சென்னை:
புதிதாக வெளியிடப்படும் திரைப்படங்களை தியேட்டரில் கூடுதலாக ஒரு காட்சி திரையிட தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.

தமிழகத்தில் கரோனா வைரஸ் தொற்று மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், தியேட்டர்கள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட மக்கள் கூடும் இடங்களுக்கு மீண்டும் கட்டுப்பாடுகளை விதித்து தமிழக அரசு அண்மையில் உத்தரவு பிறப்பித்தது.

இதன்படி தியேட்டர்களில் 50% இருக்கைகளில் மட்டுமே பார்வையாளர்கள் அமர்ந்து படம் பார்க்க அனுமதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் தமிழக அரசு சார்பில் தற்போது புதிய தளர்வுகள் வெளியிடப்பட்டுள்ளன.

அதில், இந்த காலகட்டத்தில் வெளியிடப்படும் புதிய திரைப்படங்கள், முதல் ஏழு நாள்களுக்கு மட்டும், ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட காட்சிகளை விட கூடுதலாக ஒரு காட்சி, அரசு வெளியிடும் நிலையான வழிகாட்டு முறைகளை பின்பற்றியும், அனைத்து காட்சிகளிலும் 50 சதவீத இருக்கைகளை மட்டுமே பயன்படுத்தி திரையிட அனுமதிக்கப்படுகிறது.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.