சென்னை: அக்டோபர் 11 முதல் 13 வரை நடைபெறவுள்ள பிரதமர் நரேந்திர மோடி – சீன அதிபர் ஷி ஜின்பிங் சந்திப்பை ஒட்டி, பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வுசெய்ய மாமல்லபுரம் செல்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.

மாமல்லபுரத்திலுள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் நடைபெறும் இந்த சந்திப்பில், முக்கிய பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு, வர்த்தகம் தொடர்பான பல ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன. மேலும், அங்குள்ள புராதன சின்னங்களையும் பார்வையிடுகிறார் சீன அதிபர்.

இரு தலைவர்கள் சந்திப்பு நிகழ்வதையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சீன அதிகாரிகள் குழு, தமிழக அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் குழுவினர் மாமல்லபுரத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வுசெய்தனர்.

இந்நிலையில் இந்த ஏற்பாடுகள் குறித்து தானே நேரில் ஆய்வுசெய்ய மாமல்லபுரம் செல்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் உயர் அதிகாரிகளுடன் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

மேலும், மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் விஜய்கோகலே மற்றும் பிரதமர் அலுவலக உயரதிகாரிகள் உள்ளிட்ட 10 பேர் கொண்ட குழுவினரும் மாமல்லபுரம் வந்து ஏற்பாடுகளை செய்துவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சீன அதிபர் பார்வையிடவுள்ள புகழ்பெற்ற புராதன சின்னமான கடற்கரை கோயிலில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. மேலும், மாமல்லபுரம் முழுவதுமே உச்சகட்ட பாதுகாப்பு வளையத்தில் வந்துள்ளது.