டில்லி,

பாராளுமன்ற கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில், இன்று மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.

நாடாளுமன்றத்தில் உள்ள நூலக கட்டிடத்தில்  இன்று  காலை கூட்டம் தொடங்கியது. இதில், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி, வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் முக்கிய துறை அமைச்சர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த அமைச்சரவை  கூட்டத்தில் ஜிஎஸ்டி மசோதா மற்றும் துணை மசோதாக்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

வரும் ஜூலை 1 ம் தேதி முதல் நாடு முழுவதும் ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி அமல்படுத்தப்பட உள்ளதாக மத்திய அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது.

இதற்கிடையில் கடந்த வாரம் நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில்  மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கான ஜிஎஸ்டி மசோதாக்களுக்கு  ஒப்புதல் அளிக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து இன்று மத்திய அமைச்சரவை கூடியது. இதில் ஜிஎஸ்டி குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில்  2 முக்கிய மசோதாக்கள் மற்றும் 4 துணை மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த மசோதாக்கள் ஒரு வாரத்திற்கு பாராளுமன்றத்தில்  வைக்கப்பட்டு ஒப்புதல் பெறப்படும் என் தெரிவிக்கபடும் என தெரிகிறது.