சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, மாவட்டம் தோறும் பதற்றமான வாக்குச்சாவடிகள் கணக்கெடுப்பு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
தமிழக சட்டமன்ற தேர்தல் மே மாதம் நடைபெற உள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, கூடுதலாக ஆயிரம் வாக்குச்சாவடிகள் அமைக்கும் பணி அமைக்கப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது. இதையொட்டி ஆயிரம் வாக்காளர்களுக்கு மேல் உள்ள வாக்குச்சாவடிகளை கண்டறிந்து அந்த வாக்குச்சாவடிகளை இரண்டாக பிரித்து கூடுதல் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளது.
இதையொட்டி, மாவட்டம்தோறும் , வாக்குச்சாவடி அமைக்கும் பணிகள், பதற்றமான வாக்குச்சாவடிகள் குறித்து கணக்கெடுப்பும் பணி நடைபெற்று வருகிறது. இதற்கான கணக்கெடுக்கும் பணியில் வருவாய் துறையினர் மற்றும் போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் கடந்த சட்டமன்றம், நாடாளுமன்றத் தேர்தல்களில் போது ஏற்பட்ட மோதல் சம்பவங்களின் அடிப்படையில் பதற்றமான வாக்குச்சாவடிகள் கணக்கெடுப்பு பணி நடக்கிறது. இதற்காக இந்த வாக்குச்சாவடிகளில் கூடுதல் போலீசார் நியமிக்கப்பட உள்ளனர்.