டில்லி:
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி, நாடாளுமன்ற வளாகம் முன்பு போராட்டம் நடத்த தமிழக விவசாயிகள் டில்லிக்கு புறப்பட்டு சென்றனர்.
வரும் திங்கட்கிழமை (26ந்தேதி) நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம் செய்கின்றனர்.
உச்சநீதி மன்ற உத்தரவின்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க விதிக்கப்பட்டிருந்த கெடு வரும் 30ந்தேதி யுடன் முடிவடைய உள்ள நிலையில், மத்தியஅரசு அதற்கான நடவடிக்கை எடுக்காமல், கர்நாடக மாநில சட்ட மன்ற தேர்தலை கருத்தில் கொண்டு காலம் தாழ்த்தி வருகிறது.
இந்நிலையில், உச்சநீதி மன்ற உத்தரவுபடி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என தமிழக அரசு மற்றும், எதிர்க்கட்சியினர், விவசாயிகள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர்.
அதிமுக உள்பட தமிழக எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தை முடக்கி வருகின்றனர். இந்நிலையில், நாடாளுமன்றம் முன்பு போராட்டம் நடத்த தமிழக விவசாயிகள் முடிவு செய்து டில்லி புறப்பட்டு சென்றனர்.
தமிழக விவசாயிகள் சங்க தலைவர், பி.ஆர்.பாண்டியன் தலைமையில் 100 விவசாயிகள் டில்லிக்கு ரெயில் மூலம் பயணம் மேற்கொண்டுள்ளனர்.
டில்லியியில் நாடாளுமன்றம் முன்பு நாளை மறுதினம் (திங்கட்கிழமை) காவிரி மேலாண்மை அமைக்க வலியுறுத்தி போராட்டம் நடத்தவுள்ளனர்.