சென்னை:
தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் வாக்குப்பதிவு நடந்துகொண்டிருக்கும் மையத்தை முற்றுகையிட்ட இருபது பேர் கைது செய்யப்பட்டனர்.
தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர், துணைத்தலைவர், செயலாளர்,பொருளாளர் என 27 பதவிகளுக்கான தேர்தல் இன்று நடைபெறுகிறது
இந்தத் தேர்தலில், விஷால்,ஆர்.ராதாகிருஷ்ணன்,கேயார் ஆகியோர் தலைமையில் மூன்று அணிகள் போட்டியிடுகின்றன.
’நம்ம அணி’ என்ற பெயரில் போட்டியிடும் விஷால் அணியில், நடிகர் பிரகாஷ்ராஜ், இயக்குநர்கள் பாண்டிராஜ், மிஷ்கின், ஞானவேல்ராஜ் ஆகியோர் கடந்த சில நாட்களாக தீவிர பிரச்சாரம் செய்தனர்.
இந்த நிலையில், “தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் தேர்தலில் ஆந்திராவை சேர்ந்த நடிகர் விஷால், கர்நாடகாவை சேர்ந்த நடிகர் பிரகாஷ் ராஜ்
கேரளாவை சேர்ந்த கௌதம் வாசுதேவ் மேனன் ஆகியோர் போட்டியிடுவதை கண்டித்து , வாக்குப்பதிவு மையத்தை முற்றுகையிடுவோம்” என்று
தமிழர்முன்னேற்றப்படை என்ற அமைப்பின் தலைவர் கி.வீரலட்சுமி என்பவர் தனது முகநூல் பக்கத்தில் இரு நாட்களுக்கு முன் பதிவிட்டிருந்தார்.
மேலும் அவர், “ஆந்திர மாநிலம் பல ஆயிரம் தமிழர்களை சிறையில் அடைத்து சித்ரவதை செய்து கொண்டிருக்கிறது. 20 தமிழர்களை காக்கை குருவி போல் சுட்டு படுகொலை செய்தது. பாலாற்று குறுக்கே தடுப்பனைகள் கட்டி தமிழகத்தை பாலைவனம் ஆக்கியது.
காவிரி நீரை அளிக்காமல், தமிழகத்தை பாலைவனம் ஆக்கத்து துடிக்கிறது கர்நாடகா. நீதி கேட்ட தமிழர்கள் மீது வன்முறையை ஏவியவர்கள் கன்னடர்கள்.
இன்று எங்கள் விவசாயிகள் பல நூறு பேர் இறந்ததற்கு இந்த கன்னடர்கள் தான் காரணம்.
கேரளா மாநிலமோ முல்லை பெரியாறு அணையை சில அடி மட்டும் உயர்த்தி தமிழகத்திற்கு தண்ணீர் தர மனம் இல்லாதவர்கள். சிறுவாணி மற்றும் பவாணி ஆறுகளின் குறுக்கே அணைகளை கட்டி தமிழகத்தின் கொங்கு மண்டலத்தை பாலைவனமாக ஆக்க துடிக்கும் மாநிலம் கேரளா மாநிலம்.
இந்த நிலையில் ஆந்திராவைச் சேர்ந்த விஷால், கர்நாடகாவைச் சேர்ந்த பிரகாஷராஜ், கேரளாவைச் சேர்ந்த கவுதம் வாசுதேவ் மேனன் ஆகியோர் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் போட்டியிடுவது தவறு. இதை எதிர்த்தே முற்றுகை போராட்டம் நடத்த இருக்கிறோம்” என்று கி.வீரலட்சுமி அறிவித்திருந்தார்.
அதன்படி இன்று முற்பகல், சங்கத் தேர்தல் நடக்கும் சென்னை அண்ணா நகர் கந்தசாமி கல்லூரி வாயிலில் முற்றுகை போராட்டத்தை ஆரம்பித்தனர்.
விஷால், பிரகாஷ்ராஜ், கவுதம் மேனன் ஆகியோருக்கு எதிராக முழக்கங்களை எழுப்பியபடி, கல்லூரிக்குள் நுழைய முற்பட்டனர்.
அவர்களை போலீஸார் தடுத்தனர். பிறகு கி.வீரலட்சுமி உட்பட இருபது பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.