சென்னை: தமிழகத்தில் முதல்முறையாக சுற்றுலாத்துறை சார்பில் விருதுகளுக்கான அறிவிப்புகளை தமிழகஅரசு வெளியிட்டு உள்ளது. இதற்கு, இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம் என அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. அதன்படி சுற்றுலாத்துறையின், பல்வேறு பிரிவுகளின்கீழ் வழங்கப்பட இருக்கும் விருதுகளுக்கு இணையதளம் வழியாக ஆகஸ்ட் 26-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தெரிவித்து உள்ளது.
இதுகுறித்து தமிழக சுற்றுலாத் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், நாட்டின் சமூக-பொருளாதார வளர்ச்சியில் சுற்றுலா முக்கியப் பங்கு வகிக்கிறது. சுற்றுலாப் பயணிகள் பலதரப்பட்ட அனுபவங்களை பெறுவதற்கு பொழுதுபோக்கு, சாகச விளையாட்டு, நடனம், இசை, திருவிழாக்கள், உணவு வகைகள், கல்வி, ஆரோக்கியம் மற்றும் வணிகம் தொடர்பான செயல்பாடுகளில் ஈடுபடுகின்றனர். போக்குவரத்து, தகவல் தொடர்பு மற்றும் பொருளாதார முன்னேற்றம் ஆகியவற்றுடன் சுற்றுலாவின் தேவை கணிசமாக அதிகரித்துள்ளது.
சுற்றுலாவில் வெற்றியாளர்கள் பயண ஏற்பாட்டாளர்கள் மற்றும் புதிய உத்திகளை கையாள்பவர்களுக்கு தமிழக சுற்றுலாத் துறை முதல் முறையாக சுற்றுலா விருதுகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இவ்விருதுகள் ஆண்டுதோறும் உலக சுற்றுலா தின கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக செப்.27-ம் தேதி வழங்கப்படவுள்ளது. இவ்விருதுகள் சுற்றுலா தொழில் முனைவோரை ஊக்குவிக்கவும், மாநிலத்தில் பல்வேறு சுற்றுலா பங்குதாரர்களிடையே சுற்றுலாவை மேம்படுத்தவும் ஆரோக்கியமான போட்டியை ஊக்குவிக்க வழிவகுக்கும்.
இதன்படி, தமிழகத்துக்கான சிறந்த சுற்றுலா ஏற்பாட்டாளர், சிறந்த உள்நாட்டு சுற்றுலா ஏற்பாட்டாளர், சிறந்த பயண பங்குதாரர், சிறந்த விமான பங்குதாரர், சிறந்த தங்குமிடம், சிறந்த உணவகம், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் சிறந்த உணவகம், தங்குமிடம் மற்றும் படகு இல்லம், சுற்றுலா ஊக்குவிப்புக்கான சிறந்த மாவட்டம், சுத்தமான சுற்றுலாத்தலம், பல்வேறு சுற்றுலாப் பிரிவுகளின் சிறந்த ஏற்பாட்டாளர், சிறந்த சாகச மற்றும் தங்கும் முகாம்கள் சுற்றுலா ஏற்பாட்டாளர், சிறந்த எம்ஐசிஇ சுற்றுலா அமைப்பாளர், சமூக ஊடகங்களில் அதிகளவில் தாக்கத்தை ஏற்படுத்துபவர், சிறந்த சுற்றுலா வழிகாட்டி, தமிழகத்துக்கான சிறந்த சுற்றுலா விளம்பரம், சுற்றுலாவை பிரபலப்படுத்தும் வகையில் சிறப்பாக விளம்பரப்படுத்துதல், சுற்றுலா மற்றும் விருந்தோம்பலில் சிறந்த கல்வி நிறுவனம் ஆகிய பிரிவுகளில் விருதுகள் வழங்கப்படும்.
விருதுகளுக்காக தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு சுற்றுலாத் துறையால் உலக சுற்றுலா தினத்தன்று விருதுகள் வழங்கப்படும். விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ‘www.tntourismawards.com’ என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து ஆகஸ்ட் 26-ம் தேதிக்குள் இணையவழியாக சமர்ப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.