தமிழக முதல்வரும் தி.மு.க. தலைவருமான மு.க. ஸ்டாலின் நாளை தனது 72வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் வீடியோ பதிவில், தனது பிறந்தநாளை ஆடம்பரமாக கொண்டாட விரும்பவில்லை என்றும் தமிழ்நாடு தற்போது எதிர்கொண்டுள்ள மொழிப் போரையும், தொகுதி மறுசீரமைப்பு பிரச்சனையையும் கழகத் தோழர்கள் வலிமையோடு எதிர்க்க உறுதி ஏற்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

அதில் அவர் கூறியுள்ளதாவது :

“தமிழ்நாடு உயிர் பிரச்சினையான மொழிப்போரையும் – தொகுதி மறுசீரமைப்பையும் எதிர்கொண்டுள்ளது”

“தொகுதி மறுசீரமைப்பு என்பது, நமது மாநிலத்தின் சுயமரியாதை, சமூகநீதி, சமூக நலத்திட்டங்களை பெரிதும் பாதிக்கும்”

“இதனுடைய உண்மையான நோக்கத்தை நீங்கள், மக்களிடம் கொண்டு சேர்க்கக் கேட்டுக் கொள்கிறேன்”

“ஒவ்வொருவரும் மாநிலம் காக்க எழுந்து நிற்க வேண்டும்- இந்தியாவுக்கே வழிகாட்டியாக நாம் போராட்டத்தை தொடங்கினோம்”

“இப்போது கர்நாடகா, பஞ்சாப், தெலங்கானா போன்ற மாநிலங்களில் இருந்து நமக்கான ஆதரவுக் குரல் வந்துள்ளது”

“மத்திய அரசு, இந்தியை திணிக்கவில்லை என்று சொல்லிக்கொண்டே அனைத்து முன்னெடுப்புகளையும் எடுக்கிறது”

“மும்மொழிக் கொள்கையை ஏற்றுக் கொள்ளாததால், நமக்கான நிதியையும் இன்னும் தரவில்லை” என்று அந்த பதிவில் மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.