சென்னை:
109 கோடி ரூபாய் மதிப்பில் 370 புதிய அரசு பேருந்து சேவைகளை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
சென்னை தலைமை செயலக வளாகத்தில் இன்று நடைபெற்ற போக்குவரத்து துறை சார்பான நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ரூ.109 கோடி மதிப்பில் 370 புதிய அரசு பேருந்துகளை கொடி அசைத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், போக்குவரத்து துறை அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த 370 பேருந்துகளில் கோயம்புத்தூர் கோட்டத்துக்கு 104 பேருந்துகளும், அரசு விரைவு போக்குவரத்து கழகத்திற்கு 65 பேருந்துகளும், சேலம் கோட்டத்திற்கு 57 பேருந்துகளும், கும்பகோணம் கோட்டத்திற்கு 41 பேருந்துகளும், மாநகர போக்குவரத்துக் கழகத்திற்கு 30 பேருந்துகளும், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் விழுப்புரம் கோட்டத்துக்கு 27 பேருந்துகளும், திருநெல்வேலி கோட்டத்திற்கு 26 பேருந்துகளும், மதுரை கோட்டத்திற்கு 20 பேருந்துகளும் ஒதுக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து அறிவித்துள்ள தமிழக அரசு, கடந்த இரண்டரை ஆண்டுகளில் பல்வேறு காலகட்டங் களில் 1,314 கோடி ரூபாய் செலவில் 4,381 பேருந்துகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன என்றும், தற்போது மேலும் இன்று 370 பேருந்துகளை தொடங்கி வைக்கப்பட்டு உள்ளதாகவும், இதுவரை 4,751 புதிய பேருந்துகள் 1,423 கோடி ரூபாய் செலவில் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு இயக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.