சென்னை

ப்ரல் மாதத்தில் தமிழக அரசு அறிமுகம் செய்துள்ள ஆன்லைன் மீன் வர்த்தகம் ரூ. 1 கோடியைத் தாண்டி உள்ளது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கால் தமிழகத்தில் மீன் வர்த்தகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டது.   இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிப்பு அடைந்ததுடன் மீன் கிடைக்காத நிலையும் ஏற்பட்டது.   எனவே மீன் வர்த்தகத்தை மேம்படுத்த அரசு முடிவு செய்தது.   அதையொட்டி ஆன்லைன் மீன் வர்த்தகத்தை தமிழக அரசு மீன்வளத்துறை தொடங்கியது.

மீன்வளத்துறை ’மீன்கள்’ என்னும் பெயரில் ஒரு செயலியைத் தொடங்கி வீடுகளுக்கு நேரடியாக மீன் விநியோகம் செய்யத் திட்டமிட்டது.  அதன்படி கடந்த ஏப்ரல் மாதம் இந்த செயலி தொடங்கப்பட்டது.  இந்த செயலியை உடனடியாக 10000 பேர் தரவிறக்கம் செய்து மீன்களை வாங்கத் தொடங்கினார்கள்.  இந்த செயலி மூலம் 40க்கும் அதிகமான வகை மீன்கள் வர்த்தகம் செய்யப்படுகின்றன.

மீன்களை வீடுகளுக்கு அனுப்ப 4 கடைகள் திறக்கப்பட்டுள்ளன.  அவை அண்ணா நகர், தேனாம்பேட்டை, விருகம் பாக்கம் மற்றும் சாந்தோம் பகுதிகளில் அமைந்துள்ளன.  இந்த கடைகளுக்கு 5 கிமீ சுற்றளவில் உள்ள மக்கள் இந்த கடைகளில் ஆர்டர் அளிக்கலாம். அவர்களுக்கு ஒரு மணி நேரத்துக்குள் விநியோகம் செய்யப்படுகிறது.

ஏப்ரல் மாதத்தில் இருந்து அண்ணா நகர் கடையில் 7700 கிலோ மீன்களும், தேனாம்பேட்டையில் 6000 கிலோ, விருகம் பாக்கம் மற்றும் சாந்தோம் கிளைகளில் தலா 3000 கிலோ விற்பனை செய்யப்பட்டுள்ளன.  தற்போது கடல்மீன்கள் காசிமேடு மீன்பிடி துறைமுகம் மற்றும் ஆற்று மீன்கள் ஆழியாறு, அமராவதி மற்றும் பவானி சாகர் அணைகளில் கொள்முதல் செய்யப்படுகிறது.

மீன்கள் செயலி மூலம் இதுவரை 20 டன்கள் மீன் விற்பனை செய்யப்பட்டு ரூ.1 கோடிக்கு மேல் வர்த்தகம் நடந்துள்ளது.   தற்போது வரை 13000க்கும் அதிகமானோர் மீன்களை வாங்கி வருகின்றனர்.  இந்த செயலியின் மூலம் மேலும் விற்பனையை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் வருடத்துக்கு 1000 டன் மீன் விற்க ஆலோசிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

தமிழக மீன்வளத்துறை மீன்கள் கொள்முதல் என ஒரு செயலியை டிசம்பருக்குள் அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது.   இதன் மூலம் மீனவர்கள் நேரடியாக தங்கள் மீன்களை மொத்த விலைக்கு விற்க முடியும்.  அவற்றைக் கொள்முதல் செய்ததும் உடனடியாக பணப்பட்டுவாடா செய்ய உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளார்.