சென்னை: தமிழ்நாட்டின் முதல்வராக கடந்த மே மாதம் 7ந்தேதி பொறுப்பேற்ற பிறகு, முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை முதன்முறையாக திருவாரூர் செல்கிறார். அங்கு திருக்குவளையில் உள்ள கருணாநிதி இல்லத்துக்கு சென்று அஞ்சலி செலுத்துகிறார்.
ஏற்கனவே கடந்த (ஜூன்) மாதம் 12-ந்தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின், தனது சொந்த மாவட்டமான திருவாரூர் செல்வதாக இருந்தது. ஆனால், அருகே உள்ள மாவட்டங்களுக்கு சென்றவர், திருவாரூர் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து நாளை திருவாரூர் செல்கிறார்.
தமிழ்நாட்டில் ஏப்ரல் 6ந்தேதி சட்டப்பேரவை தேர்தல் நடத்தப்பட்டு மே2ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. தேர்தலில் ஸ்டாலின் தலைமையிலான திமுக கூட்டணி அமோக வெற்றிபெற்று ஆட்சியை கைப்பற்றியது. இதையடுத்து மாநில முதல்வராக மு.க.ஸ்டாலின் மே 7ந்தேதி பதவி ஏற்றார். இந்த காலக்கட்டத்தில் கொரோனா தொற்று தீவிரமாக இருந்ததால், அதை கட்டுப்படுத்துவதற்கான பணிகளை மேற்கொண்டு வந்தார். தற்போது தொற்று பரவல் கட்டுக்குள் வந்து, தளர்வுகளும் அறிவிக்கப்பட்டு உள்ளது. மக்களும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர்.
இதையடுத்து, நாளை திருவாரூர் மாவட்டம் பயணமாகிறார். தமிழ்நாட்டின் முதல்வரான பிறகு, அவரது தந்தையும், மறைந்த முன்னாள் முதல்வரும், முன்னாள் திமுக தலைவருமான கருணாநிதி அவர்கள் பிறந்த ஊரான திருவாரூருக்கு முதல்முறையாக ஸ்டாலின் செல்ல இருப்பது அம்மாவட்ட மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திருவாரூர் செல்லும் முதல்வர், அங்கு மறைந்த கருணாநிதி இல்லத்தில் மரியாதை செலுத்துகிறார். அதனைத் தொடர்ந்து, அருகே உள்ள காட்டூரில் உள்ள கருணாநிதியின் தாயார் அஞ்சுகம் அம்மாள் நினைவிடத்திற்கு சென்றும் மரியாதை செலுத்துகிறார். பின்னர்,பயணத்தை முடித்து விட்டு நாளை மறுநாள் சென்னை திரும்ப முதல்வர் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.