சென்னை:
ஜெயலலிதா மறைவை அடுத்து முதல்வராக பதவி ஏற்றுள்ளார் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம். இவர் முதல்வராக பதவி வகிப்பது இது மூன்றாவது முறையாகும்.
ஓ.பி. எஸ்ஸின் வாழ்க்கை, ஏற்ற இறக்கம் கொண்டது என்றாலும், அபாரமான திருப்புமுனைகளைக் கொண்டது.
ஓ.பன்னீர்செல்வம் 1951ம் ஆண்டு ஜனவரி 14ம் தேதி தேனி மாவட்டம் பெரியகுளத்தில் பிறந்தார். இவரது தந்தை ஓட்டக்காரத்தேவர். அம்மா பழனியம்மாள். இவருக்கு நான்கு சகோதரர்கள், நான்கு சகோதரிகள்.
தந்தை ஓட்டக்காரத்தேவருக்கு வட்டிக்கு பணம் கொடுப்பது தான் தொழில். ஓ.பன்னீர்செல்வத்திற்கு அவரது அப்பா தனது குல தெய்வமான பேச்சியம்மன் பெயரை நினைவில் கொண்டு ‘பேச்சிமுத்து’ என பெயரிட்டார். பிறகு பன்னீர்செல்வம் என பெயர் மாற்றப்பட்டது.
பள்ளிப்படிப்பை பெரியகுளத்தில் முடித்த பன்னீர் செல்வம். பின்னர், உத்தமபாளையம் ஹாஜி கருத்த ராவுத்தர் கல்லூரியில் பி.ஏ வரலாறு படித்தார்.
பன்னீர்செல்வத்தின் மனைவி பெயர் விஜயலட்சுமி. இவர்களுக்கு கவிதாபானு என்ற மகளும் ரவீந்திரநாத் குமார், ஜெயபிரதீப் என்று இரு மகன்களும் உள்ளனர்.
முதலில் பெரியகுளம் மார்க்கெட்டில் வட்டிக்கு கொடுத்து வாங்கிய அவரது குடும்பம், அடுத்து லாரிகளுக்கு ஃபைனான்ஸ் கொடுக்கும் தொழிலிலும் இறங்கியது. அதோடு மேலும் பால் பண்ணை நடத்திய பன்னீர் செல்வம், தனது நண்பருடன் சேர்ந்து பெரியகுளத்தில் டீக்கடை துவங்கினார்.
இந்தக்கடையே ஓ.பி.எஸ்ஸூக்கு முக்கிய வாழ்வாதாரமாக இருந்தது. அதிமுகவில் தீவிர பற்று கொண்டிருந்த ஓ.பி.எஸ்., அவ்வப்போது கட்சிக்கூட்டங்களுக்கு சென்று வந்துகொண்டிருந்தார்.
1987ல் எம்ஜிஆர் இறந்தபிறகு, ஜெயலலிதா, ஜானகி என அதிமுக இரண்டானது. ஜானகி அணியில் முக்கிய பிரமுகராக இருந்த கம்பம் செல்வேந்திரனின் ஆதரவாளராக இருந்தார் ஓ.பி.எஸ். இதையடுத்து பெரியகுளம் ஜானகி அணிக்கு ஓபிஎஸ் நகர செயலாளரானார். ஜெயலலிதாவுக்கு பிற்காலத்தில் மிக பணிவு காட்டிய ஓ.பி.எஸ்., அந்த காலகட்டத்தில் ஜெ.வுக்கு எதிராக அரிசயல் செய்தார்.
1989ல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் சிவாஜி கட்சியான தமிழக முன்னேற்ற முன்னணி சார்பில் போட்டியிட்ட வேட்பாளருக்கு ஆதரவாக வேலை பார்த்தார். ஜெ. – ஜா . அணிகள் இணைந்ததும் இவரும் இணைந்தார்.
1991 சட்டமன்ற தேர்தலில் ஜெ. தலைமையில் ஒருங்கிணைந்த அதிமுக வெற்றி பெற்றது. ஒருங்கிணைந்தது. அப்போது ஓ.பி.எஸ்,, பெரியகுளம் நகர கூட்டுறவு வங்கியின் இயக்குநரானார். அங்கு தான் முதன்முதலில் அதிகாரத்தை தொட்டு பார்த்தார் பன்னீர் செல்வம். 1996ல் நடந்த சட்டசபைத் தேர்தலில் திமுக பெரும் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. அக்காலகட்டத்தில் பெரியகுளம் அதிமுக நகர செயலாளராக இருந்த ஓபிஎஸ்சுக்கு பெரியகுளம் நகர்மன்றத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட சீட் கிடைத்தது. தேர்தலில் போட்டியிட்டு வென்றார்.
