சென்னை:

மாநகராட்சி, நகராட்சி எல்லைக்குள் உள்ள தேசிய, மாநில சாலைகளை உள்ளாட்சி சாலைகளாக மாற்ற தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள டாஸ்மாக் மதுபான கடைகளை மூட உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வகையில் தமிழகத்தில் 60 சதவீத கடைகள் மூடப்பட்டன. இதற்கு பதிலாக புதிய கடைகளை திறக்க தமிழக அரசு முயற்சி செய்து வருகிறது.


ஆனால் ஆங்காங்கே மக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால் அந்த மதுபான கடைகளை திறப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் நகர எல்லைக்குள் உள்ள மாநில, தேசிய நெடுஞ்சாலைகளை மாநகராட்சி, நகராட்சி சாலைகளாக மாற்றி தீர்மானம் நிறைவேற்றி அரசுக்கு அனுப்புமாறு நகராட்சி நிர்வாக ஆணையர் அனைத்து மாநகராட்சி, நகராட்சி ஆணையர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

தற்போது தமிழக முழுவதும் உள்ள உள்ளாட்சி அமைப்புகளில் கவுன்சில் இல்லை. அதனால் சிறப்பு அதிகாரிகளாக உள்ள மாநகராட்சி ஆணையர், நகராட்சி ஆணையர்கள் இதற்கான தீர்மானத்தை நிறைவேற்றி அரசுக்கு அனுப்பவுள்ளனர். வரும் 25ம் தேதிக்குள் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது. பேரிடர் காலத்தில் சீரமைப்பு பணிகளை விரைந்து மேற்கொள்வதற்கு ஏதுவாக இந்த மாற்றம் செய்யப்படுவதாக அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், ஏற்கனவே மாநகராட்சி, நகராட்சி எல்லைக்குள் செயல்பட்ட டாஸ்மாக் மதுபான கடைகள் தங்கு தடையின்றி செயல்பட ஏதுவாகவே இந்த திட்டம் கொண்டு வரப்படுகிறது என்று மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.