வேளாண் தொழில்நுட்பம் முதல் நீர் மேலாண்மை வரையிலான பல்வேறு துறைகளில் நெதர்லாந்து அரசுக்கும் தமிழக அரசுக்கும் இடையே விரைவில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளதாக நெதர்லாந்து தூதர் மார்டன் வேன் டென் பெர்க் கூறியுள்ளார்.
உ.பி., கேரளா மற்றும் மகாராஷ்டிரா போன்ற பிற மாநிலங்களில் உள்ளதைப் போல, தமிழ்நாட்டிலும் ஒரு ‘சிறப்பு மையம்’ அமைக்க டச்சு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது என்றும் இது இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் என்றும் பெர்க் கூறினார்.
இதுவரை திட்டம் சார்ந்த ஒத்துழைப்பு அடிப்படையிலேயே இருதரப்பு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் தற்போது, நீர், விவசாயம் மற்றும் ஆற்றல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பு அடிப்படையில் விரிவான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட உள்ளது.
முதல்வர் ஸ்டாலின் மற்றும் துறைசார் செயலாளர்களுடன் பல்வேறு திட்டங்கள் குறித்து பெர்க் மற்றும் நெதர்லாந்தின் கெளரவ தூதர் கோபால் சீனிவாசன் ஆகியோர் விவாதித்தனர்.
தமிழக அரசுக்கும் தூதரகத்துக்கும் இடையே கூட்டு வழிநடத்தல் குழு அல்லது கண்காணிப்பு குழுவை அமைத்து, ஒத்துழைப்பின் செயல்முறையை விரைவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் “புரிந்துணர்வு ஒப்பந்தம் அதன் இறுதி கட்டத்தில் உள்ளது” என்றும் பெர்க் கூறினார்.
தோட்டக்கலை, மலர் சாகுபடி, பால்வளத் துறை, உணவு பதப்படுத்துதல் அல்லது உணவு வீணாவதைக் குறைப்பது உள்ளிட்ட இரு நாடுகளுக்கும் பயனுள்ள துறைகளில் எங்கள் பங்களிப்பு குறித்த விவரங்களைப் பகிர்ந்து கொண்டோம். மேலும், சிறப்பு மையம் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
குளிர்பதன சேமிப்பு மற்றும் விநியோக சங்கிலி மேம்பாடு, நிலையான விவசாய செயல்முறைகள் அல்லது புதிய வகையான பயிர் மேம்பாடு போன்ற சிறப்புப் பிரச்சினைகளிலும் கவனம் செலுத்தப்படலாம் என்று நெதர்லாந்து தூதர் கூறினார். அறிவைப் பகிர்ந்து கொள்வதும், புதிய புதுமையான தொழில் நுட்பங்களை விவசாயிகளுக்குக் கற்றுக் கொடுப்பதும் இந்த மையத்தின் நோக்கமாகும் என்றார்.
விவசாயிகளின் விழிப்புணர்வை அதிகரிக்க உற்பத்தி, உரமிடுதல், விதைகள் மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் ஆகியவற்றில் உள்ள தொழில்நுட்பங்கள் இதில் அடங்கும். இவை அனைத்தும், நீர் மற்றும் உரப் பயன்பாட்டைக் குறைத்து, அதன் மூலம் மேலும் நிலையான உற்பத்தி வழியை வழங்கும்.
பால் பொருள் நுகர்வோருக்கு அது எங்கு தயாரிக்கப்பட்டது அதன் விநியோக சங்கிலி உள்ளிட்ட பயன்பாடுகளை நுகர்வோருக்கு தெரிவிக்க தேவையான செயலி உள்ளிட்ட தொழில்நுட்பம் அடங்கும்.
குறிப்பாக பால் பொருட்கள் மீதுள்ள பார்கோடுகளை ஸ்கேன் செய்வதன் மூலம், அது எங்கிருந்து வருகிறது அதன் தன்மை என்ன என்பதைக் கண்டறியலாம் என்று பெர்க் தெரிவித்துள்ளார்.