சென்னை: திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, தமிழ்நாட்டில் அதிகரித்துள்ள  கடன் சுமை குறித்த விமர்சித்த காங்கிரஸ் பிரமுகர்  பிரவீன் சக்கரவர்த்தியை, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்கள் கடுமையாக சாடி உள்ளனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி இடம்பெற்றுள்ள நிலையில், திமுகவை கடுமையாக விமர்சித்து வரும் தவெக தலைவர் விஜய்யை, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்திக்கு நெருங்கியவரான,  காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தரவுகள் ஆய்வு பிரிவின் தலைவரான பிரவீன் சக்கரவர்த்தி,  சமீபத்திரல்  சந்தித்து பேசியிருந்தார். இதனால் திமுக- காங்கிரஸ் கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில், இந்தியாவிலேயே அதிக கடன் வாங்கும் மாநிலம் தமிழ்நாடு என திமுக அரசை விமர்சித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டார் பிரவீன் சக்கரவர்த்தி. இது மிகப் பெரிய விவாதப் பொருளாகி உள்ளது. இதனால் கூட்டணிக்குள் பிரச்சினை எழலாம் என்பதால், பல காங்கிரஸ் தலைவர்கள் பிரவீன் சக்ரவர்த்தி கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

ஏற்கனவே காங்கிரஸ் கட்சியை  தவெக கூட்டணிக்கு இழுக்க மறைமுக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் பரவி வரும் நிலையில், கரூர் விஜய் கூட்ட நெரிசல் சம்பவத்தின்போது, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, விஜயுடன் நேரடியாக பேசி, உங்களுடன் நாங்கள் இருப்போம்  என ஆறுதல் கூறியதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த பரபரப்புக்கு இடையில்,  திருப்பூர் மகளிர்  மாநாட்டை ஒட்டி நடைபெற்ற ஏற்பாட்டு பணிகளை பார்வையிட்ட  அக்கட்சியின் மகளிர் அணிச் செயலாளர் கனிமொழி  செய்தியாளர்களிடம் பேசும்போது,   ‘எந்த வளர்ச்சியும் இல்லாத மாநிலமாகவும், கடன் மாநிலமாகவும் கடந்த ஆட்சியாளர்கள் விட்டுச் சென்றார்கள். ஆனால், முதலமைச்சர் ஸ்டாலினின் அயராத உழைப்பால் இன்று இந்தியாவில் முதல் மாநிலமாக தமிழ்நாடு வளர்ந்துள்ளது’ என்று கூறியதுடன்,  இபிஎஸ், அன்புமணிகளுக்கு பதில் தெரிவித்திருந்தார்.

இதற்கு பதில் அளிக்கும் விதமாக   காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தரவுகள் ஆய்வு பிரிவின் தலைவரான பிரவீன் சக்கரவர்த்தி, கனிமொழியின் பேட்டியை சுட்டிக்காட்டி,  உத்தரப் பிரதேசத்தை விட தமிழ்நாட்டின் கடன் அதிகமாக உள்ளது  என தரவு மேம்புடன்  பதிவிட்டார். அதில்,   ‘இந்தியாவில் தமிழ்நாட்டில்தான் அதிக அளவில் நிலுவைக்கடன் உள்ளது. 2010-ல், உத்தரப் பிரதேசத்தின் கடன் தொகை தமிழ்நாட்டின் கடனை விட இரண்டு மடங்குக்கும் அதிகமாக இருந்தது. இப்போது, தமிழ்நாட்டின் கடன் தொகை உத்தரப் பிரதேசத்தை விட அதிகமாக உள்ளது.

வட்டிச் சுமையின் சதவீதத்தில், பஞ்சாப் மற்றும் ஹரியானாவுக்குப் பிறகு தமிழ்நாடு மூன்றாவது இடத்தில் உள்ளது. தமிழ்நாட்டின் கடன்/மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம், இரண்டுமே கோவிட்-க்கு முந்தைய நிலைகளை விட இப்போது அதிகமாக உள்ளது. தமிழ்நாட்டின் கடன் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த பதிவு இரு கட்சிகளுக்கு இடையே மேலும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில், பிரவீன் சக்ரவர்த்தி கருத்துக்கு காங்கிரஸ் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.   காங்கிரஸ் கட்சியின் கரூர் மக்களவைத் தொகுதி எம்.பி. ஜோதிமணி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதேசத்தை தமிழ்நாட்டுடன் ஒப்பிட்டு பிரவீன் சக்கரவர்த்தி கருத்து தெரிவிப்பது சரியானது அல்ல என்றும் ஜோதிமணி எம்.பி. தெரிவித்துள்ளார். மேலும்,இ “ தமிழ்நாடு அரசு வாங்கிய கடன்கள், கல்வி- சுகாதாரம்- தொழில்துறை முதலீடு- சமூக நீதி- நகர்ப்புற கட்டமைப்பு உள்ளிட்டவைகளுக்குதான் பயன்படுத்தப்பட்டுள்ளன. புல்டோசர் ராஜ்ஜியமான உ.பி.யுடன் தமிழ்நாட்டை எப்படி ஒப்பிட முடியும்? தமிழ்நாடு மிகவும் முன்னேறி உள்ளது; தமிழ்நாட்டை நாமே ஏமாற்றக் கூடாது எனவும் ஜோதிமணி எம்.பி. கூறியுள்ளார்.

அதுபோல,  “உடல் எடையை வைத்து ஒருவரின் உடற்தகுதியை எப்படி தீர்மானிக்க முடியும்?”  என கேள்வி எழுப்பி உள்ள  காங்கிரஸ் எம்.பி. சசிகாந்த் செந்தில்,

கடன் அளவை மட்டுமே வைத்து ஒரு மாநிலத்தை மதிப்பிடுவது என்பது  வெறும் உடல் எடையை வைத்து ஒருவரின் உடற்தகுதியை தீர்மானிப்பது போன்றதாகும் என சாடியுள்ளார்.

காங்கிரஸ் பிரமுகரான மோகன் குமாரமங்கலம், மாநில அரசின் கடன் தொகையை மட்டுமே சுட்டிக்காட்டுவது சரி அல்ல. பாஜகவின் செய்தித் தொடர்பாளர்களைப் போல ஒரே விஷயத்தை திரும்ப திரும்ப சொல்லக் கூடாது என கூறியுள்ளார்.

[youtube-feed feed=1]