சென்னை,
தமிழக மீனவர் சங்க பிரதிநிதிகள் டில்லி சென்றனர். நாளை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜை சந்தித்து பேச ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து தாக்கப்படுவதும், அவர்களது படகுகள் சேதப்படுத்தப்படுவது மற்றும் கைது செய்யப்படுவதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதுகுறித்து பலமுறை பேச்சுவார்த்தை நடைபெற்றும் எந்தவித முடிவும் எடுக்கப்படாத நிலையில், கடந்த 6ந்தேதி ராமேஸ்வரம் தங்கச்சி மடத்தை சேர்ந்த மீனவ இளைஞர் பிரிட்ஜோ இலங்கை கடற்படையின் துப்பாக்கி குண்டுபட்டு மரணமடைந்தார்.
அதைத்தொடர்ந்து மீனவர்கள் பிரிட்ஜோவிடன் உடலை வாங்க மறுத்தும், மீனவர்கள் பிரச்சி னைக்கு நிரந்தர தீர்வு காண வலியுறுத்தியும் போராட்டம் நடத்தினர். அதையடுத்து, மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீத்தாராமன், பொன்ராதாகிருஷ்ணன் ஆகியோர் பேச்சு வார்த்தை நடத்தி போராட்டத்தை கைவிட செய்தனர். மேலும் இலங்கை சிறையில் இருந்த தமிழக மீனவர்கள் 85 பேரும் விடுதலையாகினர்.
அதைத்தொடர்ந்து மத்திய அமைச்சர் சுஷ்மாவை சந்தித்து பேச ராமேஸ்வரம் பகுதி மீனவ சங்க பிரதிநிதிகளுக்கு நாளை நேரம் ஒதுக்கப்பட்டது. அதன் காரணமாக மீனவ சங்க பிரதிநிதிகள் இன்று டில்லி புறப்பட்டு சென்றனர்.