இவர் பெரியகுளம் நகர்மன்றத் தலைவராக இருந்தபோது, தமிழக முதல்வராக இருந்த கருணாநிதி ஒருங்கிணைந்த மதுரை மாவட்டத்தை பிரித்து தேனியை தலைநகராக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கினார். தேனிக்குப் பதில் பெரியகுளத்தை தலைநகராக அறிவிக்கும்படி ஓபிஎஸ் போராட்டங்கள் நடத்தினார்.
1999ல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஜெயலலிதாவின் அரசியல் வாரிசாக அப்போது அறியப்பட்ட டிடிவி தினகரன் பெரியகுளம் தொகுதியில் போட்டியிட்டார். தேனியில் தேர்தல் அலுவலகம் வைத்திருந்த டிடிவி தினகரன், எம்.பியான பிறகு ஆண்டுக்கு ஒரு தொகுதியில் குடியிருப்பது என தீர்மானித்தார். இதன்படி, 2000ம் ஆண்டில் பெரியகுளத்தில் உள்ள ஓபிஎஸ்சின் தம்பி ஓ.ராஜாவுக்கு சொந்தமான வீட்டில் குடியேறினார். இதுவே ஓபிஎஸ்சின் வளர்ச்சிக்கு துணையாக அமைந்தது. இந்த நெருக்கமே, 2001ம் ஆண்டு தமிழக சட்டசபைத் தேர்தலில் பெரியகுளம் தொகுதியில் ஓபிஎஸ் போட்டியிட வாய்ப்பு கிடைக்க காரணமாக அமைந்தது.
2001 ஆம் ஆண்டு தமிழக சட்டசபைத் தேர்தலில் பெரியகுளம் தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏவாக சட்டசபைக்குள் நுழைந்தார் ஓ.பன்னீர் செல்வம். வென்ற. முதன்முறையிலேயே அமைச்சரானார். வருவாய்த்துறை அமைச்சராக 2001ம் ஆண்டு மே 19 முதல் 2002 ஆம் ஆண்டு செப்டம்பர் 1ம் தேதி வரை பதவி வகித்தார்.
அமைச்சராக இருந்த ஓ.பி.எஸ், தனது அதீத பணிவால் சசிகலா குடும்பத்தினரை கவர்ந்தார். 2006ம் ஆண்டு தேர்தலில் தேனி மாவட்டம் பெரியகுளம் தொகுதியில் போட்டியிட்டு 2 ஆவது முறையாக எம்.எல்.ஏ ஆனார். தமிழக சட்டமன்ற எதிர்கட்சித் தலைவராகவும் எதிர்கட்சி துணைத்தலைவராகவும் பணியாற்றினார்.
2011ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் போடிநாயக்கனூர் தொகுதி எம்.எல்.ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டார். நிதி அமைச்சர், பொதுப்பணித்துறை அமைச்சர், அவை முன்னவர் என்று மே 16ம் தேதி 2011 முதல் 28, செப்டம்பர் 2014 வரை பணியாற்றினார்.
2001ம் ஆண்டு டான்சி வழக்கில் ஜெயலலிதா பதவி இழந்த போது முதல்வர் நாற்காலியில் ஓ.பி.எஸ். அமரவைக்கப்பட்டார். ஜெயலலிதா விடுதலை ஆன பின் 2002ம் ஆண்டு மார்ச் 1ம் தேதி முதல்வர் பதவியில் இருந்து விலகினார்.
2014ம் ஆண்டு செப்டம்பர் 27ம் தேதி வருமானத்தை மீறி சொத்துக் குவித்த ஊழல் வழக்கில் பெங்களுரு சிறப்பு நீதிமன்றம் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறை தண்டனையும் 100 கோடி ரூபாய் அபராதமும் விதித்தவுடன் மீண்டும் அவரது முதல்வர் பதவி பறிபோனது. அப்போது மீண்டும் முதல்வரானவர் பன்னீர்செல்வம்.
தற்போது 3வது முறையாக முதல்வராகியுள்ளார்.
இதுதான், டீ கடையில் இருந்து, முதல்வர் பதவி வரையிலான ஓ.பி.எஸ்ஸின் ஆச்சரியப்படவைக்கும் பயணம்.