சென்னை: விடுதிகளில் வழங்கப்படும் உணவு மற்றும் சுகாதார சீர்கேடுகளை கண்டித்து கடந்த மாதம் நந்தனம் உடற்கல்வி மாணாக்கர்கள் போராட்டம் நடத்திய நிலையில், தற்போது, செங்கல்பட்டு மாவட்டம் து, மேலக்கோட்டையூர் உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழக மாணவ மாணவிகள் தமிழகஅரசு மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்து உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்நாட்டில் நடப்பாண்டு, கல்வி நிலையங்களில் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகை (ஸ்காலர்ஷிப்) பணமும் இதுவரை வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் அடுத்த மேலக்கோட்டையூரில் அமைந்துள்ளது, தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகம். இங்கு ஆயிரக்கணக்கில் மாணவ, மாணவிகள் படித்து வருகின்றன. இங்குள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் விடுதிகளில் சுமார் 800-க்கும் மேற்பட்டோர் தங்கிப் பயில்கின்றனர். பெண்கள் விடுதியில் ஏறத்தாழ 300-க்கும் மேற்பட்டோர் தங்கி உள்ளனர். இந்த விடுதியில் தங்கிப் பயிலும் மாணவிகள் பல்கலைக்கழக நிர்வாகத்தின் மீது சரமாரியாக குற்றச்சாட்டுகளை கூறி இன்று அதிகாலை முதல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தங்களுக்கு வழங்கப்படும் உணவுகள் முற்றிலும் தரமற்றதாக உள்ளதாக மாணவிகள் கூறுகின்றனர். விடுதியில் உள்ள குளியலறை மற்றும் கழிப்பறைகளில் சுகாதார செயல்பாடு நிலவுவதாகவும் குற்றம் சாட்டுகின்றனர். விடுதிக்கு சுண்ணாம்பு பூச வேண்டும் என்று கூறி, ஒவ்வொருவரிடமும் 1500 ரூபாய் வசூலித்த நிர்வாகம், அந்தப் பணத்தை என்ன செய்தது என்றே தெரியவில்லை என்பதும் இவர்கள் வைக்கும் குற்றச்சாட்டு. விடுதியில் சரியான குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாமலேயே பராமரிப்பு கட்டணம் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர்.
விடுதியில் வார்டனாக பணிபுரிந்து வரும் நபர் ஒருவர் மாணவிகளை தரக்குறைவாக பேசுவதாகவும் மாணவிகள் குமுறுகின்றனர். விடுதியில் நிலவும் சுகாதார சீர்கேட்டால், பல மாணவிகளுக்கு தோல் நோய் உள்ளிட்ட தொற்று நோய்கள் பரவி வருவதாகவும் வேதனைப்படுகின்றனர். இதுகுறித்து பலமுறை பலரிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறி, இன்று அதிகாலை முதல் மாணவிகள் பல்கலைக்கழக வளாகத்தைவிட்டு வெளியே வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சுமார் 2 மணி நேரம் நீடித்த இப்போராட்டத்திற்குப் பிறகு, சில பேராசிரியர்கள் கேட்டுக் கொண்டதால் பேச்சுவார்த்தைக்காக மாணவிகள் பல்கலைக்கழகத்திற்குள் சென்றனர். பல்கலைக்கழகத்தில், இதுபோன்ற குற்றச்சாட்டுகள் எழுவது அனைத்து தரப்பினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஏற்கனவே கடந்த மாதம் (ஜனவரி 24ந்தேதி சென்னை நந்தனம் செய்ய உடற்கல்வி கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தியது பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது. அவர்கள் உணவு மற்றும் சுகாதார சீர்கேடுடன், கல்லூரி முதல்வர்மீது பாலியல் அத்துமீறல் குற்றச்சாட்டையும் எழுப்பி உள்ளிருப்பு போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.