நீலகிரி: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணையை ஆகஸ்டு 26ந்தேதிக்கு  நீலகிரி மாவட்ட நீதிமன்றம் ஒத்தி வைத்தது .

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான நீலகிரி மாவட்டம் கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் கொள்ளை முயற்சி நடந்தது. இதில், அந்த எஸ்டேடின் காவலாளி ஓம்பகதூர் கொல்லப்பட்டார். இந்தச் சம்பவம் தொடர்பாக நீலகிரி மாவட்ட போலீஸார் விசாரணை நடத்தி 10 பேரை கைது செய்தனர். தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர், திமுக அரசு மீண்டும் கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணையை மேற்கொண்டு வருகிறது.

கோவை மேற்கு மண்டல ஐஜி ஆர்.சுதாகரின் நேரடி மேற்பார்வையில், நீலகிரி மாவட்ட போலீஸார் அடங்கிய 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.  தொழிலதிபர் செந்தில்குமார், அவரது தந்தை தொழிலதிபர் ஆறுமுகசாமி, கோவையைச் சேர்ந்த அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ ஆறுக்குட்டி, புதுச்சேரி சொகுசு விடுதி உரிமையாளர் நவீன்பாலாஜி உள்ளிட்ட சிலரிடம் அடுத்தடுத்து விசாரணை நடத்தினர். . தனிப்படை போலீசார் இதுவரை 200க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இந்த வழக்கு இன்று ஊட்டி கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. விசாரணையின்போது, சயான், வாளையார் மனோஜ், ஜித்தின்ஜாய், சம்சீர் அலி ஆகியோர் ஆஜராகி இருந்தனர். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி,  கொடநாடு கொள்ளை வழக்கை அடுத்த மாதம் 26-ந் தேதிக்கு ஒத்திவைத்தார்.