கூட்டமைப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளது.

இதே கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று சென்னை மன்றோ சிலையிலிருந்து கோட்டை நோக்கி பேரணி நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்டது.

அரசு ஊழியர்கள் கோட்டை நோக்கி பேரணி செல்ல தமிழக காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. இதை அடுத்து சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை முன் ஆர்ப்பாட்டம் மட்டும் நடத்த ஜாக்டோ – ஜியோவுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அமைதியாக ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும் அந்த இடத்தில் வாகனங்களை நிறுத்தக்கூடாது. போக்குவரத்துக்கு இடையூறு இன்றியும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்காத வகையிலும் ஆர்ப்பாட்டம் நடத்தலாம். அனுமதிக்கப்பட்ட இடத்தை தவிர, வேறு எங்கும் கூடக்கூடாது மீறினால், சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்பது உள்ளிட்ட, 15 நிபந்தனைகள் விதிக்கப்பட்டு உள்ளன.

இதனிடையே இந்த போராட்டத்தில் கலந்துகொள்ள மாவட்டங்களில் இருந்து பஸ், வேன்களில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் வருவதற்கு அனுமதி மறுக்கப்படுவதமாகவும்,. அவர்களை போலீசார் மிரட்டி திருப்பி அனுப்புவதாகவும் அரசு ஊழியர்கள் ஆவேசமாக தெரிவித்தனர்.

எங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவது குறித்து தமிழக அரசு அழைத்து பேசவேண்டும். பேசவில்லை என்றால் ஏற்கனவே திட்டமிட்டபடி 22ம்தேதி ஒரு நாள் வேலைநிறுத்தம் நடைபெறும்.

அதன் பிறகும் கோரிக்கைகள் புறந்தள்ளும் பட்சத்தில் 26 மற்றும் 27ம் தேதிகளில் மாவட்ட அளவிலானவேலைநிறுத்த மாநாடுகளை நடத்த உள்ளோம்.

இறுதியாக செப்டம்பர் 7ஆம்தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் தொடங்குவது என்று திட்டமிட்டுள்ளோம் என்று அரசு ஊழியர்கள் சங்கங்கள் அறிவித்து உள்ளது.

கடற்கரை பகுதியில் அரசு ஊழியர்கள் ஆயிரக்கணக்கில் திரண்டு வருவதால், கடற்கரை  பகுதி பரபரப்பாக காணப்படுகிறது.

ஏற்ககனவே ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது இதுபோன்ற ஒரு கூட்டம் கூடியது. அதைத் தொடர்ந்து கடற்கரை பகுதியில் போராட்டம் நடத்த அரசு அனுமதி மறுத்து வந்த நிலையில்,

தற்போது அரசு ஊழியர்களின் போராட்டத்துக்கு நிபந்தனைகளுடன் அரசு அனுமதி அளித்திருப்பது, அரசு ஊழியர்களின் போராட்டத்தை கண்டு அரசு பயந்துள்ளதையே காட்டுவதாக வலைதளங்களில் விவாதிக்கப்பட்டு வருகிறது.

எல்லாம் சரி… தங்களது கோரிக்கையான  ஊதிய கோரிக்கை குறித்து போராட்டம் நடத்தும் அரசு ஊழியர்கள் சங்கத்தின்,

தமிழ்நாட்டு மாணவர்களின் மருத்துவக் கல்வியை கேள்விக்குறியாக்கும் நீட் தேர்வு குறித்தோ, விவசாயிகள் பிரச்சினை குறித்தோ, தமிழ்நாட்டின் டெல்டா பகுதியை சீரழித்து வரும் மீத்தேன், ஹைட்ரோகார்பன் திட்டங்கள் குறித்து இன்றைய போராட்டத்தின்போது அரசு ஊழியர்கள் சங்கத்தினர் பேசுவார்களா என கேள்வி எழுப்பி உள்ளனர் சமூக ஆர்வலர்கள்….