சென்னை:

பிரதமர் மோடி, சீன அதிபர் ஜின்பிங் ஆகியோர் மாமல்லபுரத்தில் சந்திக்க உள்ள நிலையில், அவர்களை வரவேற்று பேனர் வைக்க அனுமதிக்க கோரி சென்னை உயர்நீதி மன்றத்தில் தமிழகஅரசு மனு தாக்கல் செய்துள்ளது.

சென்னை விமான நிலையம் முதல் மாமல்லபுரம் வரை 14 இடங்களில் பேனர் வைக்க அனுமதிக்க வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இம்மனு அக்.,3ம் தேதி விசாரணைக்கு வர உள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சீன அதிபர் ஜீ ஜின்பிங் ஆகியோர் வரும் 11-ஆம் தேதி முதல் 13-ஆம் தேதி வரை மாமல்லபுரத்தில் சந்திக்க உள்ளனர்.  இதை முன்னிட்டு மத்திய வெளியுறவுத் துறை செயலாளர் விஜய்கோகலே மற்றும் பிரதமர் அலுவலக உயர் அதிகாரிகள், உள்ளிட்ட10 பேர் கொண்ட குழுவினர் மாமல்லபுரம் வந்துள்ளனர். அவர்கள் கடற்கரை கோயில், ஐந்து ரதம், அர்ச்சுனன் தபசு உள்ளிட்ட இடங்களை பார்வையிட்டனர் . பிரதமர் மோடி, சீன அதிபர் இருவரும் கண்டுகளிக்கும் இடங்கள், மேடை அமைய இருக்கும் இடங்களையும் ஆய்வு செய்தனர்.

இந்த நிலையில் தமிழகத்துக்கு வருகை தரும் பிரதமர் மோடி, சீன அதிபர் ஜீ ஜின்பிங் ஆகியோரை வரவேற்று பேனர் வைக்க அனுமதி கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.

மத்திய வெளியுறவுத்துறை மற்றும் தமிழக அரசின் செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை இயக்குனர் சார்பில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில்,  சென்னை விமான நிலையம் முதல் மாமல்லபுரம் வரை 14 இடங்களில் பேனர் வைக்க தமிழக அரசு அனுமதி கோரியுள்ளது.

இந்த மனுவை வரும் அக்டோபர் 3ம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.  தமிழக அரசின் மனு தொடர்பாக டிராபிக் ராமசாமி உள்ளிட்டோருக்கும் நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.