சென்னை:
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் வரும் 27 மற்றும் 30ந்தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் முடிவடைந்து, வேட்புமனுத் தாக்கல் பரிசீலனையும் முடிவடைந்து உள்ளது. இன்று வேட்புமனு வாபஸ் பெறுவதற்கான நாள். இதைத்தொடர்ந்து இன்று மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாக உள்ளது.
இதற்கிடை யில், தேர்தல் நடைபெற உள்ள 3408 ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்களில் 486 பேர் போட்டி யின்றி தேர்வு செய்யப்பட்டு உள்ளதாக தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது.
திருச்சி மாவட்டத்தில் 3 ஆயிரத்து 408 ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர் பதவிகளில் 486 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். திருச்சியில் கிராம ஊராட்சி தலைவர் மற்றும் 6 வார்டு உறுப்பினர்களாக முற்றிலும் பெண்களே போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
அதேபோல், 404 ஊராட்சி மன்ற தலைவர் பதவியில் 4 கிராம ஊராட்சித்தலைவர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். இதில் லால்குடி ஒன்றியம் கொப்பாவளி கிராம ஊராட்சி தலைவராக மதிமுகவைச் சேர்ந்த செல்வராணி தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும் ஊராட்சியில் உள்ள 6 வார்டு உறுப்பினர்களாக பெண்களே போட்டியின்றி தேர்வாகியுள்ளனர்.
உள்ளாட்சித்தேர்தலில் போட்டியிட விரும்பாதவர்கள் தங்கள் மனுக்களை திரும்ப பெற இன்று கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, இன்றே இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் எனத் தெரிகிறது.