டெல்லி: பிரபல  ‘யூ டியூபர்’ மாரிதாஸ் மீதான வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்ததை எதிர்த்து தமிழகஅரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனுத்தாக்கல் செய்துள்ளது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், தமிழகஅரசின் மனுவுக்கு  மாரிதாஸ் பதில் அளிக்க  உத்தரவிட்டு உள்ளது.

திமுக அரசுக்கு எதிராக சமூக ஊடகங்களில் பல்வேறு கருத்துக்களையும், குற்றச்சாட்டுக்களையும் பிரபல பத்திரிகையாளரும், யூடிபருமான மாரிதொடர் தொடர்ந்து விமர்சித்து வருகிறார். இதனால், அவர்மீது தமிழகஅரசு பல்வேறு வழக்குகள் போட்டு அவரை முடக்க முயற்சித்து வருகிறது. ஏற்கனவே மறைந்த முப்படை தளபதி மறைவு தொடர்பாக, தமிழகஅரசு, முதல்வர் மு.க.ஸ்டாலின்மீது கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.

இதுகுறித்து தி.மு.க.வைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் மதுரை சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் மாரிதாஸ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ஆனால், நீதிமன்றம் தமிழகஅரசின் நடவடிக்கையை கடுமையாக விமர்சித்ததுடன், மாரிதாஸ் மீது வழக்கு பதிந்தது செல்லாது எனக்கூறி, அவர் மீதான வழக்கை ரத்துசெய்து கடந்த ஆண்டு டிசம்பர் 21-ந்தேதி உத்தரவிட்டது.

இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி, தமிழக அரசின் சார்பில் உச்சநீதிமன்றத்தில்  மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு உச்சநீதிமன்ற  நீதிபதிகள் எம்.ஆர். ஷா, சி.டி. ரவிக்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. விசாரணையின்போது, தமிழக அரசின் சார்பில் மூத்த வக்கீல் சஞ்சய் ஹெக்டே ஆஜராகி, இந்த வழக்கில்  சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவு ஏற்றுக்கொள்ளும்படி இல்லை என வாதிட்டார். வாதத்தை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், தமிழக அரசின் மேல்முறையீடு மனு தொடர்பாக பதில் அளிக்க மாரிதாசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஜனவரி 9-ந் தேதிக்கு தள்ளிவைத்தனர்